புதன்கிழமை 21 ஆகஸ்ட் 2019

தமிழக, ஆந்திர நலனுக்காக பாஜக தொடர்ந்து பாடுபடும்: திருப்பதியில் பிரதமர் மோடி உரை

DIN | Published: 09th June 2019 08:05 PM

 

மாலத்தீவு மற்றும் இலங்கைக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்ட பின்னர் பிரதமர் நரேந்திர மோடி திருப்பதிக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை வந்தடைந்தார். ரேணிகுண்டா விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கிருந்து திருமலைக்கு பயணித்து ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்தார்.

பிரதமர் மோடியுடன், ஆந்திர ஆளுநர் இ.எஸ். எல். நரசிம்மன், முதல்வர் ஒய். எஸ். ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோரும் ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்தார்கள். பின்னர் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:

இலங்கைப் பயணத்தில் எனக்கு கூடுதல் நேரம் செலவானதால் இங்கு வர தாமதமானது. அதற்காக நான் முதலில் உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். ஆந்திர முதல்வராக பதவியேற்றுள்ள ஜெகன்மோகன் ரெட்டிக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். அவர் ஆந்திர மாநிலத்தை வளர்ச்சிப் பாதையை நோக்கி அழைத்துச் செல்வார். மத்திய அரசு எப்போதும் ஆந்திர அரசுக்கு உறுதுணையாக இருக்கும் என்று உறுதியளிக்கிறேன்.

ஏழுமலையான் அருளைப் பெற கடந்த காலங்களில் பலமுறை திருப்பதியில் தரிசித்துள்ளேன். இப்போது 130 கோடி மக்களும் வளம் பெற வேண்டிக்கொண்டேன். 

ஆந்திராவிலும், தமிழகத்திலும் மக்கள் தங்களின் ஜனநாயகக் கடமையை முறையாக செய்துள்ளனர். பாஜக இங்கு வெற்றிபெற்றதா, தோல்வியுற்றதா என்பது முக்கியமில்லை. மக்களுக்கு எப்போதும் சேவை செய்ய வேண்டும் என்பது தான் முக்கியம். ஜனநாயகத்தை காப்பாற்றிய மக்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். 

நான் உட்பட பாஜகவைச் சேர்ந்த ஒவ்வொருவரும் மக்களின் சேவகன் தான். பாஜக என்றைக்குமே தேர்தலுக்கான கட்சி கிடையாது. ஆந்திர மற்றும் தமிழகத்தின் நலனுக்காக பாஜக தொடர்ந்து பாடுபடும்.

நாட்டு மக்களின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்காக மட்டுமே பாஜக பாடுபடுகிறது. அதனால் தான் மக்களுக்கும் பாஜகவை இரண்டாவது முறையாக தொடர்ந்து தேர்ந்தெடுத்துள்ளனர் என்று தெரிவித்தார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

என் மீது எந்த குற்றச்சாட்டு இல்லை என ப. சிதம்பரம் பேட்டி
அந்தமான் நிகோபார் தீவுகளில் மிதமான நிலநடுக்கம்
சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை வெள்ளிக்கிழமை விசாரிக்கிறது உச்ச நீதிமன்றம்
சிதம்பரம் எங்கே சென்றார்? 
உத்தரபிரதேசத்தில் மூன்று அம்பேத்கர் சிலைகள் சேதம்: போலீஸ் குவிப்பு