பாஜக பெண் உறுப்பினருக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த விவகாரத்தில் உத்தரப் பிரதேச மாநிலம், ராம்புர் தொகுதியைச் சேர்ந்த சமாஜவாதி கட்சி உறுப்பினர் ஆஸம் கான் மக்களவையில் திங்கள்கிழமை மன்னிப்பு கேட்டார்.
மக்களவையில் வியாழக்கிழமை முத்தலாக் மசோதா மீதான விவாதம் நடைபெற்ற போது, அவையை பாஜகவின் பெண் உறுப்பினர் ரமாதேவி தலைமை வகித்து நடத்தினார் . இந்த விவாதத்தில் ஆஸம் கான் பேசிக் கொண்டிருந்த போது, மக்களவைத் தலைவர் இருக்கையைப் பார்த்து பேசுமாறு ரமா தேவி அவரிடம் கேட்டுக் கொண்டார். இதையடுத்து, அவருக்கு எதிராக ஆஸம் கான் சில ஆட்சேபத்துக்குரிய கருத்துகளைக் கூறியதால் அவையில் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை அவையில் ஆஸம் கானுக்கு எதிராக பெண் உறுப்பினர்களும், மத்திய அமைச்சர்களும் குரல் எழுப்பினர். மேலும், மக்களவையின் எஞ்சிய காலம் வரை ஆஸம் கான் இடைநீக்கம் செய்யப்பட வேண்டும் என பாஜக எம்பி ரமாதேவி வலியுறுத்தினார்.
இந்த விவகாரம் காரணமாக அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்களவைத் தலைவரிடம் பெண் உறுப்பினர்கள் பலரும் முறையிட்டிருந்தனர். இதையடுத்து, திங்கள்கிழமை மக்களவைத் தலைவர் முன் நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று அவருக்குத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மக்களவை திங்கள்கிழமை காலை கூடியதும், சமாஜவாதி கட்சி உறுப்பினர் ஆஸம் கானை பேசுவதற்கு அவைத் தலைவர் ஓம் பிர்லா அனுமதியளித்தார்.
அப்போது, ஆஸம் கான், நான் 9 முறை எம்எல்ஏவாகவும், பலமுறை அமைச்சராகவும், மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்திருக்கிறேன். நாடாளுமன்றத்திற்கான அமைச்சராகவும் (உத்தரப் பிரதேசத்தில்) இருந்திருக்கிறேன். இதனால், சட்டப்பேரவையின் நடைமுறைகள் எனக்குத் தெரியும். எனினும், எனது வார்த்தைகள் எவரையும் புண்படுத்தியிருந்தால் அதற்காக நான் மன்னிப்பு கோருகிறேன் என்றார். அப்போது, அவர் கூறிய சில வார்த்தைகள் சரிவரக் கேட்கவில்லை என்று கூறிய நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, மீண்டும் அந்த வார்த்தைகளை திரும்பக் கூறுமாறு கேட்டுக் கொண்டார்.
அப்போது, ஆஸம் கானுக்கு ஆதரவாக அவையில் அமர்ந்திருந்த சமாஜவாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் எழுந்து பேசுகையில், அவர் ஏற்கெனவே ஒருமுறை மன்னிப்பு கேட்டு விட்டார். உத்தரப் பிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான கொடுமைகளுக்காக பாஜக மன்னிப்பு கேட்க வேண்டும். உன்னாவ் பாலியல் பலாத்கார சம்பவத்தில் பாதிக்கப்பட்டவரின் கார் விபத்துக்குள்ளானதை அமைச்சர் கவனத்தில் கொள்ள வேண்டும். இதுகுறித்து அவையில் விவாதிக்க வேண்டும் என்றார்.
இதையடுத்து, ரமா தேவி பேசுகையில், பெண்களுக்கு எதிராக அவதூறு கருத்துகளைக் கூறுவதை ஆஸம் கான் வழக்கமாகக் கொண்டிருக்கிறார். கடந்த காலங்களில் பலமுறை பல தருணங்களில் இது போன்று அவர் கூறியிருக்கிறார். நாடாளுமன்றத்திற்கு வெளியே இதுபோன்ற கருத்துகளைக் கூறி வந்த அவர், தற்போது நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் கூறியுள்ளார் என்றார். இதன் பிறகு மக்களவைத் தலைவர், ஆஸம் கானை மீண்டும் ஒருமுறை மன்னிப்புக் கோருமாறு கேட்டார். அதைத் தொடர்ந்து முன்பு கூறிய வார்த்தைகளை கூறி மன்னிப்பு கேட்ட அவர், ரமா தேவி எனது சகோதரி போன்றவர் என்றார்.
அப்போது, மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா பேசுகையில், வார்த்தைகளை உபயோகிக்கும் போது உறுப்பினர்கள் கவனமாக இருக்க வேண்டும் அவையின் கண்ணியத்தைக் காக்க வேண்டும். அப்போதுதான் எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாது என்றார்.