இந்தியா

ஜம்முவில் ஜெய்ஷ் பயங்கரவாதி கைது

30th Jul 2019 01:15 AM

ADVERTISEMENT


இந்தியாவில் பயங்கரவாத அமைப்பை வலுப்படுத்துவதற்கு சதித் திட்டம் தீட்டியது தொடர்பான வழக்கில், ஜெய்ஷ்-ஏ-முகமது(ஜேஇஎம்) பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவரை தேசியப் புலனாய்வு அமைப்பினர் (என்ஐஏ) திங்கள்கிழமை கைது செய்தனர்.
இதுகுறித்து தேசியப் புலனாய்வு அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
புல்வாமா மாவட்டத்தில் உள்ள திரால் பகுதியைச் சேர்ந்தவர் முசாபர் பட் என்கிற முசாபர் அகமது பட்(25). வேறு வழக்கில் கைதாகி ஜம்முவில் உள்ள கோட் பால்வால் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த இவரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர். பொது பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கைதான முசாபர் பட், தில்லியில் உள்ள என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 9 நாள் காவலில் வைத்து விசாரித்து என்ஐஏ அமைப்புக்கு சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்தது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த முக்கியத் தலைவர்கள், இந்தியாவில் பயங்கரவாதச் செயல்களை அரங்கேற்றுவதற்கு புதிய ஆள்களைச் சேர்த்து, தங்களது அமைப்பை வலுப்படுத்த முயன்ற கடந்த மார்ச் மாதம் என்ஐ வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் ஏற்கெனவே, சஜத் அகமது கான், பிலால் மீர், தன்வீர் அகமது கனி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் தற்போது நீதிமன்ற காவலில் உள்ளனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT