சர்வதேச ராணுவ விளையாட்டின் ஒரு பகுதியாக இந்தியாவில் நடைபெறவுள்ள சர்வதேச ஸ்கௌட் மாஸ்டர்ஸ் போட்டியில் கலந்து கொள்வதற்காக சீனா உள்ளிட்ட 7 நாடுகளைச் சேர்ந்த ராணுவ குழுக்கள் தில்லிக்கு வந்துள்ளன.
ராஜஸ்தான் மாநிலம், ஜெய்சால்மரில் வரும் ஆகஸ்ட் மாதம் 6ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரையிலும் இப்போட்டி நடைபெறவுள்ளது. இதில் இந்திய ராணுவ குழு தவிர்த்து, சீனா, ரஷியா, ஆர்மீனியா, கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான் உள்ளிட்ட 7 நாடுகளின் ராணுவ குழுக்கள் கலந்து கொள்கின்றன. இதற்காக 7 நாடுகளைச் சேர்ந்த ராணுவ குழுக்கள் தில்லிக்கு வந்துள்ளன.
டோக்காலாம் முற்றுகை சம்பவத்தால் இந்தியா, சீனா இடையேயான இருதரப்பு உறவு பாதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில்,
இந்த போட்டியில் சீனா கலந்து கொள்வது இந்தியாவுடனான ராணுவ ஒத்துழைப்பை அந்நாடு அதிகரிக்க விரும்புவதை வெளிப்படுத்துகிறது.
சர்வதேச ராணுவ விளையாட்டு ரஷிய பாதுகாப்பு அமைச்சகத்தால் கடந்த 2015ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2018ஆம் ஆண்டு இந்த விளையாட்டு போட்டியை நடத்துவதற்கான வாய்ப்பை இந்தியாவுக்கு ரஷியா அளித்தது.
ஆனால் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்படாததால் ஓராண்டுக்கு பிறகு தற்போது இந்தியாவில் அந்த விளையாட்டு போட்டி நடத்தப்படுகிறது.