இந்தியா

குஜராத்: தீ விபத்தில் பெண் பலி; 6 பேர் காயம்

27th Jul 2019 01:12 AM

ADVERTISEMENT


குஜராத் மாநிலம், ஆமதாபாதில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் பெண் ஒருவர் பலியானார். 6 பேர் காயமடைந்தனர்.
இதுதொடர்பாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்ததாவது:
ஆமதாபாதின் கோதா-ஜகத்பூர் சாலையில் உள்ள 11 மாடி குடியிருப்பில், 5-ஆவது தளத்தில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதைக் கண்டவர்கள் தீயணைப்புத் துறைக்கு தகவல் அளித்ததுடன், 5-ஆவது தளத்தில் இருந்த 60 வயது மூதாட்டியையும் காப்பாற்றியுள்ளனர்.  இதனிடையே, 6-ஆவது தளம் வரை தீ பரவியது. இதனால் அடுத்தடுத்த தளங்களில்  புகை மூட்டம் ஏற்பட்டதையடுத்து அங்கிருந்தவர்கள் மூச்சு விட திணறினர். 
சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புப் படை வீரர்கள், நீண்ட நேர போராட்டத்துக்குப் பின் தீயை அணைத்தனர்.
இந்த விபத்தில் 5-ஆவது தளத்தில் குடியிருந்த அஞ்சனா படேல் என்ற பெண்ணுக்கு  தீக்காயம் ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தீக்காயமடைந்த 6 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். புகைமூட்டத்தில் சிக்கியிருந்த 28 பேரை தீயணைப்புத் துறையினர் பாதுகாப்பாக மீட்டனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT