இந்தியா

அனைவருக்கும் சம வாய்ப்புகளை ஏற்படுத்துவதே இடஒதுக்கீட்டின் நோக்கம்: உச்சநீதிமன்றம் கருத்து

31st Jul 2019 01:19 AM

ADVERTISEMENT


மக்கள் அனைவருக்கும் சம வாய்ப்புகளை ஏற்படுத்துவதே இடஒதுக்கீடு அளிக்கப்படுவதன் நோக்கம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. 
பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளித்துள்ள மத்திய அரசின் சட்டத் திருத்தத்துக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை அரசியல்சாசன அமர்வுக்கு அனுப்புவது குறித்து முடிவு எடுக்கப்படும் எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.


பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு கல்வி நிறுவனங்களிலும், அரசு வேலைவாய்ப்புகளிலும் 10 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கும் வகையில், 103-ஆவது அரசமைப்பு திருத்தச் சட்டத்தை மத்திய அரசு கடந்த ஜனவரி மாதம் நிறைவேற்றியது. 
இந்தச் சட்டத் திருத்தத்தை எதிர்த்து காங்கிரஸ் ஆதரவாளர் தெசீன் பூனாவாலா மற்றும் பல பொதுநல அமைப்புகள் சார்பாக உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. 
இந்த மனுக்கள் மீதான விசாரணை, உச்சநீதிமன்ற நீதிபதிகள் எஸ்.ஏ. போப்டே, ஆர். சுபாஷ் ரெட்டி, பி.ஆர். கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
அப்போது, மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் ராஜீவ் தவன், மத்திய அரசின் சட்டத் திருத்தமானது, அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை அம்சங்களை மீறும் வகையில் உள்ளது. 
அதற்கு எதிரான மனுக்களை அரசியல்சாசன அமர்வுக்கு அனுப்புவது, சட்டத் திருத்தத்துக்கு இடைக்காலத் தடை விதிப்பது ஆகிய இரண்டு விஷயங்களில் முடிவெடுக்க வேண்டும். 
மனுக்களை சாசன அமர்வுக்கு அனுப்பினால், சட்டத் திருத்தத்துக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டியது அவசியம் என்று வாதிட்டார்.
இதையடுத்து, மத்திய அரசின் தலைமை வழக்குரைஞர் கே.கே.வேணுகோபால் கூறுகையில், இந்த மனுக்களை அரசியல் சாசன அமர்வுக்கு அனுப்புவது தொடர்பான இறுதி வாதத்துக்குத் தயாராக இருக்கிறோம் என்றார்.
இதைக் கேட்ட நீதிபதிகள், அரசமைப்புச் சட்டத்தில், சமத்துவத்துக்கான அடிப்படை உரிமை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், இடஒதுக்கீடு என்பதை சமத்துவத்துக்கான உரிமையாகப் பார்க்க முடியாது. 
அனைவருக்கும் சம வாய்ப்புகளை ஏற்படுத்துவதே இடஒதுக்கீடு அளிக்கப்படுவதன் நோக்கமாகும். 
விசாரணை முற்றுப்பெறாத நிலையில், இந்த விவகாரத்தை அரசியல் சாசன அமர்வுக்கு அனுப்புவது குறித்து முடிவு எடுக்க முடியாது. 
இது குறித்து பின்னர் பரிசீலிக்கிறோம் என்றனர். வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை புதன்கிழமைக்கு (ஜூலை 31) ஒத்திவைத்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT