இந்தியா

முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்பால் ரெட்டி காலமானார்

29th Jul 2019 01:59 AM

ADVERTISEMENT

 

முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஜெய்பால் ரெட்டி(77), ஹைதராபாதில் சனிக்கிழமை நள்ளிரவு காலமானார்.

சமீபகாலமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவருக்கு நிமோனியா காய்ச்சல் பாதிப்பு இருந்தது தெரியவந்தது. அதற்காக, அவர் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், ஹைதராபாதில் உள்ள ஒரு மருத்துவமனையில் சனிக்கிழமை இரவு அனுமதிக்கப்பட்டார். அங்கு நள்ளிரவு 1.28 மணிக்கு அவரது உயிர் பிரிந்ததாக, காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் கூறினார். ஜெய்பால் ரெட்டிக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.

இன்று இறுதிச்சடங்கு: ஜெய்பால் ரெட்டியின் இறுதிச்சடங்கு, ஹுசைன் சாகரில் முன்னாள் பிரதமர் பி.வி.நரசிம்ம ராவின் நினைவிடம் அருகே திங்கள்கிழமை மதியம் 1.00 மணியளவில் நடைபெறவுள்ளது. அவரது இறுதிச்சடங்கு முழு அரசு மரியாதையுடன் நடைபெறும் என்று முதல்வர் சந்திரசேகர் ராவ் அறிவித்துள்ளார்.

ADVERTISEMENT

அரசியலில் சாதனை: போலியோ நோய் தாக்கியதால் நடப்பதற்கு சற்று சிரமப்பட்டாலும், அரசியல் பாதையில் அவர் உச்சியைத் தொட்டு சாதனை படைத்துள்ளார்.
5 முறை மக்களவை எம்.பி.யாகவும், 2 முறை மாநிலங்களவை எம்.பி.யாகவும், 4 முறை சட்டப்பேரவை எம்எல்ஏவாகவும் பதவி வகித்துள்ளார்.
இளம் வயதிலேயே காங்கிரஸ் கட்சியில் இணைந்த ஜெய்பால் ரெட்டி, 1975-ஆம் ஆண்டு நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்டபோது, அதை எதிர்த்து குரல் கொடுத்தார்.  பின்னர் காங்கிரஸில் இருந்து வெளியேறி, ஜனதா கட்சியில் இணைந்த இவர், 1980-ஆம் ஆண்டு மேடக் மக்களவைத் தொகுதியில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை எதிர்த்துப் போட்டியிட்டார்.
பின்னர், 1990-களில் காங்கிரஸில் மீண்டும் இணைந்தார். ஜெய்பால் ரெட்டி பேச்சாற்றல் மிக்கவர். இதனால், காங்கிரஸ் கட்சியிலும், ஐக்கிய முன்னணி, தேசிய முன்னணி தலைமையிலான மத்திய அரசுகளிலும் செய்தித்தொடர்பாளர் பதவி கிடைத்தது.
ஐ.கே.குஜ்ரால் தலைமையிலான அமைச்சரவையில் தகவல், ஒலிபரப்புத் துறை அமைச்சராக பதவி வகித்தார். மன்மோகன் சிங் தலைமையிலான அமைச்சரவையில் பெட்ரோலியம், அறிவியல் மற்றும் புவிஅறிவியல் என பல்வேறு துறைகளின் அமைச்சராக பதவி வகித்துள்ளார்.
1998-ஆம் ஆண்டு சிறந்த நாடாளுமன்றவாதி என்ற விருதையும் அவர் பெற்றுள்ளார்.
தலைவர்கள் இரங்கல்: ஜெய்பால் ரெட்டியின் மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடு ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட இரங்கல் செய்தியில், "பொதுவாழ்வில் பல ஆண்டுகள் அனுபவமுள்ளவர் ஜெய்பால் ரெட்டி. பேச்சாற்றலாலும், நிர்வாகத்திறமையாலும் பெரிதும் மதிக்கப்பட்டவர். அவரது மறைவு வருத்தமளிக்கிறது' என்று குறிப்பிட்டுள்ளார். 
இதேபோல், ராகுல் காந்தி தனது சுட்டுரைப் பதிவில், "முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஜெய்பால் ரெட்டியின் மறைவுச் செய்தி எனக்கு மிகுந்த துயரத்தை அளித்திருக்கிறது. சிறந்த நாடாளுமன்றவாதியாகவும், தெலங்கனாவின் புதல்வனாகவும் விளங்கிய அவர், தனது வாழ்நாள் முழுவதையும் பொதுவாழ்க்கைக்கு அர்ப்பணித்தார். அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT