இந்தியா

தமிழக பேரவைத் தலைவருக்கு எதிரான வழக்கு வாபஸ்: 3 அதிருப்தி எம்எல்ஏக்கள் விவகாரம்

31st Jul 2019 04:29 AM

ADVERTISEMENT


அதிமுகவின் 3 அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்ட விவகாரத்தில் தமிழக பேரவைத் தலைவர் பி. தனபாலுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை திரும்பப் பெற்றுக் கொள்வதாக வழக்குத் தொடுத்த மூன்று எம்எல்ஏக்களின் சார்பில் தெரிவிக்கப்பட்டதையடுத்து, அந்த வழக்கை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
எம்எல்ஏக்கள் ரத்தினசபாபதி (அறந்தாங்கி), கலைச்செல்வன் (விருத்தாசலம்), பிரபு (கள்ளக்குறிச்சி) ஆகியோர் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் (அமமுக) பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுடன் தொடர்பில் உள்ளதாகவும், அவர் சார்ந்த நிகழ்ச்சிகளில் அவர்கள் பங்கேற்று வருவதாகவும் கடந்த ஆண்டு அரசு தலைமைக் கொறடா ராஜேந்திரன் பேரவைத் தலைவரிடம் புகார் தெரிவித்திருந்தார். மேலும், சில புகைப்படங்களை ஆதாரங்கள் எனக் கூறி, அந்த மூன்று பேர் மீது மீண்டும் கடந்த ஏப்ரல் 26-ஆம் தேதி புகார் மனு அளித்திருந்தார். அதை ஏற்றுக்கொண்ட பேரவைத் தலைவர் பி.தனபால், மூன்று எம்.எல்.ஏ.க்களிடமும் விளக்கம் கேட்டு கடந்த ஏப்ரல் இறுதியில் நோட்டீஸ் அனுப்பினார். 
இந்நிலையில், பேரவைத் தலைவரின் நடவடிக்கைக்குத் தடை விதிக்கக் கோரி எம்.எல்.ஏ.க்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன், ஏ. பிரபு ஆகியோர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் தனித் தனியாக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம், மூன்று எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் தமிழக சட்டப்பேரவைத் தலைவரின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் தடை விதித்தது. மேலும், இது தொடர்பாக பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டது.
இதனிடையே, இந்த மனுக்கள் தொடர்பாக வழக்குரைஞர் அமித் ஆனந்த் திவாரி, உச்சநீதிமன்ற நீதிபதிகள் எஸ்.ஏ. பாப்தே, ஆர். சுபாஷ் ரெட்டி, பி.ஆர். கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் செவ்வாய்க்கிழமை ஆஜராகி, மாறியுள்ள அரசியல் சூழலைக் கருதி, பேரவைத் தலைவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை திரும்பப் பெற்றுக் கொள்வதாக தெரிவித்தார். இதையேற்றுக் கொண்ட நீதிபதிகள், பேரவைத் தலைவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை திரும்பப் பெறுவதற்கு அனுமதி அளித்து, வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT