வெளிநாடுகளில் இந்தியர்களின் கருப்புப் பணம் ரூ.34 லட்சம் கோடி: நாடாளுமன்றத்தில் தகவல்

வெளிநாடுகளில் கடந்த 1980 முதல் 2010-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் இந்தியர்கள் பதுக்கி வைத்திருந்த கருப்புப் பணம்
வெளிநாடுகளில் இந்தியர்களின் கருப்புப் பணம் ரூ.34 லட்சம் கோடி: நாடாளுமன்றத்தில் தகவல்

வெளிநாடுகளில் கடந்த 1980 முதல் 2010-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் இந்தியர்கள் பதுக்கி வைத்திருந்த கருப்புப் பணம் 216 பில்லியன் டாலர் (ரூ.14 லட்சம் கோடி) முதல் 490 பில்லியன் டாலர் (ரூ.34 லட்சம் கோடி) வரை இருக்கலாம் என்று நாடாளுமன்றத்தில் கடந்த மார்ச் மாதம் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தேசிய பொருளாதார ஆராய்ச்சி கவுன்சில் (என்சிஏஇஆர்), தேசிய நிதி மேலாண்மை நிறுவனம் (என்ஐஎஃப்எம்), தேசிய பொது நிதி மற்றம் கொள்கை நிறுவனம் (என்ஐபிஎஃப்பி) ஆகிய மூன்று அமைப்புகள் சேர்ந்து நடத்திய ஆய்வில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள இந்தியர்களின் கருப்புப் பணம் குறித்த தங்கள் அறிக்கையை நிதி விவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் மேற்கண்ட மூன்று அமைப்புகளும் அளித்தன. இவை ஒரே அறிக்கையாக தொகுக்கப்பட்டு மக்களவையில் கடந்த மார்ச் மாதம் தாக்கல் செய்யப்பட்டது.
இந்தியா மற்றும் வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்புப் பணம் தொடர்பான நிலை அறிக்கை என்ற தலைப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
மனை - வீடு வணிகம், சுரங்கம், மருந்துப் பொருள் தயாரிப்பு, பான் மசாலா, குட்கா, புகையிலை, வெளிநாட்டுப் பணப் பரிமாற்றம், விவசாயப் பொருள்கள் ஊக வணிகம், திரைப்படத் துறை, தனியார் கல்வித் துறை ஆகியவற்றில் இருந்துதான் அதிக அளவில் கருப்புப் பணம் உருவாகியுள்ளது.


என்சிஏஇஆர் அறிக்கையின்படி, கடந்த 1980 முதல் 2010-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் பல்வேறு வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்திருந்த கருப்புப் பணம் 216 பில்லியன் டாலர் (ரூ.14 லட்சம் கோடி) முதல் 490 பில்லியன் டாலர் ரூ. 34 லட்சம் கோடி) வரை இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்ஐஎஃப்எம் அறிக்கைப்படி 1990 முதல் 2008 வரை கருப்புப் பணமாக வெளிநாடுகளுக்குச் சென்றுள்ள பணத்தின் இப்போதைய மதிப்பு  ரூ.9 லட்சத்து 41 ஆயிரத்து 837 கோடியாக இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. என்ஐபிஎஃப்பி அறிக்கையின்படி, 1997 முதல் 2009-ஆம் ஆண்டு வரை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 0.2 சதவீதம் முதல் 7.4 சதவீதம் வரை கருப்புப் பணமாக வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த 2011-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் தேசிய பொருளாதார ஆராய்ச்சி கவுன்சில் (என்சிஏஇஆர்), தேசிய நிதி மேலாண்மை நிறுவனம் (என்ஐஎஃப்எம்), தேசிய பொது நிதி மற்றும் கொள்கை அமைப்பு (என்ஐபிஎஃப்பி) ஆகிய மூன்று அமைப்புகளிடம் இந்தியாவில் இருந்து வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்புப் பணம் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்குமாறு மத்திய நிதியமைச்சகம் கேட்டுக் கொண்டது.
எனினும், இந்த புள்ளி விவரங்கள் அனைத்தும் துல்லியமானது அல்ல. உள்நாடு, வெளிநாடுகளில் உள்ள கருப்புப் பணத்தை துல்லியமாகக் கணக்கிடுவது என்பது மிகவும் சவாலான பணி என்று ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த மூன்று அமைப்புகள் அளித்துள்ள விவரங்களைத் தொகுத்து, இதுதான் கருப்புப் பணம் தொடர்பான சரியான தகவல் என்று எதையும் கூறிவிட முடியாது என்று மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகரும் கூறியுள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் வீரப்ப மொய்லி தலைமையிலான நாடாளுமன்ற நிலைக்குழு கடந்த மார்ச் 28-ஆம் தேதி கடந்த மக்களவையில் இந்த அறிக்கையை தாக்கல் செய்தது. எனினும், தேர்தலுக்குப் பிறகு அமைந்த புதிய நாடாளுமன்றத்தின் மூலம்தான் அறிக்கையின் விவரங்கள் தெரியவந்துள்ளன. எனினும், உள்நாட்டில் உள்ள கருப்புப் பணத்தின் அளவு குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை.
உள்நாட்டில் கருப்புப் பணத்தை ஒழிக்கும் முக்கிய நடவடிக்கையாகவே கடந்த ஆட்சியில் பிரதமர் மோடி, ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையை அமல்படுத்தினார். எனினும், இதனால் உள்நாட்டில் கருப்புப் பணம் ஒழியவில்லை. பொதுமக்கள்தான் பல்வேறு துயரங்களைச் சந்தித்தனர். நாட்டின் பொருளாதார வளர்ச்சியும் முடங்கியது என்று எதிர்க்கட்சிகள் 
குற்றம்சாட்டின.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com