இந்தியா

ஜார்க்கண்ட்: பகுஜன் சமாஜ் எம்எல்ஏ கட்சியில் இருந்து நீக்கம்

30th Jul 2019 01:06 AM

ADVERTISEMENT


ஜார்க்கண்ட் மாநிலத்தில் பகுஜன் சமாஜ் கட்சி எம்எல்ஏ குஷ்வாஹா சிவபூஜன் மஹதா, அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அந்த மாநிலத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் ஒரே எம்எல்ஏ குஷ்வாஹா மட்டும்தான் என்பது குறிப்பிடத்தக்கது. கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் அவர் மீது இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஜார்க்கண்ட் மாநில பகுஜன் சமாஜ் பொறுப்பாளர் சாச்சு ராம் கூறுகையில், தொகுதி நலன்களைக் கைவிட்டதுடன், கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் எம்எல்ஏ குஷ்வாஹா கட்சியில் இருந்து நீக்கப்படுகிறார். அவர் தொகுதிப் பணிகளை முறையாக கவனிப்பது இல்லை என்று மக்களிடம் இருந்து கட்சித் தலைமைக்குப் புகார்கள் வந்தன என்றார்.
முன்னதாக, கடந்த 26-ஆம் தேதி தனது எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்வதாக குஷ்வாஹா அறிவித்தார். கடந்த நான்கரை ஆண்டுகளாக தனது தொகுதிப் பிரச்னைகளை ஜார்க்கண்ட் பேரவையில் எழுப்பியபோதும், உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்று அப்போது அவர் குற்றம்சாட்டியிருந்தார். எனினும், கட்சியில் இருந்து விலகுவதாக அவர் கூறவில்லை. ஆனால், இப்போது கட்சி அவர் மீது நடவடிக்கை எடுத்துள்ளது.
பாஜக ஆட்சியில் உள்ள ஜார்க்கண்ட் மாநிலத்தில், இந்த ஆண்டு இறுதியில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் நெருங்குவதால் இதுபோன்ற பதவி விலகல், கட்சியில் இருந்து நீக்கம், கட்சி தாவல்கள் அதிகரிக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT