வியாழக்கிழமை 22 ஆகஸ்ட் 2019

குஜராத்தில் நாளை கரையைக் கடக்கிறது வாயு புயல்: சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை!

ANI | Published: 12th June 2019 12:44 PM

 

அரபிக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்தம், தீவிர புயலாக உருமாறி 'வாயு' புயல் என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்த வாயு புயல் குஜராத்தில் வியாழக்கிழமை காலை கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், குஜராத் மாநிலம் துவரகா, சோம்நாத், சசன், கட்ச் ஆகியப் பகுதிகளுக்கு சுற்றுலா வந்துள்ள பயணிகள் அனைவரும் ஜூன் 12ம் தேதி மதியத்துக்கு மேல் பாதுகாப்பான பகுதிகளுக்குச் சென்று விடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அரபிக்கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்தம் காரணமாக உருவான புயலுக்கு வாயு எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் புயல் தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

அரபிக்கடலில் உருவான புயல் தீவிரமடைந்து வருகிறது. இது செவ்வாய்க்கிழமை மாலை நிலவரப்படி, குஜராத்தின் வேராவல் கடற்கரைக்குத் தெற்கே 650 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ளது. புயலானது அடுத்த 12 மணி நேரத்தில் மேலும் தீவிரமடைந்து வடக்குநோக்கி நகர வாய்ப்புள்ளது. குஜராத்தின் போர்பந்தர் மற்றும் மஹுவா கடலோரப் பகுதிகளுக்கிடையே வியாழக்கிழமை அதிகாலை புயல் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புயல் கரையைக் கடக்கும்போது மணிக்கு 110 முதல் 135 கி.மீ. வேகம் வரை பலத்த காற்று வீசக்கூடும்.

புயல் காரணமாக செளராஷ்டிரா, கட்ச் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் 13, 14-ஆம் தேதிகளில் மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் காற்று வீசவும், கனமழை பெய்யவும் வாய்ப்புள்ளது. அதே நேரத்தில், வடக்கு மகாராஷ்டிரத்தின் கடலோரப் பகுதிகளில் மணிக்கு 50 முதல் 70 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். 

புயல் காரணமாக 1 முதல் 1.5 மீ. உயரம் வரை கடல் அலை எழும்பக் கூடும். தாழ்வான கடலோரப் பகுதிகளில் கடல்நீர் உள்புகவும் அதிகம் வாய்ப்புள்ளது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை: வாயு புயல் தொடர்பாகப் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை குஜராத் மாநில அரசு மேற்கொண்டுள்ளது. கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களைப் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்க மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும் மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக, மாநில முதல்வர் விஜய் ரூபானி காந்திநகரில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
கட்ச் முதல் தெற்கு குஜராத் வரையிலான கடற்பகுதிகள் முழுவதும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விடுப்பில் சென்றுள்ள மாநில அதிகாரிகள் அனைவரும் உடனடியாகப் பணிக்குத் திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

ஒடிஸா அரசிடம் ஆலோசனை: புயலை எதிர்கொள்வது குறித்து மாநில அமைச்சர்கள் கூட்டம் புதன்கிழமை நடைபெற உள்ளது. அதன்பிறகு, அமைச்சர்கள் அனைவரும் பல்வேறு மாவட்டங்களில் புயல் முன்னெச்சரிக்கை மற்றும் புயலுக்குப் பிந்தைய மீட்புப் பணிகளில் ஈடுபட உள்ளனர். புயலைத் திறம்பட எதிர்கொள்வது குறித்து, ஒடிஸா அரசிடம் தொடர்ந்து ஆலோசனை கேட்கப்பட்டு வருகிறது.

புயலை எதிர்கொள்வதற்காக ராணுவத்தினர், தேசிய பேரிடர் மீட்புப் படையினர், கடலோரக் காவல் படையினர் உள்ளிட்டோர் மாநிலத்துக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். புயலின்போது ஏற்படும் உயிரிழப்பைத் தவிர்க்கும்நோக்கில், கடலோரத்தில் வசித்து வரும் மக்களைப் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்க உள்ளோம்.

மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதே வேளையில், கடலுக்குள் ஏற்கெனவே சென்றுவிட்ட மீனவர்களை உடனடியாகக் கரைக்குத் திரும்பும்படி தகவல் அனுப்பி வருகிறோம் என்று அவர் தெரிவித்தார்.

இதனிடையே, புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக குஜராத் மாநில அரசின் மூத்த அதிகாரிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினார். மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய அதிகாரிகளை அவர் வலியுறுத்தினார்.
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

ப.சிதம்பரம் கைது: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ நடவடிக்கை
இந்தியா-ஜாம்பியா இடையே : 6 ஒப்பந்தங்கள் கையெழுத்து
ரயில் நிலையங்களில் நெகிழி பயன்பாட்டுக்கு தடை: அக்.2 -இல் அமலுக்கு வருகிறது
முதல் ரஃபேல் விமானம் செப். 20-இல் ஒப்படைப்பு
பாகிஸ்தானுக்கு செல்லும் நதி நீரை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை: மத்திய நீர்வளத் துறை அமைச்சர்