மக்களின் எதிர்பார்ப்புக்கு தகுந்தபடி ஆட்சி நடத்துவேன் என கர்நாடக முதல்வராகப் பதவியேற்பதற்கு முன்னதாக எடியூரப்பா தெரிவித்தார்.
முதல்வராகப் பதவியேற்பதற்காக பெங்களூரு டாலர்ஸ் காலனியில் உள்ள தனது இல்லத்தில் இருந்து வெள்ளிக்கிழமை ஆளுநர் மாளிகைக்குச் செல்லும் வழியில் மல்லேஸ்வரத்தில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்துக்குச் சென்ற எடியூரப்பா, கட்சி தொண்டர்களிடையே பேசியது:
மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசைத் தூக்கியெறிந்துவிட்டு, பாஜக ஆட்சி மலர வேண்டும் என்பது கர்நாடக மக்களின் விருப்பமாக இருந்தது. இந்த ஆசை தற்போது நிறைவேறியுள்ளது. கர்நாடகத்தில் ஓராண்டாக நடைபெற்ற கூட்டணி ஆட்சியில் ஊழல் அதிகரித்திருந்தது. வளர்ச்சிப் பணிகள் முழுமையாக முடங்கின. மக்கள் நலன் குறித்து கவலைப்படாமல் ஆட்சி நடத்தினர். தற்போது, அந்த ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது.
பிரதமர் மோடியின் ஆசியுடன் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு என்னை அழைத்து, உடனடியாக ஆளுநரைச் சந்தித்து வெள்ளிக்கிழமையே முதல்வராகப் பதவியேற்றுக் கொள்ள அறிவுறுத்தினார். அதன்படி, ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினேன். முதல்வராகப் பதவியேற்க ஆளுநரும் அனுமதி அளித்துள்ளார். தற்போது நம் மீது பொறுப்பு அதிகரித்துள்ளது. மக்கள் நம் மீது வைத்துள்ள நம்பிக்கை அபாரமாக உள்ளது. மக்களின் எதிர்பார்ப்பு, நம்பிக்கைக்கு தகுந்தபடி ஆட்சி நடத்துவேன்.
கர்நாடகத்தில் விவசாயக் கூலிகள், மீனவர்கள், நெசவாளர்கள், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு மக்களின் நலனுக்காகவும், முன்னேற்றத்துக்காகவும் பாடுபடுவேன். ஆறரைக் கோடி கர்நாடக மக்களின் நம்பிக்கையைக் காப்பாற்றுவேன். கூட்டணி ஆட்சிக்கும் எனது ஆட்சிக்கும் உள்ள வித்தியாசத்தை அடுத்த 3 மாதங்களில் உணரும் வகையில் ஆட்சி நடத்துவேன். எதிர்க்கட்சிகள் மீது பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட மாட்டேன். மாறாக, எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பைப் பெற்று ஒருங்கிணைந்து மக்கள் பணியாற்றுவோம்.
மத்தியில் பிரதமர் மோடியின் நல்லாட்சி நடைபெற்று வருவதால், கர்நாடகத்துக்கு நிதியுதவி அதிகளவில் கிடைக்கும். அந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொள்வேன். முதல்வராகப் பதவியேற்றபிறகு இரவு 7 மணிக்கு அமைச்சரவைக் கூட்டம் நடக்கவிருக்கிறது. மாநில வளர்ச்சிக்கு குறிப்பாக விவசாயிகளின் இன்னல்களைப் போக்கும் திட்டங்களை முடிவு செய்து அறிவிப்பேன்.
கர்நாடக மக்கள் நிம்மதியுடன் வாழ்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பேன். அனைத்து அரசியல் கட்சிகள், மக்களின் எதிர்பார்ப்புக்குத் தகுந்தபடி ஆட்சி நடத்துவேன். எனவே, அனைத்துத் தரப்பினரின் ஒத்துழைப்பையும் எதிர்பார்க்கிறேன் என்றார்.
அப்போது, பாஜக தேசிய பொதுச்செயலாளர் (அமைப்பு) பி.எல்.சந்தோஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.