பள்ளிச் சிறார்களை நரபலி கொடுத்ததாகத் தொடுக்கப்பட்ட வழக்கில், சாமியார் ஆசாராம் பாபுவையும், அவரது மகன் நாராயண் சாயியையும் நீதிபதி டி.கே.திரிவேதி ஆணையம் விடுவித்து நற்சான்று அளித்துள்ளது.
குஜராத் மாநிலம், ஆமதாபாதில் சபர்மதி ஆற்றங்கரை அருகே சாமியார் ஆசாராம் பாபு ஆசிரமம் நடத்தி வந்தார். அந்த ஆசிரம வளாகத்தில், உறைவிடப்பள்ளி செயல்பட்டு வந்தது. அந்தப் பள்ளி விடுதியில் தங்கிப் படித்து வந்த தீபேஷ் வகேலா(10), அவரது உறவுக்கார பையன் அபிஷேக் வகேலா(11) ஆகிய இருவரும் கடந்த 2008-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 3-ஆம் தேதி மாயமானார்கள். இரண்டு நாள்கள் தேடலுக்குப் பிறகு, அவர்களின் உடல்கள், சபர்மதி ஆற்றங்கரையில் இருந்து கண்டெடுக்கப்பட்டது.
அந்தச் சிறுவர்களை சாமியார் ஆசாராம் பாபு நரபலி கொடுத்து விட்டதாக, அவர்களின் பெற்றோர் குற்றம்சாட்டினர்.
இதையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து விசாரிப்பதற்கு நீதிபதி டி.கே.திரிவேதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.
அந்த ஆணையம் தனது விசாரணை அறிக்கையை குஜராத் அரசிடம் கடந்த 2013-ஆம் ஆண்டு சமர்ப்பித்தது. அந்த அறிக்கை, குஜராத் சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.
அதில், சாமியார் ஆசாராம் பாபு, அவரது மகன் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிப்பதற்கான ஆதாரங்கள் எதுவுமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
மாணவர்கள் இருவரும் பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்ததால், அவர்களைப் பத்திரமாக கவனித்துக் கொள்ள வேண்டிய கடமை விடுதி நிர்வாகத்துக்கும், ஆசிரம நிர்வாகத்துக்கும் உள்ளது. எனவே, விசாரணைக்குழுவுக்கு கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், பள்ளி விடுதி நிர்வாகத்தின் அலட்சியமே மாணவர்களின் உயிரிழப்புக்கு காரணமாகத் தெரிகிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாகத் தொடுக்கப்பட்ட வழக்கில் கைதான சாமியார் ஆசாராம் பாபு தற்போது சிறையில் உள்ளார்.