இந்தியா

இந்தியாவில் 3,000 புலிகள்!: கணக்கெடுப்பு அறிக்கையை வெளியிட்டார் மோடி

30th Jul 2019 04:42 AM

ADVERTISEMENT


சர்வதேச புலிகள் தினத்தையொட்டி, தில்லியில் தேசிய புலிகள் கணக்கெடுப்பு அறிக்கையை பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை வெளியிட்டார். கடந்த 2006-ஆம் ஆண்டை ஒப்பிடும்போது, தற்போது புலிகளின் எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்துள்ளது.

சர்வதேச புலிகள் தினம் (ஜூலை 29) திங்கள்கிழமை உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி, கடந்த 2018-ஆம் ஆண்டு வரை நடத்தப்பட்ட புலிகள் கணக்கெடுப்பு அறிக்கையை தில்லியில் பிரதமர் மோடி வெளியிட்டார். இந்த அறிக்கையின்படி, தற்போது இந்தியாவில் 2,977 புலிகள் உள்ளன.

அறிக்கையை வெளியிட்ட பின்னர் பிரதமர் மோடி பேசியதாவது:

நம் நாட்டில் தற்போது சுமார் 3,000 புலிகள் உள்ளன. உலக உளவில் புலிகள் அதிக அளவில் உள்ள மற்றும் புலிகளுக்கு அதிக பாதுகாப்பு உள்ள நாடாக நம் நாடு வளர்ச்சியடைந்துள்ளது. 

ADVERTISEMENT

கடந்த 2006-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, நம் நாட்டில் 1,411 புலிகள் இருந்தன. 2018 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி,  2,977 புலிகள் உள்ளன.  9 ஆண்டுகளுக்கு முன் ரஷியாவில் நடைபெற்ற சர்வதேச புலிகள் பாதுகாப்பு மாநாட்டில், வரும் 2022-ஆம் ஆண்டுக்குள் நாட்டில் புலிகளின் எண்ணிக்கையை இரு மடங்காக அதிகரிக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. புலிகள் எண்ணிக்கையை இருமடங்காக்க வேண்டும் என்ற இலக்கை நான்கு ஆண்டுகளுக்கு முன்னதாக நாம் நிறைவேற்றிவிட்டோம். புலிகள் பாதுகாப்புக்காக போராடிய அனைவருக்கும் எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

புலிகள் பாதுகாப்பு தொடர்பாக பாலிவுட்டில் இரு திரைப்படங்கள் ஏற்கெனவே வெளியாகியுள்ளன. அந்த மாதிரியான திரைப்படங்கள் மேலும் உருவாக்க வேண்டும். சுற்றுச்சூழலுக்கும் முக்கியத்துவம்: வளர்ச்சியை நோக்கி செல்லும்போது, சுற்றுச்சூழலை பாதுகாக்க தவறக்கூடாது. கடந்த 5 ஆண்டுகளில் நாட்டின் உள்கட்டமைப்புத் துறையில் பல்வேறு முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அதேபோல, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கடந்த 2014-இல் 692-ஆக இருந்த பாதுகாக்கப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை தற்போது 860-ஆக அதிகரித்துள்ளது. உயிர்கோள பாதுகாப்பகங்களின் (பயோஸ்பியர் ரிசர்வ்) எண்ணிக்கை 40-இல் இருந்து 100-க்கும் மேலாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு தரமான வீடுகள் கட்டித் தருவதைபோல விலங்குகளுக்கும் தரமான வாழ்விடங்கள் அமைத்து தரப்படும் என்றார் மோடி.

தமிழகத்தில் 12 ஆண்டுகளில் புலிகள் எண்ணிக்கை மூன்று மடங்காக உயர்வு
தமிழகத்தில் கடந்த 12 ஆண்டுகளில் புலிகளின் எண்ணிக்கை 76-இல் இருந்து 264-ஆக மூன்று மடங்குக்கு மேல் உயர்ந்துள்ளதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

உலக அளவில் தென்சீனப் புலி, மலேசியன் புலி, இந்தோ-சீனப் புலி, சைபீரியன் புலி, வங்கப் புலி, சுமித்ரன் புலி, காஸ்பியன் புலி, ஜவான் புலி, பாலி புலி என 9 வகையான புலிகள் உள்ளன.

கடந்த 20-ஆம் நூற்றாண்டில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட புலிகள் இருந்த நிலையில், வேட்டை, வனப் பகுதிகள் அழிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், கடந்த 2000-ஆம் ஆண்டில் புலிகளின் எண்ணிக்கை 3 ஆயிரமாக சரிந்தது. இதில்,  குறிப்பாக ஜவான், காஸ்பியன் ஆகிய புலி வகைகள் முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டன. தென் சீனப் புலி வகையை பல ஆண்டுகளாகப் பார்க்க முடியாத காரணத்தால், அழியும் நிலையில் உள்ள விலங்காக அறிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 6 வகை புலிகளைக் காக்கும் வகையில், கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் உலக புலிகள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.


இந்தியா முன்னிலை: இந்தியாவில் புலிகளைக் காக்கும் வகையில், கடந்த 1972-இல் புலிகள் திட்டம்  தொடங்கப்பட்டது. புலிகள் வசிக்கும் பகுதி புலிகள் காப்பகங்களாக மாற்றப்பட்டு, இந்தியாவில் தற்போது 50 புலிகள் காப்பகங்கள் உள்ளன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட சர்வதேச புலிகள் கணக்கெடுப்பில் 3,890 புலிகள் இருந்தது தெரியவந்தது. அதில், 2,226 புலிகள் அதாவது 60 சதவீதத்துக்கும் மேலான புலிகள் இந்தியாவில் இருப்பது தெரியவந்தது.

புலிகளின் நிலையை அறிந்து கொள்ளும் வகையில், புலிகளின் எண்ணிக்கை குறித்து 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நாடு தழுவிய கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. அதன்படி, கடந்த 2006-இல் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் 1,411 புலிகளும், 2010-இல் 1,706 புலிகளும்,  2014-இல் 2,226 புலிகளும் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, 2018-இல் 20 மாநிலங்களில் 38,1400 ச.கி.மீ.பரப்பளவில் புலிகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வனத் துறை ஊழியர்கள், வன ஆர்வலர்கள், வன ஆராய்ச்சியாளர்கள் ஆகியோர் கணக்கெடுப்பில் ஈடுபட்டனர். 26,838 தானியங்கி கேமராக்கள் பொருத்தப்பட்டு, 3 கோடிக்கும் மேற்பட்ட வன விலங்குகளின் புகைப்படங்கள் எடுக்கப்பட்டன. அதில், 76,651 புலிகளின் புகைப்படங்களாகும். இந்தப் புகைப்படங்கள், புலிகளின் எச்சம், கால் தடம் உள்ளிட்ட பல தரவுகளின் அடிப்படையில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், இந்திய அளவில் கடந்த 2014-ஆம் ஆண்டைக் காட்டிலும் புலிகளின் எண்ணிக்கை 33 சதவீதம் அதிகரித்து, 2,967 புலிகள் இருப்பது தெரியவந்துள்ளது.


மூன்று மடங்கு உயர்வு: தமிழகத்தில் ஆனைமலை, களக்காடு முண்டந்துறை, முதுமலை, சத்தியமங்கலம் ஆகிய 4 புலிகள் காப்பகங்கள் மற்றும் பல்வேறு வனக் கோட்டங்களில் கடந்த 2006-இல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் புலிகளின் எண்ணிக்கை 76-ஆக இருந்தது. வனத் துறையின் பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக, 2010-இல் 163-ஆகவும், 2014-இல் 229-ஆகவும் உயர்ந்தது. அதுவே, 2018-ஆம் ஆண்டு கணக்கெடுப்பில் 35 புலிகள் அதிகரித்து 264 புலிகள் இருப்பது தெரியவந்துள்ளது. மேலும், புலிகள் பாதுகாப்பில் சிறந்த மேலாண்மைக்கான விருதை சத்தியமங்கலம் புலிகள் காப்பகமும், சிறந்த பராமரிப்புக்கான தரவரிசையில் ஆனைமலை புலிகள் காப்பகம் 89 புள்ளிகளுடன் 5-ஆவது இடத்தையும் பிடித்துள்ளது.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு சிறந்த மேலாண்மைக்கான விருது
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு சிறந்த மேலாண்மைக்கான மத்திய அரசு விருதை பிரதமர் மோடி திங்கள்கிழமை வழங்கினார். 

தென்னிந்தியாவின் முக்கிய  புலிகள் காப்பகமாக சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் திகழ்ந்து வருகிறது. இது புலிகள் காப்பகமாக 2013 ஆம் ஆண்டு மார்ச் 1 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.

சுமார் 1,455 சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட இந்த புலிகள் காப்பகத்தில் 116 சிறுத்தைகள், 70 புலிகள், ஆயிரக்கணக்கான யானைகள், காட்டெருமைகள், அரிய வகை வெளிமான்கள், கழுதைப்புலி, வெண்முதுகு கழுகுகள் போன்ற வன விலங்குகள் மற்றும் பறவையினங்கள் உள்ளன.  புலி, சிறுத்தை, யானைகளின் புகலிடமாக உள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 2018 ஆம் ஆண்டு  மத்திய அரசின் புலிகள் பாதுகாப்பு ஆணைய அதிகாரிகள் அடங்கிய குழுவினர் ஆய்வு செய்தனர்.

புலிகள் பாதுகாப்பு, புலிகள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல், உள்ளூர் மக்களின் பங்களிப்பு போன்ற 10 தகுதிகளின் அடிப்படையில் மத்திய அரசின் சிறந்த மேலாண்மைக்கான விருதுக்கு சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் தேர்ந்தெடுக்கப்பட்டது. இதையடுத்து, தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில் சிறந்த புலிகள் காப்பகத்துக்கான விருதை பிரதமர் மோடியிடம் இருந்து புலிகள் காப்பகத்தின் மண்டல காப்பாளர் நாகநாதன் பெற்றுக் கொண்டார்.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு மத்திய அரசு விருது வழங்கப்பட்டதால் வனத் துறையினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். புலிகள் காப்பகத்தில் சிறப்பாகப் பணியாற்றிய வனத் துறை பணியாளர்கள், உலக இயற்கை நிதியத்தின் களப் பணியாளர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் ஆகியோருக்கு துணைக் கள இயக்குநர் அருண்லால் பாராட்டு தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT