வாக்காளர்களை அவமதித்துவிட்டது காங்கிரஸ்: பிரதமர் மோடி தாக்கு

மக்களவைத் தேர்தலில் பாஜக பெற்ற வெற்றி குறித்து கேள்வியெழுப்பி, வாக்காளர்களை காங்கிரஸ் கட்சி அவமதித்து விட்டது என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார். 
மாநிலங்களவையில் புதன்கிழமை  பேசும் பிரதமர் நரேந்திர மோடி.
மாநிலங்களவையில் புதன்கிழமை  பேசும் பிரதமர் நரேந்திர மோடி.


மக்களவைத் தேர்தலில் பாஜக பெற்ற வெற்றி குறித்து கேள்வியெழுப்பி, வாக்காளர்களை காங்கிரஸ் கட்சி அவமதித்து விட்டது என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார். 
குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு பதிலளித்து, மாநிலங்களவையில் புதன்கிழமை பேசியபோது இதுகுறித்து மோடி கூறியதாவது:
காங்கிரஸ் கட்சியால் தோல்வியை ஏற்க முடியாது; தோல்வியை ஜீரணிக்கவும் முடியாது. இது காங்கிரஸ் கட்சியிடம் உள்ள பிரச்னையாகும். இது ஜனநாயகத்தில் நல்ல அறிகுறி கிடையாது.
மக்களவைத் தேர்தலில் பாஜக மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ள நிலையில், தேர்தலில் பாஜக வென்றுள்ளது, ஆனால் நாடு தோல்வியடைந்து விட்டது, ஜனநாயகம் தோல்வியடைந்து விட்டது என்று காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். இது எனக்கு மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியது. இத்தகைய கருத்துகள், மிகவும் துரதிருஷ்டவசமானவை. வாக்காளர்களின் விருப்பம் குறித்து ஏன் காங்கிரஸ் தலைவர்கள் கேள்வியெழுப்புகிறார்கள். விவசாயிகள் ரூ.2,000க்கு விலை போய் விட்டதாகவும், ஊடகங்கள் துணையுடன் பாஜக வெற்றி பெற்றுள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர். இதன்மூலம் வாக்காளர்களையும், 15 கோடி விவசாயிகளையும் அக்கட்சியினர் அவமதித்துள்ளனர்.
காங்கிரஸும், இந்தியாவும் ஒன்றா?: காங்கிரஸ் கட்சியில் இருக்கும் நண்பர்களிடம் ஒன்று கேட்கிறேன். தேர்தலில் காங்கிரஸுக்கு வெற்றி கிடைக்கவில்லையெனில், இந்தியாவுக்கு வெற்றி கிடைக்காது என்று அர்த்தமா? இந்தியாவும், காங்கிரஸும் ஒன்றா? நிச்சயம், இந்தியாவும், காங்கிரஸும் ஒன்று கிடையாது. நமது ஜனநாயகத்துக்கும், தேர்தல் நடவடிக்கைகளுக்கும் மதிப்பு கொடுக்க வேண்டியது அவசியமாகும்.
 குறுகிய மனப்பான்மை மற்றும் நெறியற்ற சிந்தனைகள் இருப்பதால், மக்களவைத் தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை சிலரால் ஏற்க முடியவில்லை. அவர்கள்தான், தேர்தலில் பாஜக வெற்றி பெற்றுவிட்டது, ஆனால் நாடு தோல்வியடைந்து விட்டது எனத் தெரிவிக்கின்றனர். இதை விட நமது ஜனநாயகத்தை மிக மோசமாக அவமதிக்க முடியாது.
வாக்குப்பதிவு இயந்திரம் மீது குறை கூறுவதா?: மக்களவைத் தேர்தலில் 17 மாநிலங்களில் ஒரு தொகுதியில் கூட காங்கிரஸுக்கு வெற்றி கிடைக்கவில்லை. ஆதலால் தேர்தல் தோல்வியை ஒப்புக் கொள்ளவும், தன்னைத் தானே சுயபரிசோதனை செய்யவும் காங்கிரஸுக்கு இதுவே தகுந்த தருணம்.
இந்தியாவில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் நடைபெறும் தேர்தலை உலக நாடுகள் பலவும் பாராட்டியுள்ளன. ஆனால், நாடாளுமன்றத்தில் பேசிய சிலர், அதுகுறித்து கேள்வி எழுப்பியுள்ளனர். அவர்களுக்கு ஒன்று தெரிவித்துக் கொள்கிறேன். நாடாளுமன்றத்தில் முன்பு பாஜகவுக்கு 2 எம்.பி.க்கள் மட்டுமே இருந்தனர். அப்போது பாஜகவை சிலர் கேலி செய்தனர். ஆனால் பாஜக கடினமாக பணியாற்றியது. மக்களின் நம்பிக்கையை பெற்றது. அதேநேரத்தில் பாஜக, பிற கட்சிகள் மீது குற்றம்சாட்டியதோ அல்லது வாக்குப்பதிவு முறை மீது குற்றம்சாட்டியதோ கிடையாது. 
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் ஏராளமான தேர்தல்கள் நடத்தப்பட்டுள்ளன. இதனால் மாநிலங்களவையில் உள்ள கட்சிகளுக்கு, சில மாநிலங்களில் ஆட்சி செய்யும் வாய்ப்பும் கிடைத்துள்ளது. அப்படியிருக்கையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து ஏன் கேள்வியெழுப்பப்படுகிறது.
இதே மனோபாவத்தைதான், ஒரே தேசம் ஒரே தேர்தல் யோசனை குறித்த விவாதம் நடைபெறுகையிலும் நாங்கள் கண்டோம். இந்த யோசனை பிடிக்காமல் இருந்திருக்கலாம். இருப்பினும், இந்த யோசனை குறித்து தங்களது கருத்துகளை முன்வைக்க வேண்டியதும், விவாதத்தில் பங்கெடுக்க வேண்டியதும் முக்கியமாகும். புதிய இந்தியா தொடர்பான இந்த யோசனையை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது ஆச்சரியமாகவுள்ளது என்றார் மோடி.
ஜார்க்கண்ட்: கும்பல் தாக்குதலால் வேதனை
ஜார்க்கண்ட் மாநிலத்தில் நிகழ்ந்த கும்பல் தாக்குதல் சம்பவத்துக்கு பிரதமர் மோடி வேதனை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து,  மாநிலங்கள வையில் பேசியபோது அவர் கூறியது: ஜார்க்கண்டில் நடைபெற்ற கும்பல் தாக்குதல் சம்பவம் என்னை மிகவும் வேதனைக்கு உள்ளாக்கியது. பிறருக்கும் அது கவலையை ஏற்படுத்தியிருக்கும். அந்தத் தாக்குதலில் தொடர்புடையோர் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். அதேநேரத்தில், இந்த சம்பவத்துக்காக ஜார்க்கண்ட் மாநிலத்தையே ஒட்டுமொத்தமாக குற்றம்சாட்டுவது சரியில்லை. ஜார்க்கண்ட் மாநிலத்தை அவமதிக்க யாருக்கும் உரிமை கிடையாது என்றார் மோடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com