தண்ணீர் பிரச்னை: தமிழக எம்.பி.க்கள் யோசனை

தமிழகத்தில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாட்டு பிரச்னையை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் புதன்கிழமை எழுப்பிய தமிழக எம்.பி.க்கள், பிரச்னைக்கு தீர்வு காண பல்வேறு யோசனைகளையும் தெரிவித்தனர்.


தமிழகத்தில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாட்டு பிரச்னையை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் புதன்கிழமை எழுப்பிய தமிழக எம்.பி.க்கள், பிரச்னைக்கு தீர்வு காண பல்வேறு யோசனைகளையும் தெரிவித்தனர்.
டி.ஆர். பாலு (திமுக): தமிழகம் கடுமையான தண்ணீர் நெருக்கடியில் உள்ளது. எனவே, ரயில் டேங்கர்கள் மூலம் தண்ணீர் விநியோகம் செய்வது குறித்து மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 13 மாவட்ட கடலோரப் பகுதிகளில் 20 இடங்களில் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
பி.ரவீந்திரநாத் குமார்(அதிமுக ): தமிழகத்தின் தண்ணீர் பிரச்னைக்கு பிரதானக் காரணம் பருவமழை தவறியதாலும், நீர் ஆதாரங்கள் அழிந்ததாலும்தான். ஆனால், எதிர்க்கட்சிகள் மாநில அரசுக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றன. தண்ணீர் பிரச்னையைத் தீர்க்க மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இந்நடவடிக்கைகள் குறித்த பட்டியல் என்னிடம் உள்ளது. அதை நான்அவர்களுக்குத் தருகிறேன். எனக்குப் பேசுவதற்கு வாய்ப்பளித்தால், தமிழகத்தின் தண்ணீர் தொடர்புடைய பிரச்னைகளைத் தீர்க்க அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைப்பேன்.
மாநிலங்களவையில்... குடிநீர் விநியோகம் உள்பட தண்ணீர் நெருக்கடிகளின் சவால்கள் எனும் தலைப்பில் குறுகிய நேர விவாதம் மாநிலங்களவையில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் முன்வைத்த கோரிக்கைகள் விவரம் வருமாறு:
டி.கே. ரங்கராஜன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்): தமிழகம் முழுவதும் தண்ணீர் பிரச்னை உள்ளது. சென்னைதற்போது மிகவும் கடுமையான தண்ணீர்ப் பற்றாக்குறையைச் சந்தித்துள்ளது. இப்பிரச்னையைத் தீர்ப்பது குறித்து மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
டி.ராஜா (இந்திய கம்யூனிஸ்ட்): சென்னையில் மழைநீர் சேகரிப்புத் திட்டம், கடல்நீரைக் குடிநீராக மாற்றும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்ட போதிலும் தண்ணீர் பிரச்னை தொடர்கிறது. இச்சூழலில், மத்திய மாநில அரசுகள் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து யோசிக்க வேண்டும். 
ஆர். வைத்திலிங்கம் (அதிமுக): தண்ணீர் பற்றாக்குறையுள்ள தமிழகத்திற்கு ஒரே தீர்வு உபரி நீர்ப்படுகையைக் கொண்டுள்ள கோதாவரி நதியில் இருந்து காவிரிக்கு செல்லும் நீரை தமிழகத்திற்கு திருப்பிவிடுவதுதான்.
ஆர்.எஸ். பாரதி (திமுக): தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறைக்கு தென்னக நதிகள் இணைப்பு மூலமே தீர்வு கிடைக்கும். 
எஸ். முத்துக்கருப்பன் (அதிமுக): தமிழகத்தில் வறட்சியை அகற்றுவதற்காக மாநில முதல்வர் கோரியிருந்த ரூ.1,000 கோடி நிதியை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com