இந்தியா

மக்களவையில் நிறைவேறியது கம்பெனி சட்ட திருத்த மசோதா

27th Jul 2019 01:16 AM

ADVERTISEMENT


பெரு நிறுவனங்களுக்கான சமூகப் பொறுப்புகளை அதிகரிக்கும் விதமாகக் கொண்டு வரப்பட்டுள்ள கம்பெனிகள் சட்ட திருத்த மசோதா, மக்களவையில் வெள்ளிக்கிழமை நிறைவேறியது. இந்த மசோதா நிறைவேறுவதால் தேசிய கம்பெனிகள் சட்ட தீர்ப்பாயத்தில் வழக்குகளின் எண்ணிக்கை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மக்களவையில் மசோதாவை தாக்கல் செய்து மத்திய நிதி மற்றும் பெரு நிறுவனங்கள் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகையில், பெரு நிறுவனங்களுக்கான சமூக பொறுப்புகளை மேலும் அதிகரிக்கச் செய்யும் வகையிலும், அந்த நிறுவனங்களுக்கான நிர்வாக விதிகளை மேலும் கடுமையானதாக்கும் வகையிலும் வரைவு மசோதா உருவாக்கப்பட்டுள்ளது என்றார். அதைத் தொடர்ந்து மசோதாவை ஆதரித்தும், எதிர்த்தும் விவாதம் நடைபெற்றது.
இந்த வரைவு மசோதாவுக்கு மக்களவை காங்கிரஸ் தலைவர் அதீர் ரஞ்சன் செளதரி, திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. செளகதா ராய் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.  கம்பெனிகள் சட்டம் ஏற்கெனவே பல முறை திருத்தம் செய்யப்பட்டுள்ளதால், தற்போதைய திருத்தம் தேவையில்லை என்று அவர்கள் வாதிட்டனர்.
பிஜு ஜனதா தள எம்.பி. பினாகி மிஸ்ரா கூறுகையில், இந்த வரைவு மசோதாவை அதிகாரிகளே தயாரித்துள்ளனர்; அமைச்சர்கள் ஒப்புதல் அளித்திருக்கிறார்கள் என்றார். திமுக எம்.பி. ஆ.ராசா கூறுகையில், இந்த வரைவு மசோதா, கம்பெனி பதிவாளர்களுக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்கியுள்ளது; இது நல்லதல்ல என்றார். அதைத் தொடர்ந்து நிர்மலா சீதாராமன் பதிலளித்துப் பேசியதாவது:
ஒவ்வொரு பெரு நிறுவனமும் தனது லாபத்தில் 2 சதவீதத்தை சமூகப் பொறுப்பு திட்டங்களுக்கு கட்டாயம் செலவிட வேண்டும் என்று இந்த மசோதா பரிந்துரை செய்கிறது. அந்த திட்டங்களுக்கான தொகையை பெரு நிறுவனங்கள் 4 ஆண்டுகள் செலவு செய்யாவிட்டால், அந்தத் தொகை வேறு வகையில் பிடித்தம் செய்யப்படும். அந்தத் தொகை, பிரதமரின் நிவாரண நிதியில் கூட சேர்க்கப்பட்டு விடும்.
இதுதவிர, கம்பெனி சட்ட விதிகளை பின்பற்றாத நிறுவனங்கள், வர்த்தக நடவடிக்கைகள் மேற்கொள்ளாத நிறுவனங்கள் ஆகியவற்றின் பதிவை ரத்து செய்தற்கு கம்பெனி பதிவாளர்களுக்கு அதிகாரம் வழங்கி சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ளாத 4 லட்சம் போலி நிறுவனங்கள் கண்டறியப்பட்டு, அவற்றின் பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதாவை நிறைவேற்றுவதால், நிறுவனங்கள் எளிதில் வர்த்தகம் செய்வதற்கு உகந்த சூழல் உருவாகும். இதனால், வர்த்தகத் துறை மேலும் வளர்ச்சி பெறும் என்றார் அவர்.
பின்னர், மசோதா மீதான எதிர்ப்பை அதீர் ரஞ்சன் செளதரி திரும்பப் பெற்றுக் கொண்டார். இதையடுத்து மசோதா ஒருமனதாக அவையில் நிறைவேறியது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT