இந்தியா

மும்பை வீட்டில் தாய்-மகன் சடலமாக மீட்பு: லேப்டாப்பில் கிடைத்த தற்கொலைக் கடிதம்

25th Jun 2019 01:02 PM

ADVERTISEMENT


மும்பை: மும்பையின் மிரா சாலையில் உள்ள ஒரு வீட்டில் இருந்து தாய் - மகன் சடலமாக மீட்கப்பட்டனர். 

வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அக்கம் பக்கத்தினர் காவல்துறையினருக்குப் புகார் அளித்ததன் பேரில், வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த காவல்துறையினர் இருவரது உடல்களை மீட்டனர்.

இவர்களது மரணத்தில் மர்மம் நீடித்த நிலையில், வீட்டில் இருந்த லேப்டாப்பில் இருந்து, மகன் எழுதிய தற்கொலைக் கடிதம் காவல்துறைக்குக் கிடைத்துள்ளது. 

அந்த கடிதத்தின் வாயிலாகக் கிடைத்திருக்கும் தகவல் என்னவென்றால், உயிரிழந்தவர்கள், தாய் மீனாட்சி ஐயர் (75), மகன் வைகடேஸ்வரன் கோபால் ஐயர் (42) என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மேலும், மகன் முதலில் தனது தாயைக் கொன்றுவிட்டு, பிறகு தானும் தற்கொலை செய்து கொண்டிருப்பது கடிதத்தின் வாயிலாகத் தெரிய வந்துள்ளது. ரத்த வெள்ளத்தில் தாய் கிடந்துள்ளார். ஆனால் வைகடேஸ்வரன் உடலில் எந்தக் காயமும் இல்லை. பிரேத பரிசோதனைக்குப் பிறகே அவர் எப்படி இறந்தார் என்பது தெரிய வரும்.

தாயும், மகனும் வெளியே வந்து 4 நாட்களுக்கு மேல் ஆகிறது என்று அக்கம் பக்கத்தினர் கூறுகிறார்கள். மேலும், 2017ம் ஆண்டு இவர்கள் மும்பையில் உள்ள இந்த வீட்டுக்குக் குடி வந்துள்ளனர். இவர்களது குடியிருப்பு ஒப்பந்தம் கடந்த ஏப்ரல் மாதத்தோடு முடிவுக்கு வந்ததால், வீட்டை காலி செய்யச் சொல்லி வீட்டின் உரிமையாளர் கூறியிருக்கிறார். வேறு வீடு பார்க்க இரண்டு மாதம் அவகாசம் கோரியிருந்த வைகடேஸ்வரன், அதற்குள் இந்த மோசமான முடிவுக்கு தள்ளப்பட்டுள்ளது அக்கம் பக்கத்தினரை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT