இந்தியா

எதிர்க்கட்சிகள் நினைத்திருந்தால் முத்தலாக் தடை மசோதாவைத் தடுத்திருக்கலாம்?

30th Jul 2019 10:35 PM

ADVERTISEMENT


எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மாநிலங்களவையில் இருந்திருந்தால், முத்தலாக் தடை மசோதாவை தேர்வுக் குழுவுக்கு அனுப்பியிருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 

மக்களவையில் நிறைவேறிய முத்தலாக் தடை மசோதாவை மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மாநிலங்களவையில் இன்று (செவ்வாய்கிழமை) தாக்கல் செய்தார். இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தபோதும், மாநிலங்களவையில் நிறைவேறியது. மசோதாவுக்கு ஆதரவாக 99 வாக்குகளும், எதிராக 84 வாக்குகளும் பதிவாகின.

இந்த நிலையில், முத்தலாக் தடை மசோதா மீதான வாக்கெடுப்பில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் பங்கேற்காதது குழப்பத்தை ஏற்படுத்துகிறது. மசோதா மீதான வாக்கெடுப்பின்போது 20 எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மாநிலங்களவையில் இல்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. 20 எதிர்க்கட்சி உறுப்பினர்களில் காங்கிரஸ் மற்றும் சமாஜவாதி கட்சியில் இருந்தே தலா 5 உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.     

காங்கிரஸ் மற்றும் சமாஜவாதி தவிர்த்து தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சரத் பவார் மற்றும் பிரஃபூல் படேல், திரிணமூல் காங்கிரஸ், திமுக, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் கேரள காங்கிரஸ் ஆகிய கட்சிகளில் இருந்து தலா 1 உறுப்பினர்கள் வாக்கெடுப்பின்போது மாநிலங்களவையில் இல்லை. இந்த மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்த நியமன எம்பி கேடிஎஸ் துளசியும் இந்த நேரத்தில் மாநிலங்களவையில் இல்லை. 

ADVERTISEMENT

முத்தலாக் தடை மசோதாவுக்கு மக்களவையில் ஆதரவு தெரிவித்த அதிமுக, மாநிலங்களவையில் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தது.

முத்தலாக் தடை மசோதா மீதான வாக்கெடுப்பில் ஆதரவுக்கும், எதிர்ப்புக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் 15. ஆனால், வாக்கெடுப்பின்போது மாநிலங்களவையில் இல்லாத உறுப்பினர்களின் எண்ணிக்கை 20 ஆகும். 

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வாக்கெடுப்பின்போது மாநிலங்களவையில் இருந்திருந்தால் இந்த மசோதாவை அவையின் தேர்வுக் குழுவுக்கு அனுப்பியிருக்கலாம் என தற்போது தகவல்கள் வெளியாகி வருகின்றன. 

முத்தலாக் தடை மசோதா மீதான வாக்கெடுப்பின்போது அவையில் இருக்க வேண்டும் என்று மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு காங்கிரஸ் கொறடா உத்தரவிட்டிருந்தபோதும், உறுப்பினர்கள் சிலர் பங்கேற்காததால் அவர்கள் கட்சிக்கு விளக்கம் அளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 

மாநிலங்களவையில் பாஜகவுக்குப் பெரும்பான்மை இல்லாதபோதிலும் இந்த மசோதாவானது எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் நிறைவேறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT