இந்தியா

சிவசேனை எம்.பி.க்கள் பிரதமருடன் சந்திப்பு

31st Jul 2019 01:10 AM

ADVERTISEMENT


பயிர்க் காப்பீட்டுத் திட்டத்திலுள்ள குறைபாடுகளைக் களைவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்று பிரதமர் நரேந்திர மோடியிடம் சிவசேனை எம்.பி.க்கள் வலியுறுத்தினர்.
சிவசேனை கட்சியின் எம்.பி.க்கள் அடங்கிய குழு, பிரதமர் நரேந்திர மோடியை செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினர். இந்தச் சந்திப்பின்போது, மகாராஷ்டிரத்திலுள்ள விவசாயிகள் வறட்சி காரணமாகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டதாகவும், பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அவர்களுக்கு முறையான இழப்பீடு வழங்கப்படவில்லை எனவும் புகார் தெரிவித்தனர்.
பிரதமருடனான சந்திப்பு தொடர்பாக, சிவசேனை மக்களவைக் குழுத் தலைவர் வினய் ராவத் உள்ளிட்டோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மத்திய அரசு செயல்படுத்தி வரும் பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் பல்வேறு குறைபாடுகள் காணப்படுகின்றன. இதை பிரதமர் மோடியிடம் எடுத்துரைத்தோம். இந்தக் குறைபாடுகளை நீக்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கக் கோரியும் பிரதமரிடம் வேண்டுகோள் விடுத்தோம்.
முந்தைய 5 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட சிறந்த சாகுபடி அளவைக் கணக்கில் கொண்டு, அதற்கு ஏற்ப பயிர்க் காப்பீடு வழங்கப்பட வேண்டும். 
விவசாயிகளை விட காப்பீட்டு நிறுவனங்களே இத்திட்டத்தால் அதிக பலனடைந்து வருகின்றன. கிராமங்களில் இணையதள வசதிகள் இல்லாத காரணத்தினால், இயற்கைப் பேரிடரால் பயிர்கள் பாதிக்கப்பட்ட 24 மணி நேரங்களில், விவசாயிகளால் காப்பீடு கோரி விண்ணப்பிக்க இயலாத சூழல் காணப்படுகிறது.  
எனவே, விவசாயிகளுக்கான பயிர்க் காப்பீட்டை வழங்கும் காப்பீட்டு நிறுவனங்கள், மாவட்ட மற்றும் வட்ட அளவில் அதிகாரிகளை நியமிக்க வேண்டும். 
இதன் மூலம், விவசாயிகள் எளிதில் பயிர்க் காப்பீடு கோரி விண்ணப்பிக்க முடியும். விவசாயிகளுக்குக் கடன் வழங்குவதில், பொதுத்துறை வங்கிகள் மெத்தனம் காட்டி வருகின்றன. 
கடந்த ஜூன் மாதம் 30-ஆம் தேதி வரை, 11 சதவீத விவசாயிகளுக்கே பொதுத்துறை வங்கிகள் கடன் வழங்கியுள்ளது. இதனால், விவசாயம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது என்று அவர்கள் தெரிவித்தனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT