காணாமல் போன ஏன்-32 விமானம் பற்றி தகவல் கொடுப்போருக்கு பரிசுத் தொகை அறிவிப்பு

அஸ்ஸாம் மாநிலத்தில் இந்திய விமானப்படை விமானம் காணாமல் போன சம்பவத்தில் அதுபற்றி தகவல் கொடுத்தால் ரூ.50 ஆயிரம் பரிசுத் தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
காணாமல் போன ஏன்-32 விமானம் பற்றி தகவல் கொடுப்போருக்கு பரிசுத் தொகை அறிவிப்பு


குவகாத்தி: அஸ்ஸாம் மாநிலத்தில் இந்திய விமானப்படை விமானம் காணாமல் போன சம்பவத்தில் அதுபற்றி தகவல் கொடுத்தால் ரூ.50 ஆயிரம் பரிசுத் தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

காணாமல் போன இந்திய விமானப் படைக்குச் சொந்தமான ஏன்-32 விமானத்தைக் கண்டுபிடிக்க உண்மையான தகவலை அளிப்போருக்கு ரூ.50 ஆயிரம் பரிசுத் தொகை வழங்கப்படும் என்று அருணாச்சலப் பிரதேச மாநிலம் சியாங் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாமின் ஜோர்ஹாட் விமானப்படை தளத்தில் இருந்து ஏஎன்-32 ரகத்தை சேர்ந்த போக்குவரத்துப் பயன்பாட்டிற்கான விமானம் திங்கள்கிழமை பகல் 12.35 மணி அளவில் அருணாசலப் பிரதேசம் மெக்காவில் உள்ள ராணுவதளத்திற்குப் புறப்பட்டுச் சென்ற நிலையில், புறப்பட்ட 35 நிமிடத்தில் அந்த விமானம் கட்டுப்பாட்டு அறையில் ரேடார் கண்காணிப்பில் இருந்து மறைந்தது. தொடர்ந்து கட்டுப்பாட்டு அறையுடன் அந்த விமானத்திற்கான தகவல் தொடர்பு இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. இதையடுத்து அதில் பயணம் செய்த 5 பயணிகள் உள்ளிட்ட 13 பேரின் நிலை கேள்விக்குறியானது.

இதைத் தொடர்ந்து அந்த விமானத்தைத் தேடும் பணியில் சுகோய் -30, சி-130 ஆகிய இரு விமானப்படை விமானங்கள் தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. இருந்தும் விமானம் கண்டறியப்படவில்லை. இதையடுத்து பாதுகாப்பு அமைச்சகத்தில் இருந்து வந்த உத்தரவைத் தொடர்ந்து இந்திய கடற்படைக்குச் சொந்தமான அரக்கோணம், ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமானதளத்தில் இருந்து உலகின் அதிநவீன போர் விமானமான பி8ஐ செவ்வாய்க்கிழமை மாலை புறப்பட்டுச் சென்றது. தொடர்ந்து 16 மணி நேரம் இந்தியாவின் வடகிழக்கு மாநிலப் பகுதிகளில் விமானத்தைத் தேடும் பணியில் ஈடுபட்ட இந்த விமானம் புதன்கிழமை திரும்பி அரக்கோணம் படைத்தளத்திற்கு வந்தது. 

இந்த பி8ஐ போர் விமானம் தொடர்ந்து இடைவிடாமல் 16 மணி நேரம் பறக்கக்கூடியது, பல ஆயிரம் அடி உயரத்தில் பறந்தாலும் கடல் மட்டத்தில் கீழே 3ஆயிரம் அடி ஆழம் வரை இருப்பவற்றை அறிந்துகொள்ளும் திறன் உடையது என்பது குறிப்பிடத்தக்கது.

தீவிர தேடுதல் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com