மெஹூல் சோக்ஸியை இந்தியா கொண்டுவர நாங்கள் இதற்கும் தயார்: நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை பதில்

மெஹூல் சோக்ஸியை ஏர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவ நிபுணர் குழுவின் முழு கண்காணிப்பில் ஆண்டிகுவாவில் இருந்து இந்தியா கொண்டுவர தயாராக உள்ளதாக அமலாக்கத் துறை மும்பை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. 
மெஹூல் சோக்ஸியை இந்தியா கொண்டுவர நாங்கள் இதற்கும் தயார்: நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை பதில்


மெஹூல் சோக்ஸியை ஏர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவ நிபுணர் குழுவின் முழு கண்காணிப்பில் ஆண்டிகுவாவில் இருந்து இந்தியா கொண்டுவர தயாராக உள்ளதாக அமலாக்கத் துறை மும்பை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. 

மெஹூல் சோக்ஸியை தலைமறைவு பொருளாதார மோசடியாளராக அறிவிக்கக்கோரி, மும்பை உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனுவை தள்ளுபடி செய்யக்கோரி, மும்பை உயர்நீதிமன்றத்தில் மெஹூல் சோக்ஸி தமது வழக்குரைஞர் விஜய் அகர்வால் மூலமாக கடந்த 17-ஆம் தேதி பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்தார். 

அதில் அவர், "என் மீதான வழக்கு விசாரணையைத் தவிர்க்க வேண்டும் என்ற எண்ணத்துடன், இந்தியாவில் இருந்து கடந்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியேறவில்லை. மருத்துவப் பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காகவே வெளியேறினேன். எனது உடல்நிலை தற்போது மோசமாக இருப்பதால், இந்தியாவுக்கு திரும்பி வர இயலாத நிலையில் உள்ளேன். அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ விசாரணைக்கு ஒத்துழைக்க விரும்புகிறேன். அவர்கள் என்னை ஆண்டிகுவாவில் இருந்தபடியே விசாரிப்பதற்கு உத்தரவிட வேண்டும்" எனத் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், அமலாக்கத் துறை மும்பை உயர்நீதிமன்றத்தில் இன்று பதில் மனு தாக்கல் செய்தது. அதில், 

"நீதிமன்றத்தை தவறாக வழிநடத்தி, சட்டரீதியிலான நடவடிக்கைகளை தாமதப்படுத்துவதற்காகவே மருத்துவப் பரிசோதனை என்கிற காரணங்கள் கூறப்படுகிறது. அவரை, ஏர் ஆம்புலன்ஸ் விமான சேவை மூலம் மருத்துவ நிபுணர் குழுவின் முழு கண்காணிப்பில் ஆண்டிகுவாவில் இருந்து இந்தியா கொண்டுவர நாங்கள் தயாராக உள்ளோம்.

ரூ.6129 கோடி மதிப்புள்ள அவருடைய சொத்துகளை அமலாக்கத் துறை பறிமுதல் செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அது தவறு. விசாரணையின் போது ரூ. 2100 கோடி மதிப்புள்ள சொத்துகளை தான் அமலாக்கத் துறை இணைத்துள்ளது. அவர் இந்தியாவில் இருந்து வெளியேறுவதற்கு முன் தனது மொத்த சொத்துகளையும் விற்க முயற்சி செய்துள்ளார்.    

சோக்ஸி இதுவரை விசாரணைக்கு ஒத்துழைத்ததே இல்லை. அவருக்கு எதிராக பிணையில் வெளிவர முடியாத கைது ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவர் இந்தியா திரும்ப மறுக்கிறார். அதனால் தான் அவர் தலைமறைவு பொருளாதார மோசடியாளர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் (பிஎன்பி) வைர வியாபாரி நீரவ் மோடியும், அவரது உறவினரும் வைர வியாபாரியுமான மெஹூல் சோக்ஸியும் கூட்டாக சுமார் ரூ.13,400 கோடி மோசடி செய்ததாக கடந்த 2018ஆம் ஆண்டு குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்த விசாரணை தொடங்கப்படுவதை அறிந்த நீரவ் மோடியும், மெஹூல் சோக்ஸியும் தங்களுக்கு எதிராக நடவடிக்கை தொடங்கப்படும் முன்னரே, நாட்டை விட்டு வெளியேறி விட்டனர்.

இவர்களில், நீரவ் மோடி பிரிட்டன் தலைநகர் லண்டனில் பதுங்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். தற்போது அவர் லண்டன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

மெஹூல் சோக்ஸி, கரீபியன் நாடுகளில் ஒன்றான ஆன்டிகுவாவில் உள்ளார். அவரை அந்நாட்டில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்திக் கொண்டு வருவது தொடர்பான நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com