நாட்டைக் காக்குமா ராகுல் மௌனம்?

பிரதமராகி நாட்டையும், மக்களையும் முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்லப் போவதாகக் கூறிய அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ராகுல்காந்தி, இப்போது தலைவர் பதவியை ராஜிநாமா செய்வதாக
நாட்டைக் காக்குமா ராகுல் மௌனம்?

பிரதமராகி நாட்டையும், மக்களையும் முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்லப் போவதாகக் கூறிய அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ராகுல்காந்தி, இப்போது தலைவர் பதவியை ராஜிநாமா செய்வதாக அறிவித்துவிட்டு மெளனம் காத்து வருகிறார்.
இந்த மெளனம் எவ்வளவு உறுதி மிக்கதாக இருக்கப் போகிறது எனத் தெரியவில்லை.
பாஜகவிலிருந்து விலகிய முன்னாள் மத்திய நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா, பதவி விலகல் முடிவில் ராகுல் உறுதியாக இருக்க வேண்டும். இல்லாவிடில், பொதுவெளியில் மதிப்பை இழக்க நேரிடும் என்று சுட்டுரையில் அறிவுரை கூறியிருக்கிறார். 
இந்த அறிவுரையைப் பின்பற்றும் மனநிலையில் ராகுல் இருக்கலாம் அல்லது வேறு மனநிலையிலும் இருக்கலாம்.
தேர்தல் தோல்விக்குப் பிறகு மே-25 இல் தில்லியில் நடைபெற்ற காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டத்தில், கட்சியின் மூத்த தலைவர்களால்தான் தோற்றோம். என் பேச்சை யாரும் கேட்கவில்லை. மகனுக்கு சீட் தராவிட்டால் ராஜிநாமா செய்வேன் என்று என்னை மிரட்டினர் என்றெல்லாம் ராகுல் தன் வேதனையை வெளிப்படுத்தினார்.
அந்த மூத்த தலைவர்கள் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், மத்தியப் பிரதேச முதல்வர் கமல்நாத், முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஆகிய மூவரும் என்பதையும் அவர் வெளிப்படையாகவே கூறித் தனது ஆதங்கத்தைச் சொல்லித் தீர்த்தார்.
அதுபோன்ற மூத்த தலைவர்கள் இனி, அரசியல் தொடர்பாக ராகுல் எடுக்கும் முடிவுக்குக் கட்டுப்படுவோம், அழுத்தம் கொடுக்க மாட் டோம், மீறிச் செயல்பட மாட்டோம் என்று உறுதி அளிக்கும் வரை ராகுலின் மெளனம் நீடிக்குமா எனத் தெரியவில்லை.
எனினும், காங்கிரஸின் படுதோல்விக்கு மூத்த தலைவர்களின் இதுபோன்ற செயல்பாடுகள் மட்டுமே காரணம் என்று குறுக்கிப் பார்த்துவிட முடியாது.  அதையும் மீறி காங்கிரஸ் தோல்விக்குப் பல்வேறு காரணங்கள் இருக்கின்றன.
மக்களவைத் தேர்தலுக்கு முன்பே ராகுலுக்கு,  தயவுகூர்ந்து பிகார், ஜார்க்கண்ட், தில்லியில் கூட்டணியை இறுதி செய்யுங்கள் என்று யஷ்வந்த சின்ஹா  வேண்டுகோள் விடுத்தார். 
அந்த வேண்டுகோளை ஏற்று காங்கிரஸ் செயல்பட்டதா என்றால் இல்லை.
மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியுடனும், உத்தரப் பிரதேசத்தில் மாயாவதி, அகிலேஷ் யாதவுடனும் கூட்டணி அமைக்கும் முயற்சியில் உறுதி காட்டியிருக்கலாம்.
மேலும், மக்களவைத் தேர்தலுக்கு ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி காங்கிரஸுடன் கூட்டணி இல்லை என்ற முடிவு எடுத்தது. அதன் காரணமாக ஒருங்கிணைய இருந்த எதிர்க்கட்சிகள் எல்லாம் சிதறுண்டு போயின. 
இதனை மாற்றியமைத்து எல்லா கட்சிகளையும் ஒருங்கிணைக்க காங்கிரஸுக்கு நீண்ட கால அவகாசம் இருந்தும், கெளரவம் பார்த்து அந்தப் பணியில் இறங்கவே இல்லை.
தேர்வுக்குக் கடைசி நேரத்தில் படிக்கும் மாணவர்களைப்போல, தேர்தல் நெருங்கிவிட்ட கடைசி நேரத்தில் கூட்டணி அமைக்க முற்பட்டதால் அது எடுபடாமலே போய்விட்டது.
அதைப்போல, எதிர்க்கட்சிக்கென உள்ள பணிகளையும் கடைசி நேரத்தில் மட்டுமே காங்கிரஸ் ஆற்றியது. ஓர் அரசு சிறப்பாகச் செயல்பட ஆளும்கட்சியினரையும்விட, எதிர்க்கட்சியினரின் பணியே முக்கியமானது. 
இந்தப் பணியை 2014-இல் பாஜக ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்தே காங்கிரஸ் செய்யத் தொடங்கியிருக்க வேண்டும். அதை விடுத்து, தேர்தலுக்கு கடைசி நேரத்தில் பிரியங்கா காந்தியை தீவிர அரசியலுக்குக் கொண்டு வந்ததுபோல, கடைசி மூன்று மாதங்கள் மட்டும் பாஜகவை விமர்சித்து ஆட்சியைப் பிடிப்போம் என்றால், அது சாத்தியமில்லாத ஒன்றாகிவிட்டது.
இதுதான் ராகுலுக்கு முதல் அனுபவம் என்றும் கூற முடியாது. ஏற்கெனவே உண்டு என்றாலும், அதிலிருந்து கற்க வேண்டியதை அவர் கற்கவில்லை.
மன்மோகன் சிங் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி 2004 மே-22 முதல் 2009 மே-22 வரையும், 2009-மே 22 முதல் 2014 மே-26 வரையும் நடைபெற்றது. 
ஆனால், 2014 மக்களவைத் தேர்தலில் மன்மோகன் சிங் பின்னுக்குத் தள்ளப்பட்டு, ராகுல் முன்னிலைப்படுத்தப்பட்டார். 
  அந்தத் தேர்தலில் எப்படியும் வெற்றிபெற்றுவிட வேண்டும் என்பதற்காக, காங்கிரஸ் ஆட்சியையே ராகுல் கடைசி ஆறு மாதங்களில் பொதுவெளியில் விமர்சனம் செய்யத் தொடங்கினார்.  மன்மோகன் சிங் அரசு சமையல் எரிவாயு உருளையின் விலையை ஏற்றியபோது பொதுவெளியில் ராகுல் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தார். பிறகு, விலை குறைக்கப்பட்டது.
2ஜி அலைக்கற்றை விவகாரத்தில் எதிர்க்கட்சியான பாஜகவையும்விட தீவிரம் காட்டி, திமுகதான் குற்றம் செய்தது. காங்கிரஸ் கட்சி தூய்மையானது என்பதுபோல் தோற்றம் காட்டப்பட்டது.
எல்லாவற்றையும்விட, காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மக்கள் பிரநிதித்துவச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரும் அவசரச் சட்டத்துக்கு (2013) பொதுவெளியில் ராகுல் எதிர்ப்பு தெரிவித்தார்.
குற்ற வழக்கில் தண்டனை பெற்ற நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் தகுதி இழப்பர் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இதைத் தடுக்கும் வகையில் அவரசச் சட்டம் ஒன்றை மத்திய காங்கிரஸ் அரசு கொண்டு வந்து மத்திய அமைச்சரவையில் அதற்கு ஒப்புதல் பெற்றது.
அதுவரை அமைதியாக இருந்த ராகுல், அவசரச் சட்டத்துக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு எழுந்ததும், திடீரென செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, இந்த அவசரச் சட்டமே முட்டாள்தனமானது. இதைக் கிழித்துக் குப்பையில் எறிய வேண்டும். நான்சென்ஸ் என்று கூறினார். அதன் பிறகு, அந்த அவசரச் சட்டம் திரும்பப் பெறப்பட்டது.
இந்த நடவடிக்கைகள் எல்லாம் ராகுலை நேர்மையானவராகவும், காங்கிரஸ் கட்சியை தூய்மையானதாகவும் காட்டி மக்கள் மனதில் பெரிய அளவில் இடம்பெற்றுவிடலாம் என நினைத்துச் செய்யப்பட்டன.
ஆனால், 2014 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் 44 இடங்களே பெற்று படுதோல்வி அடைந்தது. பாஜக 282 இடங்களைப் பிடித்து ஆட்சியைப் பிடித்தது.
அதே வகையில் கடந்த 4 ஆண்டுகளாக அமைதியாக இருந்துவிட்டு, கடைசி ஓராண்டாக பாஜகவுக்கு எதிராக தீவிரமாகச் செயல்பட்டு, கூட்டணியையும் ஒருங்கிணைக்காமல் தேர்தலைச் சந்தித்து, 52 இடங்கள் மட்டுமே பெற முடிந்துள்ளது.
இந்த முடிவும் காங்கிரஸுக்கு ஒரு வகையில் ஆறுதல்தான். 2014 மக்களவைத் தேர்தலைவிட நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 8 இடங்களைக் கூடுதலாக காங்கிரஸ் பெற்றுள்ளது.
இதை உணர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கைகளில் ஈடுபடாமல் ராகுல் மெளனம் காத்து வருகிறார். ஜம்மு - காஷ்மீர், ஹரியாணா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களுக்குச் சட்டப்பேரவைத் தேர்தல் வர உள்ளது.
இந்தத் தருணத்தில் தேர்தல் பணியாற்றாமல் ராகுலின் பிடிவாத மெளனம் மட்டுமே வெற்றிபெற்று தந்துவிடும் என நினைத்தால் அது ஏமாற்றத்திலேயே முடியும்.
   பிரதமர் கனவில் இருந்த ராகுலுக்கு தேர்தல் தோல்வி துவண்டு போகும் அளவுக்கு பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கலாம். 
ஆனால், இதைவிட பெரிய ஏமாற்றத்தைச் சந்தித்தவராக ராகுலின் தாயார் சோனியா காந்தியே இருந்து வருகிறார்.
2004 மக்களவைத் தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வெற்றிபெற்று சோனியா காந்தி பிரதமர் பதவியை ஏற்க வேண்டியது மட்டுமே மீதம். அந்நிய நாட்டவர் இந்தியாவின் பிரதமராவதை ஏற்க மாட்டோம் என்று பாஜக நாடு முழுவதும் கிளர்ச்சியை உண்டு பண்ணியது. அதைத் தொடர்ந்து, சோனியாகாந்தி பின்வாங்கிக் கொள்ள மன்மோகன் சிங் திடீர் பிரதமரானார்.
  வெற்றிபெற்ற சோனியா காந்தியே பிரதமர் ஆக முடியாமல் போனதைவிட, தோல்வி அடைந்த ராகுல் பிரதமராக முடியாமல் போனது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. 
தற்போதைய நிலையிலும் பாஜகவை எதிர்க்கும் வலிமை இன்னும் காங்கிரஸ் கட்சியிடம் மட்டுமே உள்ளது என்பது மறுப்பதற்கு இல்லை. அதை பயன்படுத்தி ராகுல் என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும்.
பிரதமர் மோடியைப் பார்த்து ராகுல் ஒவ்வொரு முறையும் ஒன்றை கேட்டுக் கொண்டே இருந்தார்.
ரஃபேல் விவகாரத்தில் பிரதமர் மெளனம் காப்பது ஏன், அமித் ஷா மகன் விவகாரத்தில் பிரதமர் மெளனம் காப்பது ஏன், பெட்ரோல் விலை உயர்வு குறித்து பிரதமர் மெளனம் காப்பது ஏன்? என்றார்.
இப்போது ராகுலைப் பார்த்து,  மெளனம் காப்பது ஏன்? என்று கேட்க வேண்டியுள்ளது.
இந்த மெளனம் நாட்டையோ, காங்கிரûஸயோ காக்க எந்த வகையிலும் உதவப் போவதில்லை.
அதனால், காங்கிரஸ் தலைவராக ராகுல் நீடிக்கப் போகிறார் என்றால்,  அதை வெளிப்படையாக மக்களுக்கு அறிவித்துவிட்டு, அரசியல் பணியில் ஈடுபடலாம். இல்லாவிட்டால், ஒருவரைத் தலைவராகத் தேர்ந்தெடுத்து அதையும் வெளிப்படையாக அறிவித்துவிட்டு சமூகப் பணியில் ஈடுபடுலாம். 
இரண்டும் இல்லாமல் மெளனம் காப்பது மக்கள் மத்தியில் குழப்பத்தைத்தான் ஏற்படுத்தும். ராகுலின் மெளனம் கலையுமா, இல்லை காங்கிரஸின் தெளிவில்லாத பயணம் தொடருமா என்பது தெரியாமல் குழம்பி இருப்பது காங்கிரஸ் கட்சியினர் மட்டுமல்ல, இந்தியாவும்கூட!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com