திங்கள்கிழமை 16 செப்டம்பர் 2019

கதுவா பாலியல் வன்கொடுமை கொலை வழக்கு: மூவருக்கு ஆயுள் தண்டனை 

DIN | Published: 10th June 2019 06:39 PM

 

பதான்கோட்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் கதுவா பாலியல் வன்கொடுமை கொலை வழக்கில், குற்றவாளிகளென தீர்ப்பு வழங்கப்பட்ட ஆறு பேரில் மூவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் கதுவாவில் கடந்த ஜனவரி மாதம் 8 வயது சிறுமி ஒருவரை கோயிலில் அடைத்து வைத்து சிலர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிக் கொன்றதாகச் செய்திகள் வெளியாகின. 

இதுதொடர்பான வழக்கை விசாரிக்க வேண்டிய போலீஸ் அதிகாரிகளோ, குற்றவாளிகளுக்கு ஆதரவாகச் செயல்பட்டதுடன், ஆதாரங்களை அழிக்க முயன்றதாகவும் புகார் எழுந்தது.

நாடு முழுவதும் பேரதிர்ச்சியையும், பெரும் கொந்தளிப்பையும் இச்சம்பவம் ஏற்படுத்தியது. அதிகார துஷ்பிரயோகம் செய்ததாக காவல் துணை ஆய்வாளர் ஆனந்த் தத்தா, காவல் துறை சிறப்பு அதிகாரி தீபக் கஜுரியா ஆகியோர் மாநில சிறப்பு புலனாய்வுக் குழுவால் கைது செய்யப்பட்டனர். அவர்களைத் தவிர சிறுவன் ஒருவர் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இதனிடையே, உயிரிழந்த சிறுமியின் பெற்றோரின் கோரிக்கைப்படி, காஷ்மீரில் நடைபெற்று வந்த வழக்கு விசாரணையை பஞ்சாப் மாநிலம் பதான்கோட் அமர்வு நீதிமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் மாற்றியது. அதன்பேரில் மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதி தேஜ்விந்தர் சிங் அதை விசாரித்து வருகிறார்.

அச்சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவர்கள், அவரை தொடர்ந்து மயக்கநிலையில் வைத்திருக்க சில மாத்திரைகளை கொடுத்ததாகவும், சாப்பாடு ஏதுமின்றி தொடர்ந்து வெறும் வயிற்றில் மாத்திரை கொடுத்ததால், அச்சிறுமி கோமா நிலைக்கு சென்றுவிட்டதாகவும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பது முக்கியத்துவம் வாய்ந்த தகவலாக கருதப்படுகிறது.

மேலும், சிறுமி வசித்து வந்த பகுதியில் வாழ்ந்த சிறுபான்மை நாடோடி இனத்தவர்களை அந்த இடத்திலிருந்து வெளியேற்றுவதற்காகவே இந்தச் சம்பவம் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டதாகவும் காவல்துறையினர் தங்களது குற்றப்பத்திரிகையில் தெரிவித்திருந்தனர். 

இந்தச் சம்பவம் தொடர்பாக கிராமத் தலைவர் சஞ்சி ராம், அவரது மகன் விஷால், 18 வயதுக்கு உள்பட்டவரான ஆனந்த் தத்தா, காவல்துறை சிறப்பு அதிகாரிகள் தீபக் கஜுரியா, சுரேந்தர் வர்மா உள்ளிட்டோரை குற்றப் பிரிவு காவல்துறையினர் கைது செய்திருந்தனர். 

வழக்கின் முக்கிய ஆதாரங்களை அழிக்க சஞ்சி ராமிடம் இருந்து ரூ.4 லட்சம் லஞ்சம் பெற்றதாக காவல்துறை துணை ஆய்வாளர் ஆனந்த், காவலர் திலக் ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு ஜூன் முதல் வாரம் முதலாக இந்த வழக்கு விசாரணை நாள்தோறும் காணொலிக்காட்சி வாயிலாக நடைபெற்று வந்தது.  தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில் திங்கள் மதியம் இந்த வழக்கில்  தீர்ப்பளிக்கப்பட்டது.

குற்றஞ்சாட்டப்பட்ட 7 பேரின் தீர்ப்பும் தனித்தனியாக வாசிக்கப்பட்டது. அதில் கிராமத் தலைவர் சஞ்சி ராம், அவரது மகன் விஷால், 18 வயதுக்கு உள்பட்டவரான ஆனந்த் தத்தா, காவல்துறை சிறப்பு அதிகாரிகள் தீபக் கஜுரியா, சுரேந்தர் வர்மா உட்பட  6 பேர் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.  இவர்களுக்கான தண்டனை விவரம் விரைவில் வெளியிடப்படும்.என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் கதுவா பாலியல் வன்கொடுமை கொலை வழக்கில், குற்றவாளிகளென தீர்ப்பு வழங்கப்பட்ட ஆறு பேரில் மூவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 6பேரில் சஞ்சிராம், தீபக் கஜூரியா, பர்வேஷ் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை யும், மீதமுள்ள ஆனந்த் தத்தா, சுரேந்தர் வெர்மா மற்றும் திலக் ராஜ் ஆகீய மூவருக்கும் தலா ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம், வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட சஞ்சி ராமின் மகன் விஷால், சம்பவம் நடந்த போது உத்தரப்பிரதேச மாநிலம் முஸாபர்நகரில் கல்லூரியில் தேர்வெழுதியது தொடர்பான ஆவணங்களை ஆதாரமாக அளித்ததை நீதிபதி ஏற்றுக் கொண்டுள்ளார்.

சந்தேகத்தின் பலனை குற்றம்சாட்டப்பட்டவருக்கு சாதகமாக அளித்து, குற்றம்சாட்டப்பட்ட விஷாலை விடுதலை செய்வதாகவும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்  

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
Tags : J&K kathua rape murder verdict punishment life imprisonment jail term

More from the section

பாலியல் வன்கொடுமை, "போக்úஸா' வழக்குகளை விசாரிக்க 1,023 சிறப்பு விரைவு நீதிமன்றங்கள்: மத்திய அரசு முடிவு
கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து: 8 பேர் பலி
அரசியல் சாசன உரிமைகளைப்  பாதுகாக்க பொதுமக்கள் தயாராக வேண்டும்: மம்தா
ஹரியாணாவில் என்ஆர்சி பட்டியல் அமல்படுத்தப்படும்: முதல்வர் கட்டர்
பாகிஸ்தான் உடைந்து சிதறும்: ராஜ்நாத் சிங் எச்சரிக்கை