விண்ணில் வெற்றிகரமாகச் செலுத்தப்பட்ட சந்திரயான்-2 விண்கலத்தை, புவி சுற்றுவட்டப் பாதையில் இரண்டாவது முறையாக நிலை உயர்த்தும் பணியை இந்திய விண்வெளி ஆய்வு மைய (இஸ்ரோ) விஞ்ஞானிகள் வெள்ளிக்கிழமை அதிகாலை வெற்றிகரமாக நிகழ்த்தினர்.
தொடர்ந்து இதுபோல மேலும் 4 முறை புவி சுற்றுவட்டப்பாதையில் படிப்படியாக நிலை உயர்த்தப்படும் சந்திரயான்-2, வரும் ஆகஸ்ட் 14-ஆம் தேதி நிலவை நோக்கிய தனது பயணத்தைத் தொடங்கும். பின்னர் நிலவின் சுற்றுவட்டப்பாதையில் சுற்றிவரும் இந்த விண்கலம், செப்டம்பர் 7-ஆம் தேதி நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கி ஆய்வுகளை மேற்கொள்ளும்.
இதில், ஆர்பிட்டர் என்ற அமைப்பு ஓராண்டுக்கு நிலவை சுற்றிவந்தபடியும், லேண்டர் அமைப்பு நிலவில் தரையிறங்கி, தரையிறங்கிய இடத்தில் இருந்தபடியே 14 நாள்களுக்கும், ரோவர் என்ற 6 சக்கரங்களைக் கொண்ட வாகனம் நிலவின் தரைப் பரப்பில் 14 நாள்கள் 500 மீட்டர் வரை நகர்ந்து சென்றும் ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளன.
நிலவின் தென் துருவத்திலும் தண்ணீர் மற்றும் பிற கனிமங்கள் இருப்பது குறித்த ஆய்வை மேற்கொள்வதோடு, நிலவில் மனிதன் வாழ்வதற்கான சாத்தியக்கூறு, பூமி உருவான வரலாற்றை தெரிந்துகொள்வது போன்ற பல்வேறு முயற்சிகளுக்கும் சந்திரயான்-2 ஆய்வுகள் உதவ உள்ளன.
அத்துடன், 48-ஆம் நாளான செப்டம்பர் 7-ஆம் தேதி நிலவின் தென்துருவத்தில் லேண்டர் அமைப்பை திட்டமிட்டபடி மெதுவாக தரையிறக்கிவிட்டால், நிலவின் தென்துருவத்தில் ஆய்வுக்காக விண்கலம் ஒன்றை செலுத்திய முதல் நாடு என்ற பெருமையும், நிலவின் பரப்பளவில் விண்கலம் ஒன்றை மெதுவாகத் தரையிறக்கிய நான்காவது நாடு என்ற பெருமையும் இந்தியாவுக்குக் கிடைக்கும்.
இந்தச் சாதனை, இந்தியாவுடன் விண்வெளித் திட்டங்களில் கூட்டுறவு வைத்திருக்கும் உலக நாடுகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்பதுடன், இந்தியாவுக்கான வர்த்தக ரீதியிலான வாய்ப்புகளும் அதிகரிக்கச் செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மாபெரும் சாதனையைப் புரியவுள்ள சந்திரயான்-2 விண்கலத்தை, இந்தியாவின் மிகுந்த சக்திவாய்ந்த ஜி.எஸ்.எல்.வி. மார்க் 3-எம்1 ராக்கெட் மூலம் கடந்த 22-ஆம் தேதி இஸ்ரோ விண்ணில் வெற்றிகரமாக ஏவி, புவியிலிருந்து குறைந்தபட்சம் 170 கி.மீ. தொலைவையும், அதிகபட்சமாக 45,475 கி.மீ. தொலைவையும் கொண்ட நீள்வட்டப் பாதையில் சுற்றிவரும் வகையில் விண்கலத்தை நிறுத்தியது.
பின்னர், கடந்த புதன்கிழமை விண்கலத்தில் பொருத்தப்பட்டிருக்கும் என்ஜினை விஞ்ஞானிகள் தரைக் கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடி 57 விநாடிகள் இயக்கி புவி சுற்றுவட்டப்பாதையில் 230 கி.மீ. தொலைவையும், அதிகபட்சம் 45,163 கி.மீ. தொலைவையும் கொண்ட நீள்வட்டப் பாதைக்கு நிலை உயர்த்தினர்.
இப்போது இரண்டாவது முறையாக புவி சுற்றுப்பாதையில் திட்டமிட்டபடி, குறைந்தபட்சம் 251 கி.மீ. தொலைவையும், அதிகபட்சமாக 54,829 கி.மீ. தொலைவையும் கொண்ட நீள்வட்டப் பாதைக்கு விண்கலத்தை விஞ்ஞானிகள் வெற்றிகரமாக வெள்ளிக்கிழமை அதிகாலை 1.08 மணிக்கு நிலை உயர்த்தினர்.
விண்கலத்தின் செயல்பாடுகள் சிறப்பாக இருப்பதாகவும், மூன்றாம் நிலை உயர்வு வருகிற திங்கள்கிழமை (ஜூலை 29) பிற்பகல் 2.30 மணிக்கு மேற்கொள்ளப்படும் எனவும் இஸ்ரோ அறிவித்துள்ளது.