இந்தியா

மன்னித்துவிடுங்கள்: வி.ஜி. சித்தார்த்தாவின் கடைசி நாள் எப்படி இருந்தது?

31st Jul 2019 06:22 PM

ADVERTISEMENT


பெங்களூரு: காஃபே காஃபி டே நிறுவனர் சித்தார்த்தாவின் தற்கொலை பல்வேறு கேள்விகளை விட்டுச் சென்றுள்ளது.

வி.ஜி. சித்தார்த்தாவின் குடும்பத்தினருக்கு அது ஒரு சாதாரண திங்களாக விடிந்திருக்கலாம். ஆனால், சித்தார்த்தாவுக்கு அப்படியில்லை.

அன்றைய தினம், வழக்கத்தை விட முன்கூட்டியே அவர் வீட்டில் இருந்து கிளம்பும் போது, நிச்சயம் யாருக்கும் தெரிந்திருக்காது, அவர் சடலமாகத்தான் இனி வீடு திரும்புவார் என்று.

ஆனால், சித்தார்த்தாவின் செயல்பாடுகளில், அவரது மனைவி மாளவிகாவுக்கோ அல்லது மாமனார் எஸ்.எம். கிருஷ்ணாவுக்கோ எந்த வித்தியாசமும் தெரிந்திருக்கவில்லை.  ஒரே ஒரு விஷயத்தைத் தவிர, வழக்கமாக 10 மணியளவில் வீட்டை விட்டுக் கிளம்பும் சித்தார்த்தா, அன்று காலை 8 மணிக்கே கிளம்பியது மட்டும்தான்.

ADVERTISEMENT

ஞாயிறன்று வீட்டில் இருந்த சித்தார்த்தா பலருக்கும் நிறைய தொலைபேசி அழைப்புகளை செய்துள்ளார். மனைவி, மாமனாருடன் மதிய உணவு சாப்பிட்டுவிட்டு வெளியே சென்ற அவர் மீண்டும் வீட்டுக்கு வந்து இரவு உணவை முடித்துவிட்டு உறங்கச் சென்றுள்ளார். அன்றை இரவு தான் அவர் தனது தற்கொலை முடிவை எடுத்திருக்க வேண்டும் என்று கூறுகிறார்கள் அவரது நெருங்கிய நண்பர்கள்.

கடந்த காலங்களில் வருமான வரித்துறையினரின் அழுத்தத்தால் அவர் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்ததாக மட்டும் அவரது குடும்பத்தினர் கூறுகிறார்கள்.

சித்தார்த்தா - மாளவிகா தம்பதிக்கு இரண்டு பிள்ளைகள், அமர்தியா அமெரிக்காவில் இருக்கிறார், இஷான் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கிறார்.

திங்கட்கிழமை காலை 8 மணிக்கு அலுவலகத்துக்குச் சென்ற சித்தார்த்தா, அங்கிருந்து 11 மணிக்கு சக்லேஷ்புராவுக்குச் செல்லுமாறு கார் ஓட்டுநரிடம் கூறியுள்ளார். தனது சொந்த ஊருக்கு செல்வதை எப்போதுமே விரும்பும் சித்தார்த்தா, அன்று சக்லேஷ்புராவுக்குச் செல்வதாக தனது குடும்பத்தாரிடமும் சொல்லிவிட்டார்.

கடந்த திங்கட்கிழமை நேத்ராவதி நதியில் குதித்து அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முடிவு செய்த பிறகு அவரது செயல்பாடுகள் எப்படி இருந்தது?

சித்தார்த்தாவின் கார் ஓட்டுநர் பசவராஜ் பட்டீல் அது பற்றி கூறுகையில், அவர் குறைந்தது 15 முதல் 20 தொலைபேசி அழைப்புகளை செய்தார், பேசியவர்களிடம் எல்லாம் அவர் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்.

நிறைய பேருக்கு போன் செய்து சாரி சொன்னார். அவரது குரல் மிகவும் கவலை தோய்ந்து காணப்பட்டது. ஆனால் அவர் தற்கொலை செய்து கொள்வார் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை, என கதறியபடி சொல்கிறார்.

95 வயதாகும் கங்கையா ஹெக்டேவின் ஒரே மகன்தான் சித்தார்த்தா. மைசூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார் கங்கையா என்பது குறிப்பிடத்தக்கது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT