இந்தியா

சுதந்திர தினத்தில் தாக்குதல்: லஷ்கர் அமைப்பு சதி

30th Jul 2019 02:38 AM

ADVERTISEMENT


சுதந்திர தினக் கொண்டாட்டத்தின்போது பயங்கரவாதத் தாக்குதல் நடத்த பாகிஸ்தானை தளமாகக் கொண்டு செயல்படும் லஷ்கர் ஏ தொய்பா அமைப்பு சதித் திட்டம் தீட்டியிருப்பதாக புலனாய்வு துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து புலனாய்வுத் துறை வெளியிட்ட எச்சரிக்கையில், இந்தியாவுக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்தும் சதித் திட்டத்துடன், பாகிஸ்தானின் சாக் அம்ரூ பகுதியில் உள்ள ரேஞ்சர்ஸ் படைவீரர்களின் முகாமில் 4 முதல் 5 லஷ்கர் பயங்கரவாதிகள் கடந்த 5 நாள்களாக காத்திருக்கின்றனர். ஜம்மு-காஷ்மீர் மாநிலம், கதுவாவில் உள்ள பஷேரா நல்லா எனுமிடத்தின் வழியாக ஊடுருவி, சுதந்திரத் தினக் கொண்டாட்டத்தின்போதும், அதற்கு முன்பும் மிகப்பெரிய பயங்கரவாதத் தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டியுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கையை மனதில் கொண்டே, ஜம்மு-காஷ்மீருக்கு கூடுதலாக 10,000 பாதுகாப்புப் படை வீரர்களை அனுப்புவது தொடர்பான உத்தரவை மத்திய உள்துறை அமைச்சகம் அண்மையில் வெளியிட்டுள்ளது என்று மத்திய அரசு மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீருக்கு கூடுதலாக 10,000 வீரர்களை அனுப்புவது தொடர்பான மத்திய அரசின் முடிவுக்கு அந்த மாநிலத்தில் பரவலாக எதிர்ப்பு கிளம்பியது. அந்த மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க வகை செய்யும் 35ஏ சட்டப்பிரிவை ரத்து செய்ய மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாகவும், அவ்வாறு ரத்து செய்தால் மிகப்பெரிய வன்முறை மூளலாம் என்ற அச்சத்தில், அதை தடுக்கும் திட்டத்துடன் கூடுதல் வீரர்களை அனுப்பும் முடிவை மத்திய அரசு எடுத்ததாகவும் செய்திகள் வெளியாகின. இந்நிலையில், பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான புலனாய்வுத் துறையின் எச்சரிக்கையை அடுத்தே, அங்கு கூடுதல் வீரர்களை அனுப்பும் முடிவை மத்திய அரசு எடுத்ததாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT