இந்தியா

கும்பல் கொலை சம்பவங்கள்: 10 மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

27th Jul 2019 02:49 AM

ADVERTISEMENT


கும்பலாக சேர்ந்து அடித்துக் கொலை செய்யும் சம்வங்களைத் தடுப்பதற்காக உச்சநீதிமன்றம் கூறிய வழிகாட்டுதல்களை பின்பற்றாத 10 மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது தொடர்பாக மத்திய அரசும் உரிய பதிலை அளிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு உத்தரவிட்டுள்ளது.
நாடெங்கிலும் பல மாநிலங்களில் அடுத்தடுத்து கும்பல் கொலை சம்பவங்களும், வன்முறைகளும் நிகழ்ந்ததைத் தொடர்ந்து, அவற்றைத் தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு உத்தரவிட்டது. அத்துடன், சிறப்பு காவல்துறை அதிகாரியை நியமிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட சில வழிகாட்டுதல்களையும் அளித்தது. இருந்தபோதிலும், பல மாநிலங்களில் கும்பல் கொலைகளும், தாக்குதல்களும் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன. முக்கியமாக, வட மாநிலங்களில் பசுப் பாதுகாப்பு என்ற பெயரில் சிலர் கும்பலாக சேர்ந்து வன்முறையில் ஈடுபடுவதுடன், பிடிபடும் நபர்களை அடித்துக் கொலை செய்கின்றனர்.
இந்நிலையில், இது போன்ற சம்பவங்களைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து உச்சநீதிமன்றம் வெளியிட்ட வழிகாட்டுதல்கள் முறையாகப் பின்பற்றப்படவில்லையென்று இந்திய ஊழல் ஒழிப்பு மையம் என்ற அமைப்பு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. அதில், கடந்த ஆண்டைவிட இப்போது கும்பல் தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்துவிட்டன. உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை மத்திய, மாநில அரசுகள் முறைப்படி பின்பற்றாததே இதற்குக் காரணம் என்றும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிமன்ற உத்தரவை முறையாகப் பின்பற்றாத உத்தரப் பிரதேசம், ஜம்மு-காஷ்மீர், ஜார்க்கண்ட், ஆந்திரம், குஜராத், ராஜஸ்தான், பிகார், அஸ்ஸாம், மத்தியப் பிரதேசம், தில்லி ஆகிய மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், மத்திய அரசிடமும் இது தொடர்பாக விளக்கம் கோரப்பட்டுள்ளது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT