இந்தியா

உன்னாவ் பெண் விபத்தில் படுகாயம்: சிபிஐ விசாரணை கோரி மக்களவையில் எதிர்க்கட்சிகள் அமளி

30th Jul 2019 11:34 AM

ADVERTISEMENT


புது தில்லி: பாஜக எம்எல்ஏ மீது பாலியல் புகார் அளித்த உன்னாவ் பெண், சாலை விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்திருப்பது குறித்து சிபிஐ விசாரணை கோரி மக்களவையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டுள்ளனர்.

முன்னதாக நாடாளுமன்ற வளாகத்தில் இதே கோரிக்கையை வலியுறுத்தி திமுக, சமாஜ்வாதி, திரிணாமூல், கங்கிரஸ் எம்பிக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பிறகு அவை கூடியதும், உன்னாவ் பெண் வந்த கார் மீது லாரி மோதிய விபத்தில் அவரது உறவினர்கள் உயிரிழந்தது மற்றும், அப்பெண்ணும், வழக்குரைஞரும் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோஷம் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர்.

முன்னதாக, 
உன்னாவ் பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் சென்ற கார் விபத்துக்குள்ளான விவகாரம் தொடர்பாக, பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கார் உள்ளிட்ட 10 பேருக்கு எதிராக உத்தரப் பிரதேச காவல்துறையினர் கொலை வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

ADVERTISEMENT

சம்பந்தப்பட்ட பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஏற்கெனவே குல்தீப் சிங் செங்கார் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ள நிலையில், தற்போது இந்த விபத்து தொடர்பாக அவர் மீது கொலை வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்தப் பெண்ணின் உறவினர் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

விபத்து விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த எதிர்க்கட்சிகள் தரப்பில் கோரிக்கை வலுத்ததை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

முன்னதாக, பாதிக்கப்பட்ட பெண், ரே பரேலி சிறையில் உள்ள தனது உறவினரை சந்திப்பதற்காக குடும்பத்தினர் மற்றும் வழக்குரைஞருடன் ஞாயிற்றுக்கிழமை காரில் சென்றுகொண்டிருந்தபோது லாரி ஒன்று மோதியதில் விபத்துக்குள்ளானது. இதில், காரில் பயணம் செய்த அவரது உறவினர்களான ஷீலா (50), புஷ்பா (45) ஆகிய இருவர் உயிரிழந்துவிட்ட நிலையில், அந்தப் பெண்ணும், அவரது வழக்குரைஞரும் படுகாயத்துடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இதுகுறித்து உத்தரப் பிரதேச காவல்துறை இயக்குநர் ஓ.பி. சிங் கூறுகையில், விபத்தை ஏற்படுத்திய லாரி அதிவேகத்தில் வந்துள்ளது. மேலும் அப்போது மழை பெய்துள்ளது. முதல்கட்ட விசாரணையில் இது விபத்தாக இருப்பதற்கான முகாந்திரம் இருப்பதாகத் தெரியவந்துள்ளது. எனினும், சம்பவம் தொடர்பாக விரிவாக விசாரிக்கப்பட்டு வருகிறது என்றார். 

விபத்தை ஏற்படுத்திய லாரியின் பதிவெண் கருப்பு பெயிண்ட் பூசி மறைக்கப்பட்டிருந்ததாகவும், எனினும், அந்தப் பதிவெண் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். 

பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் கூறுகையில், இது விபத்து அல்ல. எங்கள் அனைவரையும் கொல்வதற்காக மேற்கொள்ளப்பட்ட சதி என்று கூறினார். வழக்கு தொடர்பான விசாரணையின்போது நீதிமன்றத்தில் வாக்குமூலத்தை மாற்றி அளிக்குமாறு எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கார் தரப்பிலிருந்து அடிக்கடி மிரட்டல் விடுக்கப்பட்டதாக அந்தப் பெண்ணின் மாமாவான மகேஷ் சிங் கூறினார். 

இதனிடையே, அந்தப் பெண் மற்றும் அவரது குடும்பத்தினரின் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டிருந்த துப்பாக்கிய ஏந்திய ஒரு காவலரும், இரு பெண் காவலர்களும் சம்பவத்தின்போது அவர்களுடன் இல்லை. இதுதொடர்பாக விசாரிக்கப்பட்டு வருவதாக உன்னாவ் காவல்துறை கண்காணிப்பாளர் வர்மா கூறினார். 

சிபிஐ-க்கு பரிந்துரை: இந்த கார் விபத்து விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த பரிந்துரை கடிதத்தை உள்துறை முதன்மைச் செயலரிடம் உத்தரப் பிரதேச அரசு அளித்துள்ளது. 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT