இந்தியா

கர்நாடக பேரவைத் தலைவர் தேர்தல்: விஸ்வேஸ்வர ஹெக்டே காகேரி வேட்புமனு தாக்கல்

31st Jul 2019 01:20 AM

ADVERTISEMENT


கர்நாடக சட்டப்பேரவைத் தலைவர் தேர்தலில் பாஜகவைச் சேர்ந்த எம்எல்ஏ விஸ்வேஸ்வர ஹெக்டே காகேரி வேட்புமனு தாக்கல் செய்தார்.
14 மாதங்களாக நடைபெற்று வந்த மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசு பெரும்பான்மை பலத்தை இழந்ததால், ஆட்சி கவிழ்ந்தது. இதையடுத்து, முதல்வர் எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றது. 
இந்த நிலையில்,  திங்கள்கிழமை பேரவையில் நடைபெற்ற பாஜக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு மற்றும் நிதி மசோதா நிறைவேற்றத்தின் முடிவில் பேரவைத் தலைவராகயிருந்த ரமேஷ் குமார் தனது பதவியை ராஜிநாமா செய்தார். அவரது ராஜிநாமாவை ஏற்றுக் கொண்ட ஆளுநர் வஜுபாய் வாலா, புதிய பேரவைத் தலைவர் தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டார்.  அதன்படி, புதன்கிழமை (ஜூலை 31) காலை 11 மணிக்கு பேரவைத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெறுகிறது.
அதற்கான வேட்பு மனுக்களை செவ்வாய்க்கிழமை நண்பகல் 12 மணிக்குள் பேரவைச் செயலகத்தில் தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டது.  இதையடுத்து, பாஜக சார்பில் கே.ஜி.போப்பையா,  விஸ்வேஸ்வர ஹெக்டே காகேரி, சுரேஷ்குமார் ஆகியோரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன. இறுதியில், விஷ்வேஸ்வர ஹெக்டே காகேரியின் பெயர் முடிவு செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை விஸ்வேஸ்வர ஹெக்டே காகேரி மனு தாக்கல் செய்தார். அவருடன் முதல்வர் எடியூரப்பா, பாஜகவின் மூத்த தலைவர்கள், ஜெகதீஷ் ஷெட்டர், கோவிந்த் கார்ஜோள், மாதுசாமி, பசவராஜ் பொம்மை, ஆர்.அசோக், அரவிந்த லிம்பாவளி, எச்.ஆர்.விஸ்வநாத் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.  சட்டப்பேரவைத் தலைவருக்கான தேர்தலில் விஸ்வேஸ்வர ஹெக்டே காகேரியைத் தவிர வேறு யாரும் மனு தாக்கல் செய்யாததால்,  புதன்கிழமை அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவது உறுதியாகியுள்ளது.


 

ADVERTISEMENT
ADVERTISEMENT