வெறுப்பின் பேரில் அரங்கேறும் கும்பல் கொலைகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மோடிக்கு பிரபலங்கள் அனுப்பிய கடிதத்துக்கு பதிலடியாக பல்வேறு துறைகளைச் சேர்ந்த 61 வேறு பிரபலங்கள் அவருக்கு ஆதரவாக கடிதம் அனுப்பியுள்ளனர்.
நாட்டில் கும்பல் கொலை அதிகரித்து வருகிறது. ஜெய்ஸ்ரீராம் என்ற கோஷத்தை எழுப்பாத சிறுபான்மையினர் தாக்கப்பட்டு வருவது தொடர் கதையாகி வருகிறது. இதைத் தடுப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். நாடாளுமன்றத்தில் மட்டும் இதை விமர்சித்து விட்டு நடவடிக்கை எடுக்காமல் விட்டுவிடக் கூடாது.
கும்பல் கொலை செய்பவர்களுக்கு எதிராக பிணையில் வெளிவர இயலாத வழக்கை பதிவு செய்து உடனடியாக தண்டிக்க வேண்டும் என்று கடந்த சில தினங்களுக்கு முன்பு, திரைப்பட இயக்குநர்கள், திரை கலைஞர்கள், எழுத்தாளர்கள், சமூக சேவகர்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பிரமுகர்கள் கையொப்பமிட்ட கடிதம் பிரதமர் மோடிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பிரபல இயக்குநர்கள் மணி ரத்னம், அனுராக் காஷ்யப் உள்ளிட்டோர் அதில் கையொப்பமிட்டிருந்தனர்.
இந்நிலையில், நடிகை கங்கனா ரனாவத், பாடலாசிரியர் பிரசூன் ஜோஷி, பிரபல இயக்குநர்கள் மதூர் பண்டார்கர், விவேக் அக்னிஹோத்ரி, டாக்டர் ஷியாமா பிரசாத் முகர்ஜி ஆராய்ச்சி அமைப்பின் இயக்குநர் அனிர்பன் கங்குலி உள்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்த 61 பிரபலங்கள் பிரதமருக்கும், மத்திய அரசுக்கும் ஆதரவாக கடிதம் அனுப்பியுள்ளனர்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
பழங்குடியினரும், பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியவர்களும் நக்ஸல் தாக்குதலுக்கு பலியாகும்போது எழுத்தாளர்களான நீங்கள் அமைதி காக்கிறீர்கள். காஷ்மீரில் பள்ளிகளை எரிப்போம் என பிரிவினைவாதிகள் அறிக்கை வெளியிடும்போதும், காஷ்மீரை இந்தியாவிலிருந்து பிரிக்க வேண்டும் என்று முறையிடும்போது, பல்வேறு பல்கலைக்கழக வளாகங்களில் பயங்கரவாதத்துக்கு ஆதரவாக குரலெழுப்பப்படும்போதும் அமைதி காக்கப்படுகிறது.
முத்தலாக் நடைமுறையை ஒழிக்க பாடுபடும் முஸ்லிம் பெண்களுக்கும், காஷ்மீரிலிருந்து வெளியேற்றப்பட்ட பண்டிட்டுகளுக்கும் ஆதரவாக இல்லாமல், கும்பல் கொலைகளைத் தடுக்குமாறு வலியுறுத்தி அனுப்பப்பட்ட கடிதம் இந்தியாவை சர்வதேச அரங்கில் களங்கப்படுத்துவது போன்றதாகும். பிரதமர் மோடியின் அயராத உழைப்பையும் எதிர்மறையாக காண்பிக்க வழிவகை செய்கிறது. கும்பல் கொலைக்கு பிரதமர் மோடி எதிர்ப்பையும், கண்டனத்தையும் பதிவு செய்துவிட்டார்.
இனி, சம்பந்தப்பட்ட மாநில அரசுகள்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊடக வெளிச்சத்துக்காக இதுபோன்ற கடிதம் அனுப்பாமல், கும்பல் கொலைகளைத் தவிர்க்கவும், கட்டுப்படுத்தவும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.