இறைச்சி ஏற்றுமதியாளர் மொயின் குரேஷி பண மோசடி வழக்கில் தொழிலதிபர் சதீஷ் பாபுவை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று (சனிக்கிழமை) அனுமதி அளித்தது.
இறைச்சி ஏற்றுமதியாளர் மொயின் குரேஷி பண மோசடி வழக்கில் சதீஷ் பாபு நேற்று நள்ளிரவில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு விசாரணையில் சதீஷ் பாபு மொயின் குரேஷிக்கு மிகவும் நெருக்கமானவர் என்பது தெரியவந்தது. இதன் அடிப்படையில் சதீஷ் பாபு அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து, சதீஷ் பாபுவை 14 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத் துறை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தது. இந்த வழக்கில் சதீஷ் பாபு தரப்பில் வாதாடிய வழக்கறிஞர்,
"அமலாக்கத் துறை சதீஷ் பாபுவை சாட்சியாக்கியது. அவர் இந்த வழக்கில் உங்களுக்கு உதவி செய்துள்ளார். ஆனால், தற்போது நீங்கள் இவரைக் குற்றவாளி ஆக்குகிறீர்கள். அதேசமயம், முக்கியக் குற்றவாளி மொயின் குரேஷி பிணையில் வெளியே உள்ளார்" என்றார்.
இதையடுத்து, சதீஷ் பாபுவை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு, சிபிஐ சிறப்பு நீதிமன்றம் நீதிபதி சைலேந்திர மாலிக் உத்தரவிட்டார்.
கடந்தாண்டு அக்டோபர் மாதம் சதீஷ் பாபு அளித்த புகாரின் பேரில், அப்போதைய சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா மற்றும் சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா ஆகியோர் மீது இந்த வழக்கில் தொடர்புடைய தொழிலதிபரிடம் இருந்து லஞ்சம் வாங்கியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.