இந்தியா

கர்நாடகம்:14 அதிருப்தி எம்எல்ஏக்கள் காங்கிரஸிலிருந்து நீக்கம்

31st Jul 2019 02:26 AM

ADVERTISEMENT

கர்நாடகத்தில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட 14 அதிருப்தி எம்எல்ஏக்களை, கட்சியிலிருந்து நீக்கி காங்கிரஸ் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இவர்கள் அனைவரும், காங்கிரஸ் - மதச்சார்பற்ற கூட்டணி அரசு கவிழ காரணமாக இருந்தவர்களாவர்.
முன்னதாக, தங்களது எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்வதாக கடிதம் அளித்திருந்த 14 பேரும், சட்டப் பேரவையில் காங்கிரஸ் -மஜத கூட்டணி அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்காமல் புறக்கணித்தனர். இதனால், முதல்வர் குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசு கவிழ்ந்தது. இதைத் தொடர்ந்து, 14 பேரையும் தகுதி நீக்கம் செய்து, பேரவைத் தலைவர் 
நடவடிக்கை மேற்கொண்டார்.
இந்நிலையில், அவர்கள் அனைவரையும் கட்சியிலிருந்து நீக்கி, காங்கிரஸ் மேலிடம் செவ்வாய்க்கிழமை நடவடிக்கை மேற்கொண்டது. ரமேஷ் ஜார்கிஹோளி, மகேஷ் குமட்டஹள்ளி, சிவ்ராம் ஹெப்பார், பிரதாப் கௌடா பாட்டீல், ஆனந்த் சிங், கே.சுதாகர் உள்ளிட்ட 14 பேரும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் காங்கிரஸ் - மஜத கூட்டணி அரசு கவிழ்ந்ததைத் தொடர்ந்து, எடியூரப்பா தலைமையில் பாஜக ஆட்சியமைத்தது. சட்டப் பேரவையில் திங்கள்கிழமை நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் அவரது அரசு வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT