அமெரிக்க-சீன வர்த்தகப் போர் இந்தியாவுக்கு சாதகமானது: அரவிந்த் பனகாரியா

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையேயான வர்த்தகப் போர், அந்நாடுகளிலிருந்து வெளியேறும் பன்னாட்டு நிறுவனங்களை ஈர்க்க இந்தியாவுக்கு சாதகமான வாய்ப்பை உருவாக்கியுள்ளதாக நீதி
அமெரிக்க-சீன வர்த்தகப் போர் இந்தியாவுக்கு சாதகமானது: அரவிந்த் பனகாரியா


அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையேயான வர்த்தகப் போர், அந்நாடுகளிலிருந்து வெளியேறும் பன்னாட்டு நிறுவனங்களை ஈர்க்க இந்தியாவுக்கு சாதகமான வாய்ப்பை உருவாக்கியுள்ளதாக நீதி ஆயோக் அமைப்பின் முன்னாள் துணைத் தலைவரும், பொருளாதார நிபுணருமான அரவிந்த் பனகாரியா தெரிவித்துள்ளார்.
நீதி ஆயோக் அமைப்பின் முன்னாள் துணைத் தலைவரான அரவிந்த் பனகாரியா, தற்போது அமெரிக்காவிலுள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வருகிறார். நியூயார்க்கில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பனகாரியா பேசியதாவது:
இந்தியா விதித்து வரும் இறக்குமதி வரிகளைக் குறைக்க வேண்டுமென அமெரிக்கா தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறது. இந்தியா அதை ஏற்க மறுத்து வருகிறது. இதனால், இரு நாடுகளுக்குமிடையே வர்த்தகப் பிரச்னை எழுந்துள்ளது. இதைப் பேச்சுவார்த்தை மூலம் சரிசெய்வது அவசியமாகும். இரு நாடுகளும் பயன்பெறும் வகையில் இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும்.
வெளிநாட்டுப் பொருள்கள் இந்தியச் சந்தைகளில் விற்கப்படும் நடைமுறையை எளிமையாக்க அமெரிக்கா கோரி வருகிறது. இது இந்தியாவுக்கு மிகச் சிறந்த வாய்ப்பாகும். அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்பதன் மூலம், இந்தியப் பொருள்களை மேலும் அதிகமாக ஏற்றுமதி செய்யும் வாய்ப்பு உருவாகும்.
ஹார்லி டேவிட்சன் மோட்டார் சைக்கிள்களுக்கான இறக்குமதி வரியை இந்தியா குறைக்க வேண்டும். வரியைக் குறைப்பதால், என்ன நடந்துவிடப் போகிறது? சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகள் ஆகிவிட்டபோதிலும், இன்னமும் உள்நாட்டு உற்பத்தியாளர்களை இந்தியா பாதுகாத்து வருகிறது. 
இந்தியா விதித்துவரும் அதிகபட்ச வரியினால் யார் பயனடைகிறார்கள் என்பது தெரியவில்லை.
வரிகளை அதிகமாக விதித்து வருவாயைப் பெருக்குவதற்குப் பதிலாக, நாட்டின் ஏற்றுமதியை அதிகரித்து அதன் மூலம் அந்நியச் செலாவணி கையிருப்பை அதிகப்படுத்த இந்தியா முயற்சி செய்ய வேண்டும். 1990களில் இந்த நடைமுறையையே இந்தியா பின்பற்றியது. அமெரிக்காவின் கூட்டாளி நாடாக இந்தியா விளங்கிவருகிறது. இதனால், இரு நாடுகளுக்குமிடையே வர்த்தகப் போர் ஏற்பட வாய்ப்பு மிகவும் குறைவு. 
அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையேயான வர்த்தகப் போர், இந்தியாவுக்கு சாதகமான சூழலை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. வர்த்தகப் போர் காரணமாக சீனாவிலுள்ள பெருந்தொழில் நிறுவனங்களால், அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்ய இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், ஏராளமான பன்னாட்டு நிறுவனங்கள் சீனாவிலிருந்து வெளியேறத் தொடங்கியுள்ளன. 
மற்ற நாடுகளுக்கு இடம்பெயர அந்த நிறுவனங்கள் முயற்சித்து வருகின்றன. தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து, அந்நிறுவனங்களை இந்தியா ஈர்த்துக்கொள்ள வேண்டும் என்றார் பனகாரியா.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com