குழந்தைகள் உயிரிழப்பு விவகாரம்: மத்திய, பிகார் அரசுகள் பதிலளிக்க 7 நாள் கெடு

பிகார் மாநிலம், முசாஃபர்பூர் மாவட்டத்தில் மூளை அழற்சி நோயால் 130-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக 7 நாள்களுக்குள் பதிலளிக்கும்படி மத்திய அரசுக்கும்
குழந்தைகள் உயிரிழப்பு விவகாரம்: மத்திய, பிகார் அரசுகள் பதிலளிக்க 7 நாள் கெடு


பிகார் மாநிலம், முசாஃபர்பூர் மாவட்டத்தில் மூளை அழற்சி நோயால் 130-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக 7 நாள்களுக்குள் பதிலளிக்கும்படி மத்திய அரசுக்கும், பிகார் மாநில அரசுக்கும் உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
முசாஃபர்பூர் மாவட்டத்தில் கடந்த 1-ஆம் தேதி முதல் மூளை அழற்சி நோயால் குழந்தைகள் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது.  குழந்தைகளின் உயிரிழப்பை தடுக்க மத்திய, பிகார் அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி, மனோகர் பிரதாப் என்ற வழக்குரைஞர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அதில் கூறப்பட்டிருந்ததாவது: முசாஃபர்பூரில் மூளை அழற்சி நோயால் குழந்தைகள் உயிரிழப்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருவது வருத்தமளிக்கிறது. மத்திய, பிகார் அரசுகளின் அலட்சியமும், செயலற்ற தன்மையுமே இதற்கு காரணம்.  மூளை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு முறையான சிகிச்சை கிடைக்கும் வகையில், மருத்துவக் கருவிகள் உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் மத்திய அரசு உடனடியாக வழங்க உத்தரவிட வேண்டும். அந்தக் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவ நிபுணர்கள் குழுவை விரைந்து அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். மூளை அழற்சி நோயின் தாக்கம் நிலவும் பகுதிகளில் அவசர சிகிச்சைப் பிரிவு கொண்ட 100 மருத்துவ வாகனங்களை உடனடியாக அனுப்பி வைக்க மத்திய, பிகார் அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு மீதான விசாரணை, நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, நீதிபதி பி.ஆர்.கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் திங்கள்கிழமை நடைபெற்றது. அப்போது, இந்த விவகாரத்தில் 7 நாள்களுக்குள் பதிலளிக்கும்படி மத்திய, பிகார் அரசுகளுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், மருத்துவ வசதிகள் அதிகரிப்பு, குழந்தைகளுக்கான சத்துணவு, தூய்மைப் பணிகள் உள்ளிட்டவை குறித்து விரிவாக பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யவும் பிகார் அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். உத்தரப் பிரதேசத்திலும் மூளை அழற்சியால் குழந்தைகள் உயிரிழப்பதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதையடுத்து, அந்த மாநில அரசும் பதிலளிக்க உத்தரவிடப்பட்டது.
அமைச்சர்களுக்கு எதிராக விசாரணை: மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், பிகார் மாநில சுகாதாரத் துறை அமைச்சர் மங்கள் பாண்டே ஆகியோர் தங்கள் கடமைகளை நிறைவேற்றுவதில் அலட்சியமாக செயல்பட்டதே குழந்தைகள் உயிரிழப்புக்கு காரணம் என்று குற்றம்சாட்டி, முசாஃபர்பூர் தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு மீது நீதிபதி சூர்யகாந்த் திவாரி முன் திங்கள்கிழமை விசாரணை நடைபெற்றது. அப்போது, இரு அமைச்சர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்துமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com