மோசமான வானிலை காரணமாக அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து அவர்கள் மேலும் கூறியதாவது:
அமர்நாத் குகைக் கோயிலில் வியாழக்கிழமை மாலை வரை 7,021 யாத்ரீகர்கள் பனிலிங்கத்தை தரிசனம் செய்தனர். இத்துடன் சேர்த்து, இந்த ஆண்டு மொத்தம் 3,08,839 பேர் தரிசனம் செய்துள்ளனர். இவ்வாண்டு மொத்தம் 3.30 லட்சம் பேர் அமர்நாத் புனித யாத்திரை மேற்கொள்வதற்குப் பதிவு செய்திருக்கின்றனர்.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. மோசமான வானிலை காரணமாக புனித யாத்திரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
பயங்கரவாதி பர்ஹான் வானி நினைவு தினத்தை அனுசரிப்பதற்காக பிரிவினைவாதிகள் கடந்த 8-ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரில் முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தனர். அதையொட்டி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமர்நாத் யாத்திரை ஒருநாள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. சுதந்திரத்துக்கு முன்பாக, காஷ்மீர் சமஸ்தான ஆட்சியின்போது நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தையொட்டி கடைப்பிடிக்கப்படும் தியாகிகள் தினத்தையொட்டி (ஜூலை 13) மற்றொரு முறை அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
கடந்த ஆண்டு மொத்தம் 2.85 லட்சம் யாத்ரீகர்கள் புனித யாத்திரை மேற்கொண்டு பனிலிங்கத்தை தரிசனம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.