கதுவா சிறுமி வழக்கு: சஞ்சி ராம் மீது சந்தேகத்தை ஏற்படுத்திய அந்த ஒரு சொட்டு வியர்வை!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பொதுவாகவே எப்படி இருக்கும் என்று எல்லோருக்கும் தெரியும். அதுவும் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதத்தில் சொல்லவே வேண்டாம். எலும்பை உருக்கும் குளிர் நிலவும் என்று நன்றாகவே தெரியும்.
கதுவா சிறுமி வழக்கு: சஞ்சி ராம் மீது சந்தேகத்தை ஏற்படுத்திய அந்த ஒரு சொட்டு வியர்வை!

ஜம்மு: ஜம்மு காஷ்மீர் மாநிலம் பொதுவாகவே எப்படி இருக்கும் என்று எல்லோருக்கும் தெரியும். அதுவும் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதத்தில் சொல்லவே வேண்டாம். எலும்பை உருக்கும் குளிர் நிலவும் என்று நன்றாகவே தெரியும்.

கதுவா சிறுமி வழக்குக்கும், காஷ்மீர் குளிருக்கும் என்ன சம்பந்தம்? இருக்கிறது. ஒரு திறமையான அதிகாரி தான் விசாரிக்கும் வழக்கில், ஒரு துரும்பைக் கூட ஆதாரமாக மாற்றுவார் என்பதற்கு உதாரணமாக உள்ளார் கதுவாக வழக்கை விசாரித்த மூத்த அதிகாரி ஆர்.கே. ஜல்லா.

3 மாதங்களுக்கு முன்பு பதவியில் இருந்து ஓய்வு பெற்ற ஜல்லா, கதுவா வழக்கை முதல் முறையாக விசாரணைக்கு ஏற்ற போது நடந்த விஷயங்கள் குறித்து ஆங்கில ஊடகத்துக்கு பேட்டி அளித்துள்ளார்.

அப்போது அவர் கூறியிருப்பதாவது, குற்றச் சம்பவம் நடந்த இடத்துக்குச் சென்று பார்த்துவிட்டு, நேராக சஞ்சி ராம் (மூளையாக செயல்பட்ட குற்றவாளி) வீட்டுக்குச் சென்றேன். அவரிடமும், அவரது குடும்பத்தினரிடமும் விசாரித்தோம். அப்போது சஞ்சி ராமின் மகன் விஷால் பற்றியும் விசாரித்தோம். 

அப்போது மிகவும் கனீர் குரலில் சஞ்சி ராம் என்னிடம் பேசினார். மீரட்டில் எனது மகன் படித்துக் கொண்டிருக்கிறார். நீங்கள் வேண்டும் என்றால் தொலைபேசி அழைப்புகளைக் கூட ஆய்வு செய்து கொள்ளுங்கள் என்றார்.

இதில் இரண்டு விஷயங்கள் எனக்கு நெருடலை தந்தது. ஒன்று, முதலில் விஷால் பற்றி கேட்டதும், ஏன் அவர் தொலைபேசி அழைப்புகள் பற்றி ஆய்வு செய்ய சொல்கிறார், இரண்டாவது, ஜனவரி மாதம் காலை வேளையில் சஞ்சி ராமுக்கு ஏன் வேர்க்கிறது என்பதே. 

அவர் எதையோ மறைப்பதால்தான் குளிரும் காலை வேளையில் அவருக்கு வேர்க்கிறது என்பதை நான் அறிந்து கொண்டேன்.

கதுவா வழக்கில் சஞ்சி ராம் உள்ளிட்ட 3 பேருக்கு ஆயுள் தண்டனையும், காவல்துறையினர் உட்பட 3 பேருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது. விஷாலுக்கு எதிராக பலமான சாட்சியங்கள் இல்லாததால் அவர் விடுதலை செய்யப்பட்டார்.

இது குறித்து கருத்துக் கூறியிருக்கும் ஜல்லா, சஞ்சி ராம், தனது மகனை பாதுகாக்க அனைத்து விதங்களிலும் முயற்சி செய்தார். விஷாலின் விடுதலை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அரசு தரப்பு திட்டமிட்டுள்ளது. விசாரணையின் போது எங்கள் மீது எந்த அரசியல் அழுத்தமும் ஏற்படவில்லை. நாங்கள் சுதந்திரமாக செயல்பட்டோம் என்றும் அவர் கூறியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com