ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் திடீர் ராஜிநாமா

ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் விரல் ஆச்சார்யா, தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.
ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் திடீர் ராஜிநாமா


ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் விரல் ஆச்சார்யா, தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். அவரது பதவிக் காலம் முடிவடைய இன்னும் 6 மாதங்கள் உள்ளன. இந்தச் சூழலில், தனிப்பட்ட காரணங்களுக்காக தாம் பதவி விலகுவதாக விரல் ஆச்சார்யா தெரிவித்துள்ளார்.
ரிசர்வ் வங்கி பொறுப்பிலிருந்து உயரதிகாரி விலகுவது, கடந்த 7 மாதங்களில் இது இரண்டாவது முறையாகும். ரிசர்வ் வங்கி ஆளுநராக இருந்த உர்ஜித் படேல், தனது பதவிக் காலம் நிறைவடைய 9 மாதங்கள் இருந்த நிலையில், கடந்த டிசம்பரில் பதவி விலகினார். பல்வேறு விவகாரங்களில் மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வந்த சூழலில் அவர் பதவி விலகினார். இதைத் தொடர்ந்து, ரிசர்வ் வங்கி ஆளுநராக சக்தி காந்த தாஸ் நியமிக்கப்பட்டார்.
துணை ஆளுநர் ராஜிநாமா: இந்நிலையில், ரிசர்வ் வங்கி துணை ஆளுநர்களில் ஒருவரான விரல் ஆச்சார்யா தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். இதுதொடர்பாக, ரிசர்வ் வங்கி திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில், சில வாரங்களுக்கு முன் தனது ராஜிநாமா கடிதத்தை விரல் ஆச்சார்யா சமர்ப்பித்ததாக கூறப்பட்டுள்ளது. தவிர்க்க முடியாத சில தனிப்பட்ட காரணங்களால், ஜூலை 23-ஆம் தேதிக்கு பிறகு துணை ஆளுநர் பொறுப்பில் தம்மால் தொடர இயலாது என்று அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருந்ததாக ரிசர்வ் வங்கி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அந்த கடிதம் மீதான அடுத்தகட்ட நடவடிக்கை பரிசீலனையில் உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விரல் ஆச்சார்யா, மத்திய அமைச்சரவை நியமனங்கள் குழுவால் நியமிக்கப்பட்டவர் என்பதால் அவரது ராஜிநாமா கடிதம், அந்தக் குழுவால் ஏற்கப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
சில வாரங்களுக்கு முன்பே ஆச்சார்யா ராஜிநாமா செய்துவிட்ட நிலையில், இதுதொடர்பான தகவலை ரிசர்வ் வங்கி வெளியிடவில்லை. இதுகுறித்து ஊடகங்களில் செய்தி வெளியானதையடுத்து, ரிசர்வ் வங்கி அறிக்கை வெளியிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
விரல் ஆச்சார்யாவின் ராஜிநாமா மூலம் ரிசர்வ் வங்கி துணை ஆளுநர்களின் எண்ணிக்கை 3-ஆக குறைந்துள்ளது. என்.எஸ்.விஸ்வநாதன், பி.பி.கனுங்கோ, எம்.கே.ஜெயின் ஆகியோர் துணை ஆளுநர்களாக பதவி வகித்து வருகின்றனர்.
2016-இல் நியமனம்: பரந்த சிந்தனையுள்ள பொருளாதார நிபுணராக அறியப்படும் விரல் ஆச்சார்யா, நியூயார்க் பல்கலைக்கழகத்தின் ஸ்டர்ன் ஸ்கூல் ஆஃப் பிசினஸில் பொருளாதாரப் பேராசிரியராக பணியாற்றியவர். இவர், கடந்த 2016 டிசம்பரில் ரிசர்வ் வங்கி துணை ஆளுநராக நியமிக்கப்பட்டார். பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு, வங்கியில் பணம் டெபாசிட் செய்வது மற்றும் எடுப்பதில் விதிகள் அவ்வப்போது மாற்றப்பட்டு வந்த காலகட்டத்தில், துணை ஆளுநர் பதவிக்கு அவர் நியமிக்கப்பட்டார். மூன்றாண்டு பதவிக் காலம் கொண்ட அந்த பொறுப்பை, கடந்த 2017, ஜனவரியில் அவர் ஏற்றார். 45 வயதாகும் ஆச்சார்யா, ரிசர்வ் வங்கி துணை ஆளுநராக பொறுப்பேற்ற இள வயதுடையவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர்.
ரிசர்வ் வங்கியின் நிதி மற்றும் ஆராய்ச்சி சார்ந்த பணிகளை விரல் ஆச்சார்யா கவனித்து வந்தார். மேலும், வட்டி விகிதங்களை நிர்ணயிக்கக் கூடிய 6 உறுப்பினர்கள் கொண்ட நிதிக் கொள்கை குழுவிலும் இடம்பெற்றிருந்தார். அவரது பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரியில் முடிவடைய இருந்தது.
அரசுடனான கருத்து வேறுபாடு:
ரிசர்வ் வங்கியின் தன்னாட்சியை வலியுறுத்தியும், மத்திய நிதியமைச்சகத்தை விமர்சித்தும் பல்வேறு தருணங்களில் இவர் தெரிவித்த கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தின. கடந்த அக்டோபரில் நிகழ்ச்சியொன்றில் பேசிய இவர், மத்திய அரசின் கொள்கைகள் உருவாக்கமானது, குறுகிய கண்ணோட்டமும் அரசியல் சிந்தனைகளும் கொண்டதாக உள்ளது என்று தெரிவித்தார். ரிசர்வ் வங்கி கையிருப்புத் தொகை மீதான அதிகாரம் யாருக்கு உள்ளது என்பது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் மத்திய அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் கருத்து வேறுபாடுகள் நிலவியதையும் ஆச்சார்யாவின் கருத்துகள் அம்பலப்படுத்தின. இதேபோல், வட்டி விகிதங்கள் நிர்ணயத்திலும் இவர் சில எதிர்ப்புகளை பதிவு செய்திருந்தார்என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்கிறது பதவி விலகல்  
 பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியில் அரசுடனான கருத்து வேறுபாட்டால் பொருளாதார நிபுணர்கள் பதவி விலகுவது தொடர்ந்து வருகிறது.  
ரிசர்வ் வங்கி ஆளுநராக 2013 முதல் 2016 வரை ரகுராம் ராஜன் பதவி வகித்தார். அவருக்கும் மத்திய அரசுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருந்தன.  அவரைத் தொடர்ந்து, ரிசர்வ் வங்கி ஆளுநராக பொறுப்பேற்ற உர்ஜித் படேல், தனது பதவிக்காலம் நிறைவடையும் முன்பே கடந்த ஆண்டு டிசம்பரில் பதவி விலகினார்.
இதனிடையே, நீதி ஆயோக் துணைத் தலைவராக இருந்த அரவிந்த் பனகாரியா, கடந்த 2017, ஆகஸ்டிலும்,  தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன், கடந்த ஆண்டு ஜூனிலும் பதவி விலகினர். பிரதமருக்கான பொருளாதார ஆலோசனை குழுவில் இடம்பெற்றிருந்த பகுதி நேர உறுப்பினர் சுர்ஜித் பல்லா,  கடந்த ஆண்டு டிசம்பரில் ராஜிநாமா செய்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com