கர்நாடக சபாநாயகர் ரமேஷ் குமாரின் தகுதி நீக்கம் உத்தரவை எதிர்த்து அதிருப்தி எம்எல்ஏ-க்கள் மூன்று பேர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கர்நாடக பிரக்ஞாவந்த ஜனதா கட்சி எம்எல்ஏ ஆர்.சங்கர், காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ-க்கள் ரமேஷ் ஜார்கி ஹோளி, மகேஷ் குமட்டஹள்ளி ஆகிய 3 பேரையும் சட்டப்பேரவை உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்து கர்நாடக பேரவைத் தலைவர் ரமேஷ்குமார் கடந்த வியாழக்கிழமை உத்தரவு பிறப்பித்தார். மேலும், தான் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக 3 பேரும் நீதிமன்றத்தை அணுகத் தடையேதுமில்லை என்றும் அவர் தெரிவித்தார். இதனால், கர்நாடகாவின் 15-வது சட்டப்பேரவையில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ-க்கள் மீண்டும் எம்எல்ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட முடியாது.
எனவே, இந்த 3 அதிருப்தி எம்எல்ஏ-க்களும் சபாநாயகர் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, எடியூரப்பா தலைமையிலான பாஜக நேற்று (வெள்ளிக்கிழமை) ஆட்சி அமைக்க உரிமை கோரியது. அதன்படி, பாஜக மாநிலத் தலைவர் பி.எஸ். எடியூரப்பா நேற்று மாலை 4-வது முறையாக முதல்வர் பொறுப்பை ஏற்றார். இதையடுத்து, அவரது அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு, வரும் 29-ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்த நிலையில், மதச்சார்பற்ற ஜனதா தளம் (மஜத) எம்எல்ஏ-க்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்குப் பிறகு மஜத தலைவர் ஜிடி தேவெ கௌடா செய்தியாளர்களிடம் பேசுகையில்,
"நாங்கள் அனைவரும் கட்சியுடன் இருப்பதாக முடிவு செய்துள்ளோம். ஒரு சில எம்எல்ஏ-க்கள், பாஜக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிக்குமாறு குமாரசாமியிடம் கோரிக்கை விடுத்தனர். அதேசமயம், மற்றொரு பகுதி எம்எல்ஏ-க்கள் எதிர்க்கட்சியாக இருந்து, கட்சியைப் பலப்படுத்துமாறு பரிந்துரைத்தனர்" என்றார்.
இதனால், கர்நாடக அரசியல் களத்தில் நிலவும் பரபரப்பு மேலும் சில நாட்களுக்கு நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் நிலுவையில் இருக்கும் மனுக்கள் மற்றும் ராஜிநாமா கடிதங்கள் மீது சபாநாயகர் என்ன முடிவு எடுக்கப்போகிறார் என்பது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.