இந்தியா

ஊதியங்கள் சட்ட மசோதா மக்களவையில் நிறைவேற்றம்

31st Jul 2019 01:23 AM

ADVERTISEMENT


அனைத்து தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியத்தை உறுதி செய்யும் ஊதியங்கள் சட்ட மசோதா, மக்களவையில் செவ்வாய்க்கிழமை நிறைவேறியது.
முன்னதாக, மசோதா மீதான விவாதத்தில், மத்திய தொழிலாளர் நலத் துறை அமைச்சர் சந்தோஷ் குமார் கங்வார் பேசியதாவது:
குறைந்தபட்ச ஊதியங்கள் சட்டம், ஊதியங்கள் பட்டுவாடா சட்டம், ஊக்கத்தொகை பட்டுவாடா சட்டம், சம ஊதிய சட்டம் ஆகிய 4 சட்டங்களை, ஊதியங்கள் சட்ட மசோதா-2019 ஒருங்கிணைக்கிறது.
இதேபோன்ற மசோதா, மக்களவையில் கடந்த 2017-இல் அறிமுகம் செய்யப்பட்டு, பின்னர் நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பப்பட்டது. அக்குழு அளித்த 24 பரிந்துரைகளில், 17 பரிந்துரைகள் மத்திய அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
தற்போதைய மசோதாவின்படி, தொழிலாளர் சங்கங்கள், நிறுவனங்கள் மற்றும் மத்திய அரசு ஆகியவற்றின் பிரதிநிதிகள் அடங்கிய முத்தரப்புக் குழுவானது, தேசிய அளவில் தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிக்கும். குறைந்தபட்ச ஊதியத்தை பெறுவது, தொழிலாளர்களின் உரிமையாக்கப்படும். ஊதியம் பெறுவதில் ஏற்படும் தாமதம் தொடர்பான பிரச்னைகளுக்கு இந்த மசோதா தீர்வளிக்கும். உரிய நேரத்தில் ஊதியம் கிடைக்கப் பெறுவது உறுதி செய்யப்படும்.
தற்போதுள்ள குறைந்தபட்ச ஊதியங்கள் சட்டம், ஊதியங்கள் பட்டுவாடா சட்டம் ஆகியவை குறிப்பிட்ட துறைகளில், குறிப்பிட்ட அளவுக்கு கீழ் ஊதியம் பெறும் தொழிலாளர்களுக்கு மட்டுமே பொருந்துகிறது. ஆனால், ஊதியம் மற்றும் துறை சார்ந்த எந்த வரம்பும் இல்லாமல், அனைத்து தொழிலாளர்களும் பலனடைய தற்போதைய மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 50 கோடி தொழிலாளர்கள் பலனடைவர்.
தற்போதுள்ள பல்வேறு தொழிலாளர் சட்டங்களில், ஊதியம் என்பதற்கு 12 விதமான வரையறைகள் உள்ளன. இதனால், அந்த சட்டங்களின் அமலாக்கத்தில் சிக்கல்கள் எழுகின்றன. தற்போதைய மசோதாவில், ஊதியம் என்பதற்கான வரையறை எளிமைபடுத்தப்பட்டுள்ளது என்றார் சந்தோஷ் குமார் கங்வார்.
எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு: மசோதா மீது பேசிய காங்கிரஸ் உறுப்பினர் கே.சுரேஷ், ஊதியங்கள் சட்ட மசோதா, நிறுவன முதலாளிகளுக்கே பலனளிக்கும் வகையில் உள்ளது. இந்த மசோதா, தொழிலாளர்களின் போராட்டங்களுக்குதான் வழிவகுக்கும் என்றார். திரிணமூல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தன. பின்னர், குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது.
முன்னதாக,  ஊதியங்கள் சட்ட மசோதா கடந்த 2017, ஆகஸ்டில் மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது, நாடாளுமன்ற நிலைக் குழுவுக்கு மசோதா அனுப்பப்பட்டது. இதையடுத்து, கடந்த ஆண்டில் நாடாளுமன்ற நிலைக்குழு தனது பரிந்துரைகளை அளித்தது.
இதனிடையே, 16-ஆவது மக்களவை கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஊதியங்கள் சட்ட மசோதாவும் காலாவதியானது. பின்னர், மக்களவையில் புதிய மசோதா அறிமுகம் செய்யப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT