புதுப்பொலிவு பெறுகிறது "தில்லி செங்கோட்டை'

முகலாயர்களின் ஆட்சிக் காலத்தின் சின்னமாக பழைய தில்லியில் அமைந்திருக்கும் செங்கோட்டை புதுப்பொலிவுப் பெற்று வருகிறது. 
புதுப்பொலிவு பெறுகிறது "தில்லி செங்கோட்டை'

முகலாயர்களின் ஆட்சிக் காலத்தின் சின்னமாக பழைய தில்லியில் அமைந்திருக்கும் செங்கோட்டை புதுப்பொலிவுப் பெற்று வருகிறது. 
1639ஆம் ஆண்டு ஐந்தாவது முகலாயப் பேரரசர் ஷாஜஹானால் கட்டத் தொடங்கி, 1948ஆம் ஆண்டு மே 12ஆம் தேதி முடிக்கப்பட்ட செங்கோட்டை தில்லியின் வரலாற்று சின்னமாக மட்டுமின்றி நாட்டின் சின்னமாகவும் உள்ளது.
நாட்டின் சுதந்திரம் தினம் செங்கோட்டையில் கொண்டாடப்படுவது வழக்கம். சிவப்பு நிறத்தில் பிரமாண்டமாக காட்சியளிக்கும் செங்கோட்டையின் கொத்தளத்தில் பிரதமர் தேசியக் கொடி ஏற்றுவார். ஆனால், அந்த செங்கோட்டையின் பின் புறத்தில் அமைந்திருக்கும் முகலாய கட்டடங்கள் தூசு படிந்தும், பழுதடைந்தும் காட்சியளிக்கும். 
செங்கோட்டை கொத்தளம் போல இவற்றையும் சுத்தப்படுத்தலாமே என்று செங்கோட்டையைக் காணும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணஓட்டமாக இருக்கும். இதை நனவாக்க இந்திய தொல்லியல் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. 
பழங்கால முகலாயர்களின் கட்டடக் கலைகளைப் புதுப்பொலிவுப்படுத்தும் பணியில் கடந்த ஓராண்டாக இந்திய தொல்லியல் துறை மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.
செங்கோட்டையில் உள்ள லஹோரி கேட், சிவப்பு மணல் கற்சுவர்கள், சாட்டா பஜார் உள்பட அனைத்து கட்டடங்களின் உள்ளே உள்ள மேற்கூரைகளும் பழங்கால கட்டட வடிவமைப்புக்கு ஏற்ப சீரமைக்கப்பட்டு வருகின்றன. இதுதொடர்பாக இந்திய தொல்லியல் துறை திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: 
கடந்த ஓராண்டாக மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைப்பு பணிகளால் செங்கோட்டை புதுப்பொலிவு பெற்று வருகிறது. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு செங்கோட்டையில் தங்கிய இந்திய ராணுவம், அங்கு 400க்கும் மேற்பட்ட சிறு கட்டடங்களைக் கட்டியது. அதில், ராணுவக் குடியிருப்புகளும், கூடாரங்களும் அடங்கும். இவை அனைத்தும் இடிக்கப்பட்டு விட்டன. 
மேலும், 37 ஏக்கரில் இருந்த புதிய கட்டமைப்புகளும் அகற்றப்பட்டுள்ளன. இதனால், முன்பு செங்கோட்டைக்குள் வெறும் 15 ஏக்கரில் இருந்த பசுமைப் பறப்பு தற்போது 52 ஏக்கராக விரிவடைந்துள்ளது. 
எனினும், பிரிட்டீஷ் ராணுவம் தங்களின் கட்டடக் கலை நயத்தில் கட்டிய 10 சிறிய கட்டடங்கள் மட்டும் அப்படியே வைக்கப்பட்டுள்ளன. இவை பாரம்பரிய சின்னமாக உள்ளதால் விட்டுவைக்கப்பட்டுள்ளன. 
சுபாஷ் சந்திர போஸ் - ஐஎன்ஏ அருங்காட்சியகம், யாத்-இ-ஜல்லியன் அருங்காட்சியகம், இந்தியாவின் முதல் சுதந்திரப் போர் அருங்காட்சியகம், இந்தியா வரை கலைகளின் அருங்காட்சியமான திருஷ்யாகலா, இந்திய சுதந்திரத்தின் அருங்காட்சியமான ஆஸாதீக்கி திவான் ஆகிய செங்கோட்டையில் அமைந்துள்ள ஐந்து அருங்காட்சியகங்களிலும் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பகுதியில் மேலும் சில அருங்காட்சியங்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சாட்டா பஜார் பகுதி, இழந்த பழைமை அப்படியே மீண்டும் கொண்டு வரப்பட்டுள்ளது. பழங்கால கட்டட கலையின் அசல் வடிவத்தில் சாட்டா பஜார் பொலிவு பெற்றுள்ளது. 
அந்த மார்க்கெட்டின் கதவுகள் அனைத்தும் பழைமை மாறாமல் மரத்தால் ஒருசேர அமைக்கப்பட்டுள்ளன. 
சாட்டா பஜாரில் நடந்து சென்றால் பழங்கால வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ள கலை உணர்வை சுற்றுலாப் பயணிகள் உணரலாம். தரைகள் முழுவதும் சிவப்பு நிற மணல் மூலம் சீரமைக்கப்பட்டுள்ளன. ஜாலிகளும் பழைமை மாறாமல் துல்லியமாக சீரமைக்கப்பட்டுள்ளன. 
 அறிவியல் ஆய்வு மூலம் வரைகலைகள் பொலிவு பெறும் பணி நடைபெற்று வருகிறது. திவான் இ கஹாஸ், ஜபர் மஹால் ஆகியவற்றின் மார்பல் கற்களும் பொலிவு பெறுகின்றன. 
மோத்தி மசூதி, சாவன், பதாவ் அரங்கம், ஹிரா மஹால் ஆகியவற்றில் ஏற்பட்டிருந்த பழுதுகள் சரி செய்யப்பட்டுள்ளன. ரங் மஹால், காஸ் மஹால், மும்தாஜ் மஹால் ஆகியவற்றையும் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்த பாரம்பரிய சின்னங்கள் தத்தெடுப்பு திட்டத்தின் கீழ், 2018ஆம் ஆண்டு செங்கோட்டையை டால்மியா பாரத் நிறுவனம் ஐந்து ஆண்டுகளுக்கு தத்தெடுத்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com