இந்தியா

கர்நாடக பேரவை எதிர்க்கட்சி தலைவராகிறார் சித்தராமையா

29th Jul 2019 01:55 AM

ADVERTISEMENT


பெங்களூரு, ஜூலை 28:  6 ஆண்டுகளுக்குப் பிறகு கர்நாடக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவராக சித்தராமையா பொறுப்பேற்க இருக்கிறார்.
கடந்த ஒரு வாரத்தில் கர்நாடக அரசியலில் ஏற்பட்ட திடீர் மாற்றங்கள்,

சட்டப்பேரவையில் அரசியல் தலைவர்கள் வகித்துவந்த பதவியில் பல்வேறு மாற்றங்களுக்கு காரணமாகியுள்ளன.  எதிர்க்கட்சித் தலைவராக இருந்த எடியூரப்பா, முதல்வராகப் பதவியேற்றிருக்கிறார்.  முதல்வராக இருந்த குமாரசாமி, மஜத சட்டப்பேரவைக் குழுத் தலைவராகவிருக்கிறார்.  அதேபோல, மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராகவும், காங்கிரஸ் சட்டப்பேரவைக் குழுத் தலைவராகவும் இருந்த சித்தராமையா, எதிர்க்கட்சித் தலைவராக இருக்கிறார். இது குறித்து காங்கிரஸ் மேலிடம் அதிகாரப்பூர்வமான எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை என்றாலும், காங்கிரஸ் சட்டப்பேரவைக் குழுத் தலைவராக இருப்பதால், எதிர்க்கட்சித்தலைவர் பதவிக்கு நியமிக்கப்படுவார் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

எதிர்க்கட்சித் தலைவர் பதவியைக் கைப்பற்ற முன்னாள் துணை முதல்வர் ஜி.பரமேஸ்வர், முன்னாள் அமைச்சர்கள் டி.கே.சிவகுமார், கிருஷ்ணபைரே கெளடா ஆகியோரும் முயற்சித்துள்ளனர்.  டி.கே.சிவகுமார் மீது வழக்குகள் இருப்பதால்,  அவரை எதிர்க்கட்சித் தலைவராக்க கட்சி மேலிடம் விரும்பவில்லை. 

கிருஷ்ணபைரே கெளடா தகுதியானவராக இருந்தாலும்,  சித்தராமையாவுக்கு நிகராக அவரை கருத முடியாது என்று கட்சி நினைக்கிறது. சித்தராமையா, முன்னாள் முதல்வராக இருந்த அனுபவம் வாய்ந்தவர் மட்டுமல்ல,  2013-ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு அமோக வெற்றியைத் தேடித் தந்தவர். மேலும், இன்றைக்கும் கர்நாடகம் முழுவதும் உள்ள கட்சித் தொண்டர்களிடையே செல்வாக்கும், ஆளுமையும் கொண்டவராக விளங்குகிறார். 

ADVERTISEMENT

2008 முதல் 2013-ஆம் ஆண்டுவரை நடைபெற்ற முந்தைய பாஜக ஆட்சியில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தவர் சித்தராமையா.

ADVERTISEMENT
ADVERTISEMENT