இந்தியா

என்னை மன்னித்துவிடுங்கள்: சித்தார்த்தா எழுதிய கடிதம் வெளியீடு

30th Jul 2019 10:47 AM

ADVERTISEMENT

 

பிரபலமான கஃபே காஃபி டே நிறுவனர் வி.ஜி.சித்தார்த்தா, கர்நாடக முன்னாள் முதல்வரும், மூத்த அரசியல் தலைவருமான எஸ்.எம்.கிருஷ்ணாவின் மூத்த மருமகன் ஆவார். மேலும் ஆசியாவிலேயே மிகப்பெரிய காஃபி எஸ்டேட் வைத்திருப்பவர் என்ற பெருமைக்கும் சொந்தக்காரர்.

இந்நிலையில், திங்கள்கிழமை மாலை பெங்களூருவில் இருந்து 375 கி.மீ. தொலைவில் மங்களூருவில் நேத்ராவதி நதியின் பாலத்தின் மீது சென்றவுடன் காரை நிறுத்துமாறு கூறிவிட்டு நடந்து சென்ற சித்தார்த்தா ஒருமணிநேரமாகியும் திரும்பவில்லை. இதனால் பதற்றமடைந்த அவருடைய கார் ஓட்டுநர் உடனடியாக குடும்பத்தினர் மற்றும் போலீஸாரிடம் தகவல் தெரிவித்தார். 

இதையடுத்து சித்தார்த்தாவை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. கர்நாடக முதல்வர் எடியூரப்பா, காங்கிரஸ் மூத்த தலைவர் டி.கே.சிவகுமார் உள்ளிட்ட கர்நாடக அரசியல் தலைவர்கள் செவ்வாய்கிழமை அதிகாலை முதல் எஸ்.எம்.கிருஷ்ணாவை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர்.

ADVERTISEMENT

இந்நிலையில், கஃபே காஃபி டே ஊழியர்களுக்கும், நிர்வாக இயக்குநர்களுக்கும் அதன் நிறுவனர் சித்தார்த்தா, ஜூலை 27-ஆம் தேதி எழுதிய கடிதம் வெளியாகியுள்ளது. அதில், 

37 ஆண்டுகால கடும் உழைப்பின் மூலம் 30 ஆயிரம் பேருக்கு நேரடியாகவும், 20 ஆயிரம் பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பை உருவாக்கினேன். ஆனாலும், ஒரு தொழில்முனைவோராக நான் தோற்றுவிட்டேன்.

புதிய நிர்வாகம் பொறுப்பேற்று அனைத்தையும் வெற்றிகரமாக நடத்த வேண்டும் என்று விரும்புகிறேன். ஊழியர்கள் அனைவரும் மனமுடைந்து விடாமல் புதிய நிர்வாகத்தின் கீழ் சிறப்பாக பணியாற்றி வெற்றிகரமாக செயல்பட வேண்டும் என்பது தான் எனது விருப்பம்.

எனது நிறுவனங்களின் ஒவ்வொரு பணப்பரிமாற்றத்துக்கும் நான் தான் பொறுப்பு. என் மீது நம்பிக்கை வைத்தவர்களை ஏமாற்றியிருந்தால் மன்னிக்கவும். நீண்டகாலமாக நான் தொடர்ந்து போராடி வருகிறேன். முன்னாள் வருமானவரித்துறை அதிகாரி ஒருவர் தொடர்ந்து எனக்கு அழுத்தங்களை ஏற்படுத்தி வந்தார். இனியும் என்னால் அழுத்தங்களை தாங்கிக்கொள்ள முடியாது என்பதால் அனைத்தையும் கைவிடுகிறேன். 

யாரையும் ஏமாற்ற வேண்டும் அல்லது தவறாக வழிநடத்த வேண்டும் என்பது எனது நோக்கமல்ல. அனைத்து தவறுகளும் என்னுடையது தான். இதனுடன் எனது சொத்து மதிப்பு ஆவணங்களையும் இணைந்துள்ளேன். ஒருநாள் அனைவரும் என்னை புரிந்துகொள்வீர்கள், தயவு செய்து என்னை மன்னித்துவிடுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார். 

தொழிலில் ஏற்பட்ட ரூ.7 ஆயிரம் கோடி கடன் காரணமாக வி.ஜி.சித்தார்த்தா, தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT