இந்தியா

நிறைவேறியது முத்தலாக் தடை மசோதா

31st Jul 2019 04:30 AM

ADVERTISEMENT

 *  அதிமுக, ஜேடியூ வெளிநடப்பு

*பிஜேடி ஆதரவு

உடனடியாக மூன்று முறை தலாக் (முத்தலாக்) கூறி விவாகரத்து செய்யும் நடைமுறையை கிரிமினல் குற்றமாக்க வழிசெய்யும் மசோதா நாடாளுமன்ற மக்களவையைத் தொடர்ந்து மாநிலங்களவையிலும் செவ்வாய்க்கிழமை நிறைவேறியது. 
மசோதாவுக்கு பாஜக கூட்டணியில் இல்லாத பிஜு ஜனதா தளம் ஆதரவு அளித்ததும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள அதிமுக, ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியூ) ஆகிய கட்சிகள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்ததும் மசோதா நிறைவேற உதவியாக அமைந்தன.


முஸ்லிம் பெண்களிடம் அவர்களது கணவர்கள் தலாக் என்று அடுத்தடுத்து மூன்று முறை கூறி விவாகரத்து செய்யும் நடைமுறை செல்லாது என்று உச்ச நீதிமன்றம் கடந்த 2017-ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது.
அதன் பிறகும் இந்த நடைமுறை தொடர்வதாகக் கருதிய மத்திய அரசு,  இந்த நடைமுறையைத் தடுக்க கடந்த பிப்ரவரி 21-ஆம் தேதி அவசரச் சட்டம் கொண்டுவந்தது. அதன் பின் அவசரச் சட்டத்துக்கு மாற்றாக முத்தலாக் தடை மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு, கடந்த வாரம் நிறைவேறியது. 
இந்நிலையில், முஸ்லிம் பெண்கள் (திருமண உரிமைப் பாதுகாப்பு) மசோதா எனப்படும் முத்தலாக் தடை மசோதாவை மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்தார். அதன் பின் மசோதா மீது எம்.பி.க்கள் விவாதம் நடத்தினர்.  
அதையடுத்து, முத்தலாக் தடை மசோதாவை மாநிலங்களவை தேர்வுக் குழுவுக்கு அனுப்பி பரிசீலிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தீர்மானம் ஒன்றைக்  கொண்டுவந்தன. அதன் மீது நடைபெற்ற வாக்கெடுப்பில் தீர்மானத்தை எதிர்த்து 100 வாக்குகளும், ஆதரித்து 84 வாக்குகளும் பதிவாயின. இதனால் அத்தீர்மானம் தோல்வியடைந்தது.
அதன் பின், முத்தலாக் தடை மசோதா மீது வாக்கெடுப்பு நடைபெற்றது. அப்போது, மசோதாவை பாஜக கூட்டணியில் இடம்பெறாத பிஜு ஜனதா தளம் ஆதரித்து வாக்களித்தது. வாக்கெடுப்பைப் புறக்கணித்து பாஜகவின் கூட்டணிக் கட்சிகளான அதிமுக, ஐக்கிய ஜனதா தளம் ஆகியவற்றின் எம்.பி.க்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
இதனால் 242 எம்.பி.க்கள் பலம் கொண்ட மாநிலங்களவையில் பெரும்பான்மைக்குத் தேவையான எம்.பி.க்களின் எண்ணிக்கை 121 என்ற நிலை மாறி, அதற்கும் குறைவான எம்.பி.க்கள் பலம் இருந்தாலே பெரும்பான்மை கிடைக்கும் என்ற நிலை ஏற்பட்டது. 
ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மாநிலங்களவையில் 107 எம்.பி.க்கள் பலம் இருக்கிறது. 
தவிர, சமாஜவாதி, பகுஜன் சமாஜ், தெலங்கானா ராஷ்டிர சமிதி, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் போன்ற கட்சிகளின் சில எம்.பி.க்கள் அவைக்கு வராததும் அரசுக்கு அனுகூலமாக அமைந்தது. 
வாக்கெடுப்பின் இறுதியில், 99 எம்.பி.க்களின் ஆதரவுடன் முத்தலாக் மசோதா நிறைவேறியது.  அதை எதிர்த்து 84 எம்.பி.க்கள் வாக்களித்திருந்தனர்.
மக்களவையைத் தொடர்ந்து,   மாநிலங்களவையிலும் இந்த மசோதா நிறைவேறி விட்டதால், அடுத்ததாக இது குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும். அவர் ஒப்புதல் அளித்ததும் முத்தலாக் தடுப்புச் சட்டம், ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்ட அவசரச் சட்டத்துக்கு மாற்றாக அமலுக்கு வந்து விடும்.
அரசியல் கோணத்தில் பார்க்கக் கூடாது: முன்னதாக, முத்தலாக் மசோதாவை மாநிலங்களவையில் தாக்கல் செய்து சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பேசியது:
இந்த மசோதாவை அரசியல் கண்ணோட்டத்துடனோ, வாக்கு வங்கி அரசியல் கோணத்திலோ பார்க்கக் கூடாது. இது மனிதாபிமானம் குறித்த பிரச்னை. மேலும், இந்த மசோதா பாலின கண்ணியம், நீதி, சமத்துவம் ஆகியவற்றை உறுதிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
20-க்கும் மேற்பட்ட இஸ்லாமிய நாடுகள் பல்வேறு வடிவங்களில் முத்தலாக் நடைமுறையை கட்டுப்படுத்தியுள்ளன. இந்தியா மதச்சார்பற்ற நாடு. ஆனாலும் இங்கும் ஏதோ ஒரு காரணத்துக்காக இந்த நடைமுறையைக் கட்டுப்படுத்த முடியாதது துரதிருஷ்டவசமானது. இந்த மசோதாவுக்கு அனைத்து எம்.பி.க்களும் ஆதரவு தர வேண்டும். 
உச்ச நீதிமன்றம் முத்தலாக் நடைமுறைக்கு தடை விதித்த பிறகு அது நின்று விடும் என்று அரசு கருதியது. ஆனால் அவ்வாறு நடக்கவில்லை. உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகும் சட்டவிரோதமாக முத்தலாக் கூறும் 574 சம்பவங்கள் நிகழ்ந்ததாகவும், இந்த நடைமுறையைத் தடுப்பதற்கான அவசரச்சட்டத்தை மத்திய அரசு பிறப்பித்த பிறகு 101 சம்பவங்கள் நிகழ்ந்ததாகவும் தெரிய வந்துள்ளது. 
இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு இருந்தாலும் அது அமல்படுத்தப்படவில்லை. அதனாலேயே நாம் சட்ட மசோதா கொண்டுவந்துள்ளோம். சட்டம் என்பது தடுப்பாகச் செயல்படும்.
முத்தலாக் நடைமுறை தொடர்பாக ஓர் ஆண்மகன் மீது அவரது மனைவியோ, உறவினரோ காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்ய முடியும் என்ற ஷரத்து இந்த மசோதாவில் உள்ளது. எனினும், அதே நேரத்தில் மனைவி தரப்பின் கருத்தைக் கேட்டறிந்த பிறகு கணவருக்கு ஒரு மாஜிஸ்திரேட் ஜாமீன் வழங்கவும் வழிவகை உள்ளது என்றார் அவர்.
இந்த மசோதாவை அவையில் அமைச்சர் தாக்கல் செய்வதற்கு முன், காங்கிரஸ் கட்சியின் டி.சுப்பராமி ரெட்டி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பினய் விஸ்வம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இளமரம் கரீம், கே.கே.ராகேஷ் ஆகியோர் முத்தலாக் அவசரச் சட்டத்தை எதிர்த்து தீர்மானம் கொண்டு வந்தனர். அது வாக்கெடுப்பில் தோற்கடிக்கப்பட்டது.
அவையில் மசோதா மீதான விவாதத்தில் பங்கேற்று எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆஸாத் பேசியது: குடும்பப் பிரச்னைகளை வைத்து முஸ்லிம் குடும்பங்களை அழிப்பதற்காக, அரசியல் உள்நோக்கத்துடன் இந்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது. முத்தலாக் மசோதாவை தேர்வுக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பி, தலாக் கூறுவதை சிவில் குற்றமாக மாற்றுமாறு எதிர்க்கட்சிகள் கோரின. 
அதை அரசு ஏற்காததால் இந்த மசோதாவை எதிர்க்கும் நிலைக்கு எதிர்க்கட்சிகள் தள்ளப்பட்டுள்ளன என்றார் அவர்.
பாஜகவின் கூட்டணிக் கட்சியான ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த வசிஷ்ட நாராயண் சிங்: எம்.பி.க்களாகிய நாம் எதிர்த்துப் பேசவும், சில விஷயங்களை ஆதரிக்கவும் இங்கு வந்துள்ளோம். முத்தலாக் விவகாரத்தில் எனக்கு இன்று உடன்பாடு இல்லை. எனினும், நாளை நான் இதை ஆதரிக்கவும் வாய்ப்புள்ளது  என்றார்.

ADVERTISEMENT


பாஜகவைச் சேர்ந்த முக்தார் அப்பாஸ் நக்வி: உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மேலும் திறன்வாய்ந்த முறையில் அமல்படுத்தவே இச்சட்டத்தை மத்திய அரசு கொண்டு வருகிறது. பெண்களுக்கு அதிகாரமளிக்க மோடி அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. 
மக்களவையில் இந்த மசோதாவை காங்கிரஸ் ஆதரித்தது. அதேசமயம், இம்மசோதாவை மாநிலங்களவைக்கு வந்ததும் அக்கட்சி தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டது ஏன்?  மசோதாவை ஆதரிக்க இன்னமும் கால அவகாசம் உள்ளது. 
அது பற்றி அவர்கள் சிந்திக்கலாம். எதிர்க்கட்சிகள் எழுப்பிய அனைத்து ஆட்சேபங்களையும் கருத்தில் கொண்டே மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது. நாம் இன்று ஒரு தவறு செய்தால் ஒரு தலைமுறையே அதனால் பாதிக்கப்படும். இந்த மசோதாவை நாடாளுமன்றம் நிறைவேற்ற வேண்டும் என்றார்.
முத்தலாக் மசோதாவை முந்தைய மோடி அரசு கடந்த 2017-ஆம் ஆண்டு மக்களவையில் தாக்கல் செய்து, நிறைவேற்றியது. எனினும், மாநிலங்களவையில் பாஜக கூட்டணிக்குப் பெரும்பான்மை பலம் இல்லாத காரணத்தால் அங்கு இம்மசோதா நிறைவேறவில்லை.

தேர்வுக் குழு பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும்
அதிமுக உறுப்பினர் ஏ.நவநீதகிருஷ்ணன் பேசுகையில், உடனடி முத்தலாக் நடைமுறை இஸ்லாத்தில் அனுமதிக்கப்படவில்லை என்று உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால், உடனடி முத்தலாக் நடைமுறையே இல்லாதபோது  எப்படி குற்றம் நிகழ்ந்ததாக கருதப்பட்டு தண்டனை வழங்கப்பட முடியும்?
முஸ்லிம் திருமணம், சிவில் சட்ட ஒப்பந்தத்தின்கீழ் வருவதால், அதை மீறுபவர்களை கிரிமினல் குற்றத்தின் கீழ் விசாரிக்க இயலாது.
இந்த சட்டம் 2018, செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளது. இது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது.
திருமணம், விவாகரத்து, குழந்தைகள் தத்தெடுப்பு, கூட்டுக் குடும்பம் ஆகியவை தனிநபர் சட்டத்தைச் சார்ந்தது என நமது அரசியல் அமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த முத்தலாக் சட்டத்தால் குடும்பத் தலைவருக்கு தண்டனை வழங்கும்போது, அந்தக் குடும்பத்தில் உள்ள குழந்தை பாதிக்கப்படும். அந்த குழந்தை குறித்து மாஜிஸ்திரேட்டே முடிவு எடுக்கலாம் என மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், மாஜிஸ்திரேட்டுக்கே இதுபோன்ற அதிகாரம் அளிப்பது சரியல்ல என்பது எனது கருத்து. 
இந்த மசோதாவுக்கு அதிமுக எதிர்ப்பு தெரிவிக்கிறது. முத்தலாக் தடை மசோதாவை தேர்வுக் குழு பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும் என்றார்.

மோடி, அமித் ஷா வரவேற்பு

நாடாளுமன்றத்தில் முத்தலாக் தடை மசோதா நிறைவேறியதை வரவேற்பதாக பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் தெரிவித்துள்ளனர்.


இதுகுறித்து சுட்டுரையில் மோடி வெளியிட்ட பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:
நாடாளுமன்றத்தில் முத்தலாக் தடை மசோதா நிறைவேறியது பாலின நீதிக்கு கிடைத்த வெற்றி. சமூகத்தில் பாலின சமநிலையை ஏற்படுத்த இந்த மசோதா உதவும். பல காலமாக நீடித்து வந்த நடைமுறை முடிவுக்கு வந்தது. இது இந்திய வரலாற்றில் நிச்சயம் இடம்பெறும். முத்தலாக் நடைமுறைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் இந்தியா மகிழ்ச்சி அடைந்துள்ளது! இந்த நடைமுறை முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதன் மூலம் பெண்களுக்கு அதிகாரமளிக்கப்பட்டுள்ளது என்று மோடி குறிப்பிட்டுள்ளார்.


அமித் ஷா: முத்தலாக் நடைமுறைக்கு தடை விதிக்கும் மசோதாவை நிறைவேற்றிக் காட்டிய பிரதமர் மோடிக்கு வாழ்த்துகள். வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்த அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றி.

ADVERTISEMENT
ADVERTISEMENT