மத்திய அரசுத் துறைகளில் 6.84 லட்சம் காலிப் பணியிடங்கள்!

மத்திய அரசின் கீழுள்ள பல்வேறு துறைகளில் 6.84 லட்சத்துக்கும் அதிகமான பணியிடங்கள் காலியாக இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.


மத்திய அரசின் கீழுள்ள பல்வேறு துறைகளில் 6.84 லட்சத்துக்கும் அதிகமான பணியிடங்கள் காலியாக இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நாட்டில் 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையின்மை அதிகரித்துள்ளதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவித்துள்ள நிலையில், மத்திய அரசு இத்தகவலை வெளியிட்டுள்ளது.
மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய பணியாளர் நலத் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் எழுத்து மூலமாக அளித்துள்ள பதிலில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
மத்திய அரசின் பல்வேறு துறைகளில் மொத்தம் 38.02 லட்சம் பணியிடங்கள் உள்ளன. இவற்றில் கடந்த ஆண்டு மார்ச் 1-ஆம் தேதி வரை 31.18 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. 6.84 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன. பணிநிறைவு, இறப்பு, பதவிஉயர்வு உள்ளிட்டவை காரணமாகப் பணியிடங்கள் காலியாகின்றன.
பல்வேறு அமைச்சகங்களிலும், துறைகளிலும் நிலவும் காலிப் பணியிடங்களை சம்பந்தப்பட்ட தேர்வாணையங்கள் தேர்வுகள் மூலம் நிரப்பிவருகின்றன. 
பல்வேறு அமைச்சகங்களில் உள்ள 1.03 லட்சம் காலிப் பணியிடங்களை மத்திய பணியாளர் தேர்வு வாரியம் (எஸ்எஸ்சி) 2019 மற்றும் 2020-ஆம் ஆண்டுகளில் நிரப்ப உள்ளது. ரயில்வேயிலுள்ள 1.56 லட்சம் காலிப் பணியிடங்களை ரயில்வே வாரியம் 2 ஆண்டுகளில் நிரப்பவுள்ளது. 
அதிகாரிகள் பணிநீக்கம்: கடந்த 2 ஆண்டுகளில் மத்திய அரசுப் பணியாளர்களுக்கு எதிராக 43,946 ஊழல் புகார்கள் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்திடம் (சிவிசி) தெரிவிக்கப்பட்டன. அவற்றில் 41,755 புகார்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவிட்டன.
கடந்த 5 ஆண்டுகளில், ஊழல் குற்றஞ்சாட்டப்பட்ட 2 ஐஏஎஸ் அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்; 9 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஊழலில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட 23 ஐஏஎஸ் அதிகாரிகள், 4 ஐபிஎஸ் அதிகாரிகள் மீது விசாரணை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று ஜிதேந்திர சிங் குறிப்பிட்டிருந்தார்.
இரும்புத் தாதுக்குப் பஞ்சமில்லை: மக்களவையில் எழுப்பப்பட்ட மற்றொரு கேள்விக்கு எழுத்து மூலம் மத்திய சுரங்கத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி பதிலளித்ததாவது:
நாட்டின் தற்போதைய தேவையைப் பூர்த்தி செய்யும் அளவுக்கு இரும்புத் தாது கையிருப்பு உள்ளது. 20 சுரங்கங்களில் 583.057 மெட்ரிக் டன் அளவிலான இரும்புத் தாது உள்ளது. மேலும் 24 இரும்புத் தாது சுரங்கங்களை ஏலம் விட சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் தயாராகி வருகின்றன. 
கடந்த 2017-18 ஆம் நிதியாண்டில் 200.9 மெட்ரிக் டன் இரும்புத் தாது சுரங்கங்களில் இருந்து வெட்டியெடுக்கப்பட்டது. 2018-19 ஆம் நிதியாண்டில் 206.4 மெட்ரிக் டன் இரும்புத் தாது வெட்டியெடுக்கப்பட்டுள்ளது என்று பிரகலாத் ஜோஷி குறிப்பிட்டிருந்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com