இந்தியா

எல்லையில் அத்துமீறி தாக்குதல்: இந்திய துணைத் தூதரை அழைத்து பாகிஸ்தான் கண்டனம்

30th Jul 2019 01:04 AM

ADVERTISEMENT


எல்லையில் இந்திய ராணுவப் படையினர் அத்துமீறி தாக்குதல் நடத்தியதாகக் கூறி, இந்தியத் துணைத் தூதரை அழைத்து பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதி அருகே, பாகிஸ்தான் ராணுவ வீரர்களுக்கும், இந்தியப் பாதுகாப்புப் படையினருக்குமிடையே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 3 பேர் காயமடைந்தனர்.  
இது தொடர்பாக, பாகிஸ்தான் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் முகமது ஃபைசல் வெளியிட்டுள்ள குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: இந்திய பாதுகாப்புப் படையினர் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதற்காக, அந்நாட்டுத் துணைத் தூதர் கெளரவ் அலுவாலியாவை அழைத்து கண்டனம் தெரிவித்துள்ளோம். இரு நாடுகளுக்கிடையேயான எல்லைப் பகுதியில் வாழும் அப்பாவி மக்களை இந்திய ராணுவம் தொடர்ந்து தாக்கி வருகிறது. இது இருநாடுகளும் மேற்கொண்ட ஒப்பந்தத்தை மீறுவதாக உள்ளது.
இந்திய ராணுவத்தினரின் அத்துமீறிய தாக்குதல்கள், பிராந்தியத்தில் நிலவும் அமைதியைக் குலைத்து வருகின்றன. எனவே, இரு நாடுகளுக்கிடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களை மதித்து அவர்கள் நடந்துகொள்ள வேண்டும் என்று அந்தக் குறிப்பில் முகமது ஃபைசல் தெரிவித்துள்ளார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT