தலைவர் பதவியிலிருந்து விலகும் முடிவில் உறுதி: கட்சி எம்.பி.க்களிடம் ராகுல் திட்டவட்டம்

காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலகும் முடிவிலிருந்து பின்வாங்கமாட்டேன் என்று கட்சி எம்.பி.க்களிடம் ராகுல் காந்தி திட்டவட்டமாக தெரிவித்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தலைவர் பதவியிலிருந்து விலகும் முடிவில் உறுதி: கட்சி எம்.பி.க்களிடம் ராகுல் திட்டவட்டம்

காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலகும் முடிவிலிருந்து பின்வாங்கமாட்டேன் என்று கட்சி எம்.பி.க்களிடம் ராகுல் காந்தி திட்டவட்டமாக தெரிவித்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மக்களவையில் காங்கிரஸ் கட்சி கடைப்பிடிக்க வேண்டிய வியூகம் குறித்து விவாதிப்பதற்காக அக்கட்சி எம்.பி.க்களின் கூட்டம் தில்லியில் புதன்கிழமை நடைபெற்றது. நாடாளுமன்ற காங்கிரஸ் குழு தலைவர் சோனியா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலகும் முடிவை கைவிட வேண்டும் என்று ராகுல் காந்தியிடம் எம்.பி.க்கள் கூட்டாக வலியுறுத்தினர். ஆனால், நான் காங்கிரஸ் தலைவர் இல்லை; எனது முடிவிலிருந்து நான் பின்வாங்கப் போவதில்லை என்று ராகுல் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டதாக கூறப்படுகிறது.
மேலும், காங்கிரஸுக்கு புதிய தலைவரை நியமிப்பதற்கான ஏற்பாடுகளை, கட்சியின் செயற்குழு விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்று ராகுல் வலியுறுத்தியதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
அண்மையில் நடைபெற்ற முடிந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 52 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. 18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஒரு தொகுதியில் கூட காங்கிரஸால் வெற்றிபெற முடியவில்லை.
80 தொகுதிகளைக் கொண்ட உத்தரப் பிரதேசத்தில், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி போட்டியிட்ட ரேபரேலி தொகுதியில் மட்டுமே அக்கட்சி வெற்றி பெற்றது. அமேதியில் போட்டியிட்ட ராகுல் காந்தி, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியிடம் தோல்வியடைந்தார். அவரது தோல்வி, காங்கிரஸ் கட்சியினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மக்களவைத் தேர்தல் தோல்வி குறித்து விவாதிப்பதற்காக, காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் தில்லியில் அண்மையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று கட்சியின் தலைவர் பதவியை ராஜிநாமா செய்வதாக ராகுல் காந்தி தெரிவித்தார். ஆனால், அவரது முடிவை காங்கிரஸ் செயற்குழு ஒருமனதாக நிராகரித்தது. கட்சித் தலைவர் பதவியில் ராகுல் தொடர வேண்டும்; கட்சியை அமைப்புரீதியாக மறுசீரமைப்பு செய்வதற்கு அவருக்கு முழு அதிகாரம் வழங்கப்படுகிறது என்று செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ராகுல் தனது முடிவை கைவிட வேண்டும் என்று பல்வேறு மூத்த தலைவர்களும் தொண்டர்களும் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகும் முடிவில் ராகுல் தொடர்ந்து உறுதியாக உள்ளார்.
அடுத்த தலைவராக தனது குடும்பத்தைச் சேர்ந்த யார் பெயரையும் பரிசீலிக்க வேண்டாம் என்று ராகுல் கூறிவிட்டதால், அப்பொறுப்புக்கு யார் நியமிக்கப்படுவார் என்பதில் தொடர்ந்து குழப்பம் நிலவி வருகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com