ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டத்துக்கான இங்கிலாந்து அணி இன்று (சனிக்கிழமை) அறிவிக்கப்பட்டது.
இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 1-ஆம் தேதி தொடங்குகிறது. இந்த தொடருக்கான ஆஸ்திரேலிய அணி நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில், எட்ஜ்பாஸ்டனில் நடைபெறும் முதல் ஆஷஸ் ஆட்டத்துக்கான 14 பேர் அடங்கிய இங்கிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டது.
இங்கிலாந்து அணியில் உலகக் கோப்பையில் அசத்திய ஆல்-ரௌண்டர் பென் ஸ்டோக்ஸ் மற்றும் வேகப்பந்துவீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். உலகக் கோப்பை தொடரில் ஆர்ச்சர் காயம் காரணமாக அவதிப்பட்டாலும், அவர் ஆஷஸ் தொடருக்கு முழு உடற் தகுதியடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், ஆல்-ரௌண்டர் பென் ஸ்டோக்ஸ் மீண்டும் துணை கேப்டனாக அணியில் இடம்பிடித்துள்ளார்.
அயர்லாந்துக்கு எதிரான ஒரே ஒரு டெஸ்ட் ஆட்டத்தில் இடம்பெற்ற 11 வீரர்களில் 10 வீரர்கள் ஆஷஸ் தொடரில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த ஆட்டத்தில் சிறப்பாக செயல்பட்டு ஆட்டநாயகன் விருது வென்ற ஜேக் லீச் மட்டும் இந்த ஆஷஸ் அணியில் இடம்பெறவில்லை. காயம் காரணமாக அயர்லாந்து ஆட்டத்தில் விளையாடாத இங்கிலாந்தின் பிரதான பந்துவீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆஷஸ் தொடரில் அணிக்குத் திரும்பியுள்ளார். இதேபோல் ஜோஸ் பட்லரும் அணிக்குத் திரும்பியுள்ளார்.
முதல் ஆஷஸ் டெஸ்டுக்கான இங்கிலாந்தின் 14 பேர் அடங்கிய வீரர்கள்:
- ஜோ ரூட் (கேப்டன்)
- பென் ஸ்டோக்ஸ் (துணை கேப்டன்)
- ஜேசன் ராய்
- ரோரி பர்ன்ஸ்
- ஜோ டென்லி
- ஜானி பேர்ஸ்டோவ்
- ஜோஸ் பட்லர்
- மொயின் அலி
- கிறிஸ் வோக்ஸ்
- ஸ்டுவர் பிராட்
- சாம் கரன்
- ஆலி ஸ்டோன்
- ஜேம்ஸ் ஆண்டர்சன்
- ஜோஃப்ரா ஆர்ச்சர்
போட்டி அட்டவணை:
- முதல் டெஸ்ட்- ஆகஸ்ட் 1-5 (எட்ஜ்பாஸ்டன்)
- 2-ஆவது டெஸ்ட்-ஆகஸ்ட் 14-18 (லார்ட்ஸ்)
- 3-ஆவது டெஸ்ட்- ஆகஸ்ட் 22-26 (ஹெடிங்லே)
- 4-ஆவது டெஸ்ட்- செப்டம்பர் 4-8 (ஓல்ட் டிராஃபோர்டு)
- 5-ஆவது டெஸ்ட்-செப்டம்பர் 12-16 (ஓவல்)