இந்தியா

ராஜஸ்தானில் மிக கனமழை: ஒடிஸாவில் ரெட் அலர்ட்

30th Jul 2019 01:24 AM

ADVERTISEMENT


ராஜஸ்தான் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் திங்கள்கிழமை கனமானது முதல் மிகக் கனமான மழை பெய்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அதிகபட்சமாக பாலி பகுதியில் 22 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. 
திங்கள்கிழமை காலை வரையில் நவாவில் (நகெளர்) 19 சென்டி மீட்டர், ரோஹத்தில் (பாலி) 14 சென்டி மீட்டர், மெளண்ட் அபுவில் (சிரோஹி) 13 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. 
ஒடிஸாவிலும்...: ஒடிஸா மாநிலத்திலும் இடைவிடாது பெய்த மழை காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளச் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சில மாவட்டங்களில் அடுத்த ஒரு வாரத்துக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாசிக்கில்..: மகாராஷ்டிர மாநிலம், நாசிக்கில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் அங்குள்ள பல அணைகள் அவற்றின் முழு கொள்ளளவை எட்டின. இதையடுத்து அவற்றிலிருந்து நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. 
இதுதொடர்பாக மகாராஷ்டிர நீர் பாசனத் துறை அதிகாரிகள் கூறியதாவது:  நாசிக் மாவட்டத்தில் கடந்த 5 நாள்களாக கனமழை பெய்து வருகிறது. இங்குள்ள கங்காபூர் அணை தனது முழு கொள்ளளவில் 79 சதவீதத்தை எட்டிவிட்டதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த அணையிலிருந்து விநாடிக்கு 1,000 கன அடி நீர் கோதாவரி ஆற்றில் திறந்துவிட்டப்படுகிறது. 
இகத்புரி தாலுகாவில் கடந்த 24 மணி நேரத்தில் 226 மில்லி மீட்டர் மழை பெய்ததால் அங்குள்ள தார்னா அணையின் நீர் மட்டமும் அதிகரித்ததை அடுத்து, அதிலிருந்து தார்னா ஆற்றில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. 
கடந்த 24 மணி நேரத்தில் திரியம்பகேஸ்வரில் 100 மில்லி மீட்டர், சர்குணாவில் 75 மில்லி மீட்டர், பெய்ன்டில் 68.2 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. 
நாசிக் மாவட்டத்தில் 7 பெரிய அணைகள், 17 நடுத்தர அணைகள் என மொத்தம் 24 அணைகள் உள்ளன. 
திங்கள்கிழமை நிலவரப்படி அவற்றின் ஒட்டுமொத்த கொள்ளளவில் 41 சதவீத அளவுக்கு அணைகளில் நீர் உள்ளது என்று அதிகாரிகள் கூறினர். 
அஸ்ஸாமில் பலி 86-ஆக உயர்வு
அஸ்ஸாம் மாநிலத்தில் மழை வெள்ளம் தொடர்பான சம்பவங்களில் திங்கள்கிழமை 4 பேர் உயிரிழந்ததை அடுத்து, அங்கு பலியானோரின் எண்ணிக்கை 86-ஆக அதிகரித்துள்ளது. 
எனினும், அந்த மாநிலத்தின் 17 மாவட்டங்களில் வெள்ள நீர் வடிந்து வருவதால் ஒட்டுமொத்தமாக மாநிலத்தின் வெள்ளச் சூழ்நிலை மேம்பட்டு வருவதாக மாநில பேரிடர் மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர். 
தற்போதைய நிலையில் 522 நிவாரண முகாம்களில் 50,470 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும், பல்வேறு மாவட்டங்களில் 28 நிவாரண விநியோக மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT