வியாழக்கிழமை 22 ஆகஸ்ட் 2019

நீரவ் மோடி ஜாமீன் மனு: பிரிட்டன் உயர்நீதிமன்றம் இன்று உத்தரவு

DIN | Published: 12th June 2019 02:34 AM


ரூ.13,000 கோடி வங்கிக் கடன் மோசடி தொடர்பாக, லண்டன் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தொழிலதிபர் நீரவ் மோடியின் ஜாமீன் மனு மீது பிரிட்டன் உயர்நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவு பிறப்பிக்கவுள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் நீரவ் மோடி, அவரது உறவினர் மெஹுல் சோக்ஸி உள்ளிட்டோர் ரூ.13, 000 கோடி அளவுக்கு கடன் மோசடியில் ஈடுபட்டது கடந்த ஆண்டு ஜனவரியில் தெரியவந்தது. ஆனால், அதற்கு முன்பே அவர்கள் வெளிநாட்டுக்குத் தப்பிவிட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ, அமலாக்கத் துறை, வருமான வரித் துறை உள்ளிட்டவை விசாரணை மேற்கொண்டு வருகின்றன. இந்தியாவில் உள்ள அவர்களது பல்வேறு சொத்துகளும் முடக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், பிரிட்டன் தலைநகர் லண்டனில் நீரவ் மோடி சுதந்திரமாக செயல்பட்டு வருவதாக தகவல் வெளியானது. இதையடுத்து, அமலாக்கத்துறை விடுத்த கோரிக்கையை ஏற்று, லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம், நீரவ் மோடிக்கு எதிராக கைது ஆணை பிறப்பித்தது. தற்போது அவர் லண்டன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே, தனக்கு ஜாமீன் கோரி நீரவ் மோடி அடுத்தடுத்து தாக்கல் செய்த 3 மனுக்களை வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. இதையடுத்து, பிரிட்டன் உயர்நீதிமன்றத்தில் அவர் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். அந்த மனு மீதான விசாரணை நீதிபதி இன்கிரிட் சிம்லெர் முன் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
அப்போது, நீரவ் மோடி எந்த நாட்டுக்கும் தப்ப மாட்டார் என்று உத்தரவாதம் அளிக்க பல்வேறு தனிநபர்கள் தயாராக இருப்பதாகவும், இந்திய அரசு குறிப்பிடுவது போல அவர் கிரிமினல் குற்றவாளி இல்லை என்றும் அவரது வழக்குரைஞர் வாதிட்டார். 
அதேசமயம், குற்றவாளிகளை நாடு கடத்துவது தொடர்பாக இந்தியா ஒப்பந்தம் மேற்கொள்ளாத நாடுகளுக்கு  நீரவ் மோடி தப்ப வாய்ப்புள்ளது என்று இந்திய அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த விவகாரம் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் கூடுதல் நேரம் எடுத்துப் பரிசீலிக்க உள்ளதாகவும், மனு மீதான உத்தரவை புதன்கிழமை பிறப்பிப்பதாகவும் தெரிவித்தார்.  
மும்பை சிறை அறை தயார்:
நீரவ் மோடி இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டால், அவருக்காக மும்பையில் உள்ள ஆர்தர் ரோடு சிறையில் பாதுகாப்பு மிகுந்த 12-ஆம் எண் அறை தயாராக உள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், அந்த அறையில் போதிய வெளிச்சமும் காற்றோட்டமும் உள்ளது. 3 மின்விசிறிகள், 6 மின் விளக்குகள், பொருள்கள் வைப்பதற்கான வசதி, மருத்துவ வசதி, சுத்தமான குடிநீர், போர்வை, தலையணை உள்ளிட்ட வசதிகள் உள்ளன என்றார்.


 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

ப.சிதம்பரம் கைது: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ நடவடிக்கை
இந்தியா-ஜாம்பியா இடையே : 6 ஒப்பந்தங்கள் கையெழுத்து
ரயில் நிலையங்களில் நெகிழி பயன்பாட்டுக்கு தடை: அக்.2 -இல் அமலுக்கு வருகிறது
முதல் ரஃபேல் விமானம் செப். 20-இல் ஒப்படைப்பு
பாகிஸ்தானுக்கு செல்லும் நதி நீரை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை: மத்திய நீர்வளத் துறை அமைச்சர்